செய்திகள் :

`கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்னையா?' உங்கள் ராசிக்கு ஜோதிட நூல்கள் சொல்லும் எளிய பரிகாரங்கள்!

post image

கடனும் நோயும் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியானது என்பார்கள் பெரியோர்கள். ஆனால், தற்போது கடன் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கல்விக்கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என்று பல்வேறு விதமாக இக்காலத்தில் கடன் வாங்கும் சூழல் அதிகரித்துவிட்டது.

க்டன் பரிகாரங்கள்

இந்த நிலையில், கடன் பிரச்னையால் வாழ்வே சுமையாகும் நிலைக்கு ஆளாகிவிட்ட அன்பர்கள் நிறைய. அவர்களுக்குத் தீர்வாக, கடன் பிரச்னையிலிருந்து விமோசனம் பெறும் வகையில் எளிய பரிகாரங்களைச் செய்யச்சொல்லி வழிகாட்டுகின்றன ஜோதிட நூல்கள். அவ்வகையில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான கடன் நிவாரணப் பரிகார விளக்கங்கள் இங்கே உங்களுக்காக!

கடன் தீர்க்கும் வழிபாடுகள்!

மேஷம்:

இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி காலம் தொடங்கியுள்ளது. விரய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் சனி பகவான். ஆகவே, எதிலும் அகலக்கால் வைக்கக் கூடாது. அறிமுகம் இல்லாத துறைகளில் - தொழிலில் இறங்குவதாலும் நஷ்டமும் கடன்களும் உண்டாகலாம். மட்டுமன்றி, புதிதாகக் கடன் வாங்குவதும் கூடாது.

மேலும், வேறுபல நிலைகளில் ஏற்கெனவே கடன் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தால், செவ்வாய்க்கிழமைகளில் முருகவழிபாடு செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். இவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் வேல்மாறல் பாராயணம் செய்வது சிறப்பு. அன்று ஆலயங்களுக்கு நேரில் சென்று முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டு வரவேண்டும். கோயிலில் நவகிரகச் செவ்வாய்க்கு தீபமேற்றி வழிபடுவதால் கூடுதல் பலன் உண்டு.

வேல்மாறல் பாராயணம்

ரிஷபம்:

இந்த ராசியினருக்கு அதிபதி சுக்ரன். அவரே 6-ம் இடத்துக்கும் அதிபதியாகிறார். ஆகவே, கடன் பாதிப்புகள் இருந்தாலும் அதிக சுமையாக இருக்காது எனலாம். எனினும், ஒருசில நேரங்களில் தவணைத் தொகையைக் கட்டுவதற்கும் முடியாத நிலை ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்புகள் நீங்கிட, மகாவிஷ்ணுவுக்குத் துளசி சார்த்தி வணங்கலாம். இயன்றால் ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்வது விசேஷம்.

மிதுனம்:

இவர்களுக்கு ராசியாதிபதி புதன். இவர்களில் பலருக்கும் ஏதேனும் ஒருவகையில் கல்வி சார்ந்து கடன் பிரச்னை கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுபச்செலவுகளாலும் கடன் ஏற்பட்டிருக்கலாம். எது எப்படியோ, நீண்ட கால கடன்கள் அடைபடவும், குறிப்பிட்ட காலத்துக்குள் கடன் தொகையைக் கொடுத்தாக வேண்டிய நிலையில் இருப்பவர்களும், சதுர்த்தி தினங்களில் பிள்ளையாரை வழிபடுவது நல்லது. அவல் - பொரி, அச்சுவெல்லம் சமர்ப்பித்து வணங்கலாம். எறும்புகளுக்குத் தீனி இடுவதன் மூலம் கடன் பிரச்னைகள் விலகும். மேலும், புதன் கிழமைகளில் பள்ளிகொண்ட பெருமாளைத் தரிசித்து வரலாம்.

கடகம்:

இவர்களுக்கு 6-ம் வீடு தனுசு. அந்த வீட்டுக்கு உரியவர் குருபகவான். இவர் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த நிலையில் மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவது, வாக்குறுதி கொடுப்பது கூடாது. மற்றவர்களின் கடனை இவர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படலாம்; கவனம் தேவை. பழைய கடன் பிரச்னைகள் இருப்பின், குலதெய்வத்துக்கு தினமும் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிவாலயத்தில் அருளும் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுங்கள். கடன் பிரச்னைகள் விலகும்; பண வரவு உண்டாகும்.

சிம்மம்:

இவர்களுக்கு 6-ம் இடம் மகரம். அதன் அதிபதியான சனி பகவான், 8-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். மேலும் ராசியிலேயே கேது பகவான் அமர்ந்திருக்கிறார். இந்த நிலை கடும் அழுத்தத்தை உண்டாக்கலாம். சட்டரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. ஒருசிலருக்குப் பணம் இருந்தும், அதை எடுத்துச் செலவு செய்ய முடியாத சூழல் உண்டாகலாம். இந்த ராசியினர் பிள்ளையாரைச் சரண் அடைவது மிகவும் நல்லது. 11 தேங்காய்களை மாலையாகக் கட்டி, அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று சமர்ப்பித்து 5 தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டால், பணப் பிரச்னைகள் மற்றும் கடன் பாதிப்புகள் விலகும்.

கன்னி:

இந்த ராசியினருக்கு கெளரவத்துக்காக கடன் வாங்கும் நிலை உருவாகும். விரயச் செலவுகள் வந்து சேரும். பெரும்பாலும் இவர்கள், நடப்புச் சூழலில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதை அறிந்து செயல்படவேண்டும். சனிப் பீரித்தி செய்வது நல்லது. குறிப்பாக சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டு வாருங்கள்; பிரச்னைகள் விலகும்.

கடன் தீர்க்கும் நவகிரக தரிசனம்

துலாம்:

தற்போதைய நிலைப்படி இந்த ராசியினருக்குச் சனி சாதகமாகவே சஞ்சரிக்கிறார். அதேபோல் 6-ம் இடத்து அதிபதியான குருபகவானும் ஓரளவு சாதக பலன்களையே அளிப்பார். ஆகவே, இவர்களுக்கு நடப்பு காலம் கடன்கள் அடைபடும் காலமாக இருக்கும். எனினும் சிறியளவில் சிரமங்கள் உண்டாகும். உறவுகளுக்கு உடல்நிலை பாதிப்புகள், பயணங்கள் போன்றவற்றால் செலவுகள் வரும்; சமாளித்து மீள்வார்கள். ஒருவேளை கடன் வாங்கும் சூழல் உண்டானாலும் அளவுடன் வாங்குவது நல்லது. வியாழன்று தட்சிணாமூர்த்தி பகவானை வணங்கி, கொண்டைக்கடலை தானம் செய்யுங்கள்; பணப் பிரச்னைகள் தீரும்.

விருச்சிகம்:

இவர்களுக்கு ராசிபதி செவ்வாய்; 6-ம் இடத்து அதிபதியும் அவரே. ஆக எதன் மூலம் வருமானம் வருகிறதோ, அதன் மூலமாகவே கடனும் உண்டாகும். தொழில் மூலம் வருமானம் வருகிறது எனில், அந்தத் தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்க நேரிடலாம். அதேபோல், சிற்சில தேவையில்லாத வீண் செலவுகளாலும் கடனுக்கு ஆளாகலாம். திட்டமிட்டுச் செயல்பட் டால் கடனைத் தவிர்க்க முடியும். ஜென்ம ஜாதகப்படியான தோஷங்களால் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நிலை எனில், அம்பாளைச் சரணடையுங்கள். குறிப்பாக துர்கை அம்மனுக்குச் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு. முடிந்தால் உழவாரப் பணிகளில் கலந்துகொள்ளுங்கள்; வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு:

இந்த ராசியினருக்கு 6-ம் இடம் சுக்ரபகவானுக்கு உரியது. நடப்புக் காலத்தில் கடன்கள் அடைபட வாய்ப்பு உண்டு. எனினும் 4-ம் இடத்தில் உள்ள சனி பகவான் செலவுகளைக் கொடுப்பார். பழைய வீடு, தொழில் ஸ்தானங்களைப் பராமரித்தல், பூர்விகச் சொத்துக்கள் வழியில் கடன்கள் உண்டாகலாம். இவர்கள் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பெருமாள் கோயில்களுக்குச் என்று தாயாரை வணங்கி வருவதால் செல்வ விருத்தி உண்டாகும்.

மகரம்:

இவர்களுக்கு ராசியிலிருந்து 7-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். ராகு, கேதுக்களின் சஞ்சாரமும் சாதகம் இல்லை. இவர்கள், உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். நவகிரக சந்நிதியில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். இயன்றால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வழிபடுவது விசேஷம்.

கும்பம்:

இந்த ராசியினருக்கு 2-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். அவரின் 8-ம்பார்வை நிலை சாதகம் இல்லை. ஆகவே, சிற்சில பாதிப்புகள் உண்டாகும். முதலீடுகளீல் கவனம் தேவை. பேராசையால் அனுபவம் இல்லாத விஷயங்களில் இறங்கக் கூடாது. மீறினால் இழப்புகள் விரயங்கள் உண்டாகலாம். இந்த ராசியினர் சோமவாரமாகிய திங்கள் கிழமைகளில், வில்வம் சமர்ப்பித்து சிவ தரிசனம் செய்வது நல்லது.

மீனம்:

இவர்களுக்கு ஜென்மச் சனி நடைபெற்று வருகிறது. கடன் வாங்கும் விஷயத்தில் அதீத கவனம் தேவை. வாக்கு கொடுப்பது, மற்றவருக்காக ஜாமீன் கொடுப்பது கூடவே கூடாது. சிலருக்குப் பழைய கடன்களால், இப்போது சில பிரச்னைகள் தலைதூக்கலாம். வட்டிக்கு வட்டி சேரும் நிலை உண்டாக வாய்ப்பு உண்டு. எனவே வங்கி லோன், நகைக்கடன் போன்ற விஷயங்களில் அலட்சியம் கூடாது. முன்னெச்சரிக்கையோடு இருப்பது சிறப்பு. இவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். பெளர்ணமி நாளில் அபிராமி அந்தாதி படித்து, சர்க்க ரைப் பொங்கல் நிவேதித்து, தாமரை மலர் சமர்ப்பித்து அம்பாளை வழிபடுவதன் மூலம் பாதிப்புகளில் இருந்து மீளலாம்.

`பணவரவை ஈர்க்கும் 11 எளிய பரிகாரங்கள்!' - இன்று வரலட்சுமி விரத நாளில் தொடங்குவது விசேஷம்!

இன்று வரலட்சுமி விரதம். ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையாகிய இந்த நாள், மிகவும் மகத்துவம் பொருந்தியது என்கின்றன ஞானநூல்கள். இன்று கலசம் ஸ்தாபித்து மகாலட்சுமியை முறைப்படி விரதம் இருந்... மேலும் பார்க்க

ஆடிக்கிருத்திகையில் முருகப் பெருமானை இப்படி வழிபாடு செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

முருகப் பெருமானுக்கு மூன்று வழிபாடுகள் மிகவும் விசேஷம். ஒன்று நாள் வழிபாடு, இரண்டாவது திதி வழிபாடு, மூன்றாவது நட்சத்திர வழிபாடு. நாள்களில் செவ்வாய்க்கிழமை முருக வழிபாட்டுக்கு ஏற்றது. திதிகளில் சஷ்டி. ... மேலும் பார்க்க