T20 WC: `இந்திய அணி ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டது' பாகிஸ்தான் முன்...
சென்னை: மகளுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை தற்கொலை; அடுத்த நொடியில் மகள் எடுத்த விபரீத முடிவு
சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
இளைய மகள் பாக்கியா (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால் கிருஷ்ணகுமார், கடும் மனவருத்தத்தில் இருந்தார். கடந்த 7 -ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணகுமார் பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் கிருஷ்ணகுமாரைத் தேடினர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

8-ம் தேதி கிருஷ்ணர் குமாரின் மனைவி வீட்டிற்குப் பின்னால் உள்ள கிணறு பகுதிக்குச் சென்றபோது அங்கு கணவரின் செல்போன் இருந்தது. உடனே மகளிடம் விவரத்தைக் கூறினார். பின்னர் கிணற்றை அவர்கள் எட்டிப்பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி சடலமாக மிதந்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் வடபழனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வருவதற்குள் பாக்கியா அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். திடீரென அம்மாவை ஒர் அறைக்குள் வைத்து பூட்டிய பாக்கியா, சமையலறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறைக்குள் இருந்த படி கிருஷ்ணகுமாரின் மனைவி சத்தம் போட்டார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டனர். பாக்கியாவைத் தேடி பார்த்தபோது அவர் சமையலறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பாக்கியாவின் சடலத்தையும் வடபழனி போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் 30 வயதாகியும் மகளுக்குத் திருமணமாகாத விரக்தியில் கிருஷ்ணகுமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அந்த மனவேதனையில் மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரிந்தது. அப்பா, மகள் என அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.














