Vikatan Digital Awards 2025 UNCUT: "Vijay Varadharaj-ன் பாராட்டு ரொம்ப முக்கியமா...
கள்ளக்குறிச்சி அரசராம்பட்டு : கவலைக்கிடமான நிலையில் `நூறு நாள் வேலை திட்டம்’ - தீர்வு கிடைக்குமா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து கிராமவாசிகளுக்கு குறைந்தபட்ச அளவிலான ஊதியத்தை இத்திட்டம் வகுக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் வசிக்கும் குடும்ப பெண்கள், ஆண்கள், வயதானோர் என்று தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் விதமாக இந்த பணியில் சேர்ந்து வேலை செய்கிறார்கள்.
இப்படி இருக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த அரசராம்பட்டு கிராம மக்களுக்கு இந்த நூறு நாள் வேலையானது முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊர் மக்களிடம் கேட்ட போது, “என்ன சொல்ல சொல்றிங்க! வெளியூருக்கு போய் வேல பாக்குற உடம்பா இது! ஏதோ இந்த ஊருலையே சொல்ற வேலைய பாத்துட்டு கொடுக்குற பணத்த வச்சி வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்க! இப்ப இந்த வேலையும் இல்லனு சொன்னா, எங்க கண்ணு போறத்து?” என்று கண்கலங்கினார் முதியவர்.
“சும்மா ஒன்னும் இந்த வேலை நடக்குறத்து இல்லைங்க, ஒவ்வொரு ஊருலையும் இருக்குற ஏரி, குளம், குட்டை, ஓடை, ரோடு அப்படி என்னென்ன இருக்கிறதோ அதெல்லாம் சுத்தமா இருக்குன்னா அதுக்கு காரணம் யாரு? நாங்கதான! இப்ப அது எதுவுமே யோசிக்காம வேலை இல்லனு சொன்னா என்ன பன்றத்து நாங்க! எங்களுக்கு ஒரு முடிவு தெரியனும் தம்பி” என்கிறார்கள்.
“நீயே யோசிச்சி பாருப்பா! நூறு நாள் வேலை அப்படின்றத்து வருசத்துக்கே மொத்தம் நூறு நாள்தான்! அதுல மாசத்துக்கு ஒரு ஏழு வாட்டி இல்லனா எட்டு வாட்டிதா வேலை செய்வோம். ஒரு நாளைக்கு 250 ரூவா தருவாங்க! மாசத்துக்கு 2000 ரூவா! இந்த பணம்தா இங்க இருக்குறவங்க சிலபேரு இன்னமும் உசுரோட இருக்காங்கனா அதுக்கு காரணம்!
அதோ, அவருக்கு வயசு 56, இவுங்களுக்கு 60 தாண்டிடுச்சி, சிலபேரு 70 வயசு தாண்டியும் இருக்காங்க! இங்க இருக்குறவங்க சிலபேரு ஒன்டிகட்டதா! ஒரு வயசுக்கு மேல யார்கிட்டயும் போயி கையேந்த முடியாதுப்பா, ஏதோ இதுல வர பணத்த வச்சி பொழப்பு ஓடுதுனா, அதையும் இப்படி நிறுத்திட்டாங்கனா என்ன பண்ண முடியும்! நீயே சொல்லு” என்று அவர் பேசியது உண்மையின் வருத்தத்தை தெரிவித்தது.

கடந்த நான்கு மாதங்களாக இவர்களது இந்த பிரச்னைக்கு செவி சாய்க்காத அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 27.11.2025 அன்று காலை 8 மணியளவில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டத்து குறிப்பிடத்தக்கது.
“ எங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்” என்று ஊருக்குள் வரும் அரசு பேருந்தை முடக்கி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மறியல் மூன்று மணிநேரம் நீடித்தது. விரியூர் ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக ஊர் தலைவரிடம் கேட்டபோது , ‘ எது கேட்டாலும் அரசாங்கத்திடம் இருந்து பணம் வரல, அதனாலத்தான் வேலை இல்லனு சொல்றாங்கப்பா’ என்றார்.
இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 450 கிராமவாசிகள் இந்த நூறுநாள் வேலையில் பணிபுரிகிறார்கள். இப்படியிருக்க ‘பக்கத்து கிராமங்களில் எல்லாம் வேலை நடந்துட்டுதாப்பா இருக்கு! இங்க மட்டும் தான் இப்படி பன்றாங்க’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, முந்தைய போராட்டத்தின் போது ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், எல்லோருக்கும் வேலை தருவதாக கூறி கூட்டத்தை கலைத்தபின், மீண்டும் ‘ வேலையெல்லாம் ஏதும் இல்லை’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘நூறு நாள் வேலை’ பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராயினும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கொண்டு பணிபுரியலாம். அப்படியிருக்க ‘தம் பிள்ளைகளை சேர்ப்போம் காசு வரும்’ என்று யாரும் யோசிக்கவில்லை.
கணவர்களை இழந்த பெண்கள், வயதானவர், கேட்பார் இல்லாதவர்கள் தான் இதில் அதிகம் பணிபுரிகிறார்கள். அவர்களே இதில் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.
கிராமப்புறங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெரிய சம்பளம் என்று ஏதும் எதிர்பார்ப்பதில்லை. அதிகாரிகள் இதுதான், இவ்வளவுதான் என்று சொல்வதை கேட்டு தங்களின் வாழ்வை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதிகாரிகளின் இந்த வேலை முடக்கமும், இத்தனை மாத கவன குறைவும் கிராமவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் கோரிக்கை எல்லாம் ஒன்று தான்.
“நாங்கள் ஒன்றும் சம்பளத்தையோ, வேலை நாட்களையோ சேர்த்து கேட்கவில்லை, எங்களுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையைத்தான் கேட்கிறோம்! இதற்கு உடனடி தீர்வு வேண்டும்” என்பது தான் அது.
இதுதொடர்ந்து ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் அவர்களிடம் பேசிய போது, ‘அந்த கிராமத்தில் நூறு நாட்களை தாண்டி 108 நாட்களாக வேலை நடந்துள்ளது. இதன் காரணமாகத்தான் வேலைகளை முடக்கினோம். தற்சயமயம் மீண்டும் அனைவருக்கும் முன்போல் வேலைய அமைத்து தர வேண்டிய ஏற்பாடுகள் முடிந்துவிட்டது. நாளை(4.12.2025) அனைவருக்கும் வேலைகள் வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
















