நெல்லை: தீபாவளி விடுமுறை முடிந்து புறப்பட்ட மக்கள்; ரயில் நிலையங்களில் அலைமோதிய ...
குடியாத்தம்: பாமக பிரமுகர் கொலை; போலீஸாரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரௌடி சுட்டுப்பிடிப்பு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது 43). பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகரான ஞானவேல் ஃபைனான்ஸ் தொழிலும் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதே பகுதியில் வசிப்பவர் பூவரசன் (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான பூவரசன்மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை, கொலை என 13 வழக்குகள் இருக்கின்றன.
தொடர் குற்றச்செயல் காரணமாக, பலமுறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, ஜாமீனில் வெளியே இருந்த ரௌடி பூவரசனுக்கும், பா.ம.க பிரமுகர் ஞானவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை 6.50 மணியளவில் சேங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகில் தனது நண்பரும் ஹோட்டல் தொழிலாளியுமான ரகு (வயது 40) என்பவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார் ஞானவேல்.

அப்போது அங்கு வந்த ரௌடி பூவரசன் நாட்டுத் துப்பாக்கியால் ஞானவேலை நோக்கி சுட்டுள்ளார். தோட்டாக்கள் உடலை துளைத்ததால் நிலைகுலைந்துபோன ஞானவேல் அலறித் துடித்துள்ளார். முகத்தில் 6 தோட்டாக்களும், கழுத்தில் ஒரு தோட்டாவும், மார்பில் 3 தோட்டாக்களும் துளைத்ததால் சிறிதுநேரத்தில் ஞானவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். சிறிய அளவிலான ரவை குண்டுகள் என்பதால் சிதறி துளைத்துள்ளது.
ஞானவேலைக் காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் ரகு மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் ரௌடி பூவரசன். இதில், அவருக்கு வலது கையில் ஒரு குண்டு துளைத்தது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஞானவேல் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். காயமடைந்த அவரது நண்பர் ரகுவுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்ததும், குடியாத்தம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூவரசனை தேடிப்பிடித்து கைது செய்தனர். இதனிடையே, உயிரிழந்த ஞானவேலின் உறவினர்களும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் குடியாத்தம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, ஞானவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை பகுதியிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, கொலையாளி பூவரசனிடம் இருந்து போலீஸார் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இதற்கான, தோட்டா மருந்துகள் மலைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக பூவரசன் தெரிவித்ததால், அவரை அந்த பகுதிக்கு இன்று காலை அழைத்துச் சென்றனர். அப்போது, திடீரென கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜா என்பவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார் பூவரசன். எதிர்பாராத இந்த தாக்குதலில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. இன்னொரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.

இதையடுத்து, தப்பி ஓடிக்கொண்டிருந்த பூவரசனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில், பூவரசனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக, காயமடைந்த போலீஸாரும், குற்றவாளி பூவரசனும் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் போலீஸாரை, மாவட்ட எஸ்.பி சிவராமன் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகவும் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி சிவராமன், ``சம்பவத்துக்கான காரணம் என்னவென்றால், ஒரு வாரத்துக்கு முன்பு பூவரசனின் நண்பர் ஒருவர் சேங்குன்றம் கிராமத்துக்கு வந்துள்ளார். அப்போது, ஞானவேல் தரப்பினர் அவரை நிறுத்தி `இது எங்க ஏரியா. வெளியாட்களுக்கு இங்கு என்ன வேலை?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
இதுபற்றி பூவரசனிடம் அவரது நண்பர் கூறியுள்ளார். அப்போதே இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் பூவரசன் ஞானவேலிடம் போனில் பேசியுள்ளார். அதன்பிறகு, தகராறு அதிகமானதால் பூவரசன் கோபத்தில் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுள்ளார். தகவல் கிடைத்தவுடன் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குற்றவாளி பூவரசனை உடனடியாக கைது செய்துவிட்டார்கள்.
நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்துவிட்டோம். விசாரணையில், கொலைக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதோடு, நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான தோட்டாக்கள், வெடிமருந்துகள், தேங்காய் நாறுகளையும் எடுத்துக்கொடுப்பதாக பூவரசனே சொன்னார். அதை பறிமுதல் செய்வதற்காக நம்முடைய போலீஸ் டீம் இன்று காலை 6 மணிக்கு பூவரசனை அழைத்துச் சென்றனர்.

ஒரு பையை அவர் எடுத்தபோது, அதில் இருந்த சிறிய கத்தியை எடுத்து தாக்கியதில் எஸ்.ஐ ராஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இம்தியாஸ் என்ற இன்னொரு போலீஸ்காரருக்கும் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இன்ஸ்பெக்டரையும் தாக்க முயன்றுள்ளார். வேறு வழியில்லாமல், இன்ஸ்பெக்டர் முதலில் எச்சரிக்கை செய்தார். பின்னர், தற்காப்புக்காக முட்டிக்குக் கீழே சுட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பூவரசனின் நண்பரையும் வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்துள்ளோம்.
இந்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மலைப்பகுதியில் வாழக்கூடிய மக்கள் வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளை காலங்காலமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். வனத்துறையினருடன் நாங்களும் சேர்ந்து வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தி நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வருகிறோம்’’ என்றார்.



















