பெரும்பான்மை நிரூபித்த தவெக: "ஆம் இது சிறுபான்மை அரசு தான்!" - முதல்வர் விஜய் பே...
`முதல்வர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது என்ன நியாயம்?' - சட்டசபையில் பழனிசாமி vs வேலுமணி தரப்பு!
தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்தது.
தற்போது அதிமுகவில் பழனிசாமி அணி, வேலுமணி அணி என்று இரண்டு அணி உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது...
"அதிமுக பொறுத்த வரை, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களை முன்னிறுத்தியே வாக்குகளைச் சேகரித்தோம்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன். எல்லா கட்சிகளைப் போல எங்கள் கட்சியிலும் கருத்து வேறுபாடு உண்டு.
அப்படியிருக்கையில், முதலமைச்சர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடாது.
தேமுதிக கூறியதுபோல குதிரைப் பேரம் வழிவகுத்திருக்கிறது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
47 பேர் இரட்டை இலை சின்னத்தில் இருந்து வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர்.
தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக இட்ட அடித்தளம் மிக முக்கியமானது.
எங்களுடைய அதிமுகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 47 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை விரும்பியே மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறேன்.
எனக்கு கிடைத்த தகவல் படி, ஒரு சில ஆசைவார்த்தைகள் கூறி, அமைச்சர் பதவி தருகிறேன்... வாரிய தலைவர் பதவி தருகிறேன் என்று கூறியதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையா... பொய்யா என்று சொல்கிறேன்.
நீங்கள் தூய்மையான ஆட்சி தருவேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதை அப்படியே செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
எதிரி கட்சியாக அல்லாமல்... எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறுகிறேன்." என்றார்.
தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணி பேச அனுமதித்தார் "அதிமுக சார்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.
நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படவில்லை. மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். அதனால், அதிமுக தவெகவிற்கு ஆதரவளிக்கிறது". என்றார்.
வேலுமணி பேச்சுக்கு எடப்பாடி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.













