பெரும்பான்மை நிரூபித்த தவெக: "ஆம் இது சிறுபான்மை அரசு தான்!" - முதல்வர் விஜய் பே...
கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் - திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம்
கிருஷ்ணகிரி அருகே இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையானது ராணுவ வீரரும் அவர் தந்தை என்பதும், திருமணம் மீறிய விவகாரத்தால் இக்கொலை நடந்துள்ளதையும் காவல்துறை கண்டுபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 11 ஆம் தேதி காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை செல்லும் சாலையில் ஆலப்பட்டி ஊராட்சி பகுதியில் கருகிய நிலையில் ஒருவரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் சடலம் கிடந்த பகுதியை ஆய்வு செய்தபோது அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் மேலும் ஒரு சடலம் கருகிய நிலையில் கிடந்ததையும் கண்டு பிடித்தனர்.
இரு உடலிலும் பெட்ஷீட்டை சுற்றி சருகுகளை மேலே போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளதை தடயவியல் துறையினர் உறுதி செய்ய, இரு சடலங்களையும் உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் யார்? எந்த ஊர்? கொலையாளிகள் யார்? வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்தார்களா? என பல கேள்விகள் எழுந்த நிலையில், சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிமணி, கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி 5 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அருகாமையிலுள்ள தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டத்திலும் காணாமல் போனதாக புகார்கள் வந்துள்ளதா என்று காவல் நிலையங்களில் ஆய்வு செய்த தனிப்படையினரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கொலை செயப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாலகுறி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான மகேஷ்குமாரும் அவரது தந்தை செல்லப்பன் என்பதும் தெரிய வந்தது.
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் சில நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். மகேஷ் குமாரின் மனைவி பானுபிரியாவுக்கும் பூவரசன் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததை தெரிந்துகொண்ட மகேஷ்குமார் பானுபிரியாவை கண்டித்துள்ளார். இரண்டு நாட்களாக இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் மகேஷ்குமார் வீட்டுக்கு வந்த பூவரசனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளதில் மகேஷகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்த பூவரசன், அந்த நேரம் வீட்டுக்கு வந்த மகேஷ்குமாரின் தந்தை செல்லப்பனையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதற்கு பானுபிரியா உடந்தையாக இருந்துள்ளார்.
அதன் பின்னர் இரவு நேரத்தில் ஒவ்வொரு உடலாக ராயக்கோட்டை சாலைக்கு கொண்டு வந்து தென்னை ஓலைகளை உடல் மீது போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இவை அனைத்தும் காவல்துறை விசாரணையில் உறுதியாக பூவரசனை கைது செய்தனர், இந்த சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து பானுபிரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















