செய்திகள் :

காதல் : ஆணவச் சமூகம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 11

post image

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!

18 வயதே ஆன ஒரு பள்ளிக்கூடத்து மாணவி ஐஸ்வர்யாவுக்கும், 20 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண மெக்கானிக் பையனான முருகனுக்கும் இடையே காதல். இரண்டு பேரும் ஊரை விட்டு ஓடிப்போகிறார்கள். பரபரப்பான இந்த இடத்தில் தொடங்குகிறது இந்தப் படத்தில் கதை.

அதுவரை காதல் செய்வதற்கும், கல்யாணம் செய்துகொள்ளுவதற்கும் ஏற்படக்கூடிய விதம்விதமான பிரச்சினைகள்தான் நம் சினிமாக்களில் பேசப்பட்டிருக்கின்றன. ஓடிப்போன பின்பு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நம் கதைகள் பேசியதில்லை. அந்த வயதில் ஏற்படும் காதல் என்பது, எதிர் பாலின ஈர்ப்பு அல்லது வயதுக்கேயுரிய மயக்கமாகவே இருக்கும் என்றாலும், உன்னதமான காதல் எல்லாமேகூட இப்படி ஏதாவது ஓர் உணர்வில்தானே தொடங்கியாக வேண்டும். அது அந்த வயதுக்கே உரிய இயல்புதானே!

பின் விளைவுகளை அறியாத மயக்கத்தில் தைரியமாக அவர்கள் ஓடிப்போகிறார்கள்! ஆனால், அடுத்த நேர உணவுக்கும், தங்குமிடத்துக்கும் கூட அவர்களிடம் எந்தத் திட்டமிடலும் இல்லை. அவர்களை விடவும் பரிதாபமான ஒரு நிலையிலிருக்கும் நண்பனின் உதவியை நாடிப் போகிறார்கள்.

Kadhal Movie
Kadhal Movie

இன்னொரு புறம், அந்தப் பெண்ணின் குடும்பம், அவர்களைக் கொலைவெறியோடு தேடிக்கொண்டிருக்கிறது. அவர்களிடம் இருப்பது அப்பட்டமான சாதிய, பொருளாதார, வர்க்க வேறுபாடுகள் ஊறிப்போயிருக்கும் தமிழ்நாட்டின் கிராமப்புற மனநிலை. ஆணவக்கொலை செய்வதற்கான அத்தனை பொருத்தமும், அந்தக் குடும்பத்தின் ஆண்களிடம் தென்படுகிறது. இவர்களிடம் சிக்கி இந்தப் பிள்ளைகள் என்னவாகப்போகிறதோ எனும் பதைபதைப்பை ஏற்படுகிறது. அதன் பின்னர் என்னவாகிறது என்பது முடிவு.

இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பவர் பாலாஜி சக்திவேல். அவர் மிகச்சில படங்களையே இயக்கியிருக்கிறார். அவற்றுள் இது மிகவும் முக்கியமான ஒரு படமாகும். இந்தப்படம் உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த மிக அரிதான தமிழ்ப்படங்களுள் ஒன்று.

இந்தப் படத்தின் பல காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. காதலில் விழுந்த முருகன் ஒருநாள் தூக்கத்தில் உளறுகிறான். பெரிய முருகபக்தையான அவனது அம்மா, அப்போது அவனை எழுப்பி, ‘மது அருந்தியிருக்கிறாயா, கஞ்சா புகைத்திருக்கிறாயா?’ என்று பதற்றத்தோடும், பயத்தோடும் விசாரிப்பார். எங்கே மதுவாலும், போதையாலும் உயிரையே விட்டுவிட்ட தன் கணவனைப்போலவே பையனும் வந்துவிடுவானோ எனும் பயம் அது.

ஐஸ்வர்யாவின் பூப்புனித நீராட்டுவிழா பத்திரிகை ஒரு காட்சியில் காட்டப்படும். அதில் செல்வி பேச்சியம்மாள் (எ) ஐஸ்வர்யா என்று அச்சிடப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் 1980களுக்கு முன்பாக பேச்சியம்மாள் என்றே பெயர்கள் வைக்கப்பட்டன. 2000க்குப் பிறகு தனித்து ஐஸ்வர்யா என்று பெயர்கள் வைக்கப்படலாயின. ஆனால், இடைப்பட்ட பத்திருபது வருடங்கள் குடும்பத்துக்காக ஒரு பெயர் பேச்சியம்மாள் என்றும், கூப்பிட மாடர்னாக ஒரு பெயர் ஐஸ்வர்யா என்றும் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. சில தலைமுறையினர் இப்படி இரட்டைப் பெயர்களைத் தாங்கிக் கொண்டிருந்தனர்.

கதாபாத்திரங்களில், ஐஸ்வர்யாவின் அப்பா, அம்மாக்கள், பாட்டி, கரட்டாண்டி என்று பல தனித்துவமான பாத்திரங்கள் இருந்தாலும், ஐஸ்வர்யாவின் சித்தப்பாவாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடித்திருக்கிறார். அவர் ஒரு புரபஷனல் நடிகராக இருக்க வாய்ப்பில்லை. அதற்கு முன்பும், பின்பும் அவரை நாம் படங்களில் பார்க்க இயலவில்லை. அவருக்கு நிஜமாகவே இடது கை இல்லை. இருப்பினும் ஒற்றைக்கையாலேயே சிகரெட்டைப் பற்றவைத்துப் பிடிக்கிறார். ஒற்றைக்கையால் புல்லட் ஓட்டுகிறார்.

உள்ளுக்குள் சாதிய வன்மமும், வன்முறையும் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் வெளியே எல்லோரிடமும் பக்குவமாகப் பேசி காரியம் சாதிக்கிறார். ஐஸ்வர்யாவின் தோழி சத்யாவிடம் விசாரிக்கும் போதும், சென்னையில் முருகனின் நண்பன் ஸ்டீபனிடம் விசாரிக்கும் போதும் அத்தனைத் தன்மையாகவும், பொறுமையாகவும் விசாரிக்கிறார்.

அவர் மீது இரக்கப்பட்டே அவர்கள் உண்மையைச் சொல்லிவிடுகிறார்கள். அண்ணனும் தம்பியுமாய், ஊருக்குள் ஒயின்ஷாப்புகள் நடத்திக் கொண்டு, கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டு பவுசாகச் சுற்றிவருபவர்கள். அப்பேர்ப்பட்டவரின் கை போனதுக்கும், முகத்தில் அப்படியொரு வெட்டுத்தழும்பு இருப்பதற்கும் வேறென்ன காரணம் இருக்கமுடியும்? ஆனால், அதெல்லாமே சொல்லப்படாத கதைகள்!

ஒரு கதையில் நேரடியாக சொல்லப்படும் செய்திகளை விடவும், சொல்லப்படாத விசயங்களையும் நாம் உணர்ந்து ரசிக்கும்படியான திரைக்கதை அமைப்பே வலுவானது மற்றும் சிறப்பானது. அப்படித்தான் முருகனும், கரட்டாண்டியும் வேலை செய்யும் டூவீலர் ஒர்க்‌ஷாப்பின் முதலாளி பாத்திரமும். ஒரே ஒரு காட்சியில்தான் வருகிறது. ஆனால், அதற்கென்றே நம்மால் ஓர் அழகான கதையை கற்பனை செய்துகொள்ள முடியும்.

ஐஸ்வர்யாவின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். ஆனால், ஐஸ்வர்யாவின் அம்மா யாரென்பது கடைசி வரை தெளிவாகச் சொல்லப்படாமலேதான் இருக்கிறது. இப்படியான அமைப்புகளை இன்றும் கிராமப்புறங்களில் நாம் பார்க்க முடியும். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், மூத்த மனைவிக்கும், இளைய மனைவிக்கு பிறந்தவர்கள் என நான்கைந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த வீட்டில் அம்மா எனும் சொல்லே பழக்கத்தில் இல்லை.

எல்லோருமே இளையவரை சின்னம்மா என்றும், மூத்தவரை பெரியம்மா என்றும் அழைக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒரு திரைக்கதை எழுத்தாளராக மிக நுணுக்கமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அவர் இன்னும் பல படங்களில் இப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றிரண்டு படங்களோடு தன் திரைக்கதை, இயக்கப் பணியை நிறுத்திக்கொண்டு இன்று ஒரு நடிகராக வலம் வருவது ஒருவகையில் நமக்கு இழப்புதான்.

பாலாஜி சக்திவேல்

ஐஸ்வர்யாவாக சந்தியா அறிமுகமானார். முந்தைய வருடம் பாய்ஸ் படம் மூலமாக அறிமுகமான பரத், இதில் முருகனாக நடித்திருந்தார். இருவரும் அவர்களின் பாத்திரத்தை மிகசிறப்பாகச் செய்திருந்தார்கள். இருவருக்குமே மண்ணுக்கே உரிய முகச்சாயல். முதிராத இளம் பெண்ணாக, காதலுக்காக அத்தனை வசதிகளையும் விட்டுவிட்டு முருகனுக்காக ஓடிவருவது, அவள் எதிர்பார்க்காத அத்தனைச் சிக்கல்களையும் எதிர்கொள்வது, லாரியில் வரும் தண்ணீரை பிளாஸ்டிக் குடத்தில் பிடித்து அதைத் தூக்கிக்கொண்டுகூட வரமுடியாமல் சிரமப்படுவது, கடைசியில் சித்தப்பாவின் நைச்சியத்தில் அப்பாவியாய் ஏமாந்து போவது என கச்சிதமான நடித்திருந்தார் சந்தியா. அதற்காக ஃபிலிம்பேர் விருதையும், தமிழ்நாடு அரசு விருதையும் வென்றார்.

பரத், துவைத்துப் பல வாரங்களான, கிழிந்து போன ஒரே சட்டையையே எந்நேரமும் போட்டுக்கொண்டு திரியும் ஒரு பைக் மெக்கானிக்காகவே வாழ்ந்திருந்தார். ஒரு பெண் சீண்டுவதைப் பொறுக்காமல் சீறுவது, பின் அவளது பின்னணியை அறிந்து ஆடிப்போவது, அதன் பின் அவளுடைய காதலுக்காக அனைத்தையும் பணயம் வைப்பது என முருகனாக சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவைச் செய்திருப்பவர் எஸ்டி விஜய் மில்டன். தமிழ்த்திரையுலகின் தரமான ஒளிப்பதிவாளர்களுள் விஜய் மில்டனும் ஒருவர். பின்னாளில் கோலி சோடா மூலமாக இயக்குநராகவும் வெளிப்பட்டார். கதையின் உணர்வுக்கேற்ற சென்ஸிபிளான ஒளிப்பதிவுக்கு இந்தப் படத்தை ஒரு உதாரணமாகவே கொள்ளலாம். இப்படி ஒரு மதுரையை இதற்கு முன்பும் பின்பும் நாம் பார்த்ததே இல்லை என்று சொல்லும்படியாகப் பதிவு செய்திருந்தார்.

மதுரையை அடையாளப்படுத்த எல்லோரும் மீனாட்சியம்மன் கோவில், ரயில்வே நிலைய மஞ்சள் போர்டு இவற்றைக் காட்டிக்கொண்டிருந்த போது, இதன் டைட்டில் கார்டு மாண்டாஜ் காட்சிகளில் பெரியார் பேருந்து நிலைய வாயில், மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டீக்கடைகள், அதிகாலை பூ மார்க்கெட், கமல்-ரஜினி ரசிகர் மன்ற சுவரோவியங்கள், பள்ளிக்கூடங்கள், சாலை சந்திப்புகள் என அசலான மதுரையைப் பதிவு செய்திருந்தார். பாடல் காட்சிகள் பதின்பருவக் காதலின் உணர்வுகளில் தோய்த்து எடுக்கப்பட்டிருந்தன.

படத்தின் இசை ஜோஷ்வா ஸ்ரீதர். இவருக்கு இது முதல் படம். பாடல்கள் அனைத்தும் உயிரோட்டமாக இருந்தன. நா. முத்துக்குமார் ஒரு பாடலாசிரியராக அல்லாது ஒரு கவிஞராகவே, தன் வரிகளில், காதலைக் கரைத்து ஊற்றியிருந்தார். காதலர்கள் இருவரும் சென்னையில் தங்கிட ஓர் இடம் கிடைக்காமல் தியேட்டரிலும், பஸ்ஸிலும் ஓர் இரவு நேரத்தைப்போக்கும் துயரமான சமயத்தில் ஒரு பாடல் வருகிறது. ஹரிசரண் பாடிய,

‘கண்ணீர் துளிகளைக் கண்கள் தாங்கும்,

கண்மணி காதலை நெஞ்சம்தான் தாங்கிடுமா,

கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்

என்றுதான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா…

உனக்கென இருப்பேன், உயிரையும் கொடுப்பேன்’

–பாடல் என்றைக்கும் காதலர்களுக்கான பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

படத்தைத் தயாரித்திருந்தது எஸ் பிக்சர்ஸுக்காக பிரபல இயக்குநர் ஷங்கர். 1993 ஜெண்டில்மேனில் தொடங்கி, மிகப்பெரிய வெற்றிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த போது, தனது உதவி இயக்குநர்களுக்காகவே சிலபடங்களைத் தயாரிக்கவும் தொடங்கினார். தனது இயக்கத்தில் தயாரித்த முதல்வனுக்குப் பிறகு, பாலாஜி சக்திவேலுக்காக காதல், சிம்புதேவனுக்காக 23-ம் புலிகேசி, வசந்தபாலனுக்காக வெயில், அறிவழகனுக்காக ஈரம் என பல குறிப்பித்தகுந்த படங்களை ஷங்கர் தயாரித்திருக்கிறார்.

காதல் என்பது நம்பிக்கை - எந்த நிலையிலும் உன்னை அது கைவிடாது!

காதல் என்பது தியாகம்- எத்தகைய வலிகளையும் உன் பொருட்டுத் தாங்கிக்கொள்ளும்!

காதல் என்பது பாதுகாப்பு- உனக்கெனவே இருக்கும்!

காதல் என்பது அன்பு- ஒரு தாயைப்போல உன் பசியை முன்னுணரும்!

எல்லாம் சரிதான். எல்லாம் இருக்கிறது. எல்லாம் இருக்கட்டும். ஆனால் காதல் என்பது ஏற்றத்தாழ்வு பாராதது - இது மட்டும் வேண்டாம். இது இந்தச் சமூகத்தால் புனிதப்பூச்சு பூசி வைக்கப்பட்டிருக்கும் சாதி, மத, வர்க்க வேறுபாடுகளையும், நம்பிக்கைகளையும் அது சிதைக்கிறது!

அப்படிச் சிதைக்கும் என்றால் அது காதலாக இருந்தாலுமே அதைக் கொல்லுவோம். குஞ்சுப் பறவைகளின் இறக்கைகளைப் பிய்த்துக் கொல்வதைப்போல கொல்லுவோம் எனும் சமூகத்தின் செய்தியைத்தான் இந்தப் படம் சொல்கிறது.

இந்தச் சமூகத்தின் இப்படியான ஆணவத்தின் வெளிப்பாடுதான் இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் போன்றோரின் நிஜக்கதைகள். அதைக் ’காதல்’ போன்ற படங்கள் சுட்டிக்காட்டிக்கொண்டேதான் இருக்கும்.!

(தொடரும்)

Madhampatty Rangaraj: "கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை" - ஜாய் கிறிஸ்டில்டா

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார். பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத... மேலும் பார்க்க

'எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள், அப்போது கண்ணதாசன்.!' - வைரமுத்து

கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா நேற்று (ஜூலை.30) சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, "தொழில்நுட்ப புரட்சி, தொலைபேசி கலாசாரம், சமூக ஊட... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj: `ராகா ரங்கராஜுக்கு துணை நிற்பேன்!' - உண்மையை உடைத்த மாதம்பட்டி ரங்கராஜ்

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார். பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத... மேலும் பார்க்க

Kavin: 'என் தங்க மகனே & மகளே'- இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான கவின் - மோனிஷா தம்பதி

'லிஃப்ட்', 'டாடா' போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார் கவின். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் இப்போது சினிமாவில் பரபரப்பான லைன் அப்களுட... மேலும் பார்க்க

The Odyssey: "என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!" - 'தி ஒடிஸி' குறித்து கமல்ஹாசனின் பார்வை

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை கமல்ஹாசன் பெரிதும் விரும்பிப் பாராட்டுவார். The Ody... மேலும் பார்க்க

Simran: 10 வயது மாற்றுதிறனாளி சிறுமிக்கு செய்த உதவி! - சிம்ரன் செய்த நெகிழ்ச்சி செயல்

நடிகை சிம்ரன் 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை நேரில் சந்தித்து, அந்த சிறுமியின் கனவை நனவாக்கியிருக்கிறார். பிறக்கும்போதே ஒரு கையுடன் பிறந்து நிஷா, நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர். எதையும் தடையாக நினைத... மேலும் பார்க்க