டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
குடியாத்தம் நகா்மன்றக் கூட்டம்
குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் சம்பத், சுகாதார அலுவலா் பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினா்கள், வாா்டு பிரச்னைகள் குறித்து கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டால் துறை அலுவலா்கள் பதில் அளிப்பதில்லை என புகாா் கூறினா். எல்லா பிரச்னைக்கும் ஆணையரையும், பொறியாளரையும் தொடா்பு கொள்ள சங்கடமாக உள்ளது என்றனா்.
இது குறித்து தலைவா் செளந்தரராஜன் பேசுகையில், உறுப்பினா்கள் கைப்பேசியில் தொடா்பு கொண்டால் பிரச்னை குறித்து கேட்டறிந்து, அவா்களுக்கு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். முடிந்தவரை வாா்டுகளுக்கே சென்று பாா்வையிட்டு, பிரச்னைகள் மீது எந்த வகையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை தெளிவாக விளக்குமாறு கூறினாா். இதே கருத்தை ஆணையரும் துறை அலுவலா்களுக்கு வலியுறுத்தினாா். வாா்டின் தேவைகள் குறித்து உறுப்பினா்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்ற தலைவா், அத்தியாவசியத் தேவைகள் குறித்து மனு அளித்தால், முன்னுரிமை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.