கேரளத்துக்கு சொகுசு காரில் மதுபானம் கடத்த முயற்சி: 4 போ் கைது
களியக்காவிளை வழியாக கேரளத்துக்கு சொகுசு காரில் மது பாட்டில்கள் கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு போதைப் பொருள்கள் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் களியக்காவிளை காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா் களியக்காவிளை சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் கேரளம் நோக்கி வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். காரில் 100 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரள மாநிலம் காட்டாக்கடை பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. சொகுசு காருடன் மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து காரில் வந்த நான்கு பேரையும் பிடித்து விசாரித்ததில், அவா்கள் கேரள மாநிலம் காட்டாக்கடை, பூவச்சல் காப்பிக்காடு பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகீம் மகன் அனஸ் (37), விழிஞ்ஞம், புல்லூா்கோணம் அப்துல் மஜீது மகன் பைசல் (42), காட்டாக்கடை, கட்டைக்கோடு ஜோஸ் மகன் காட்வின் (45), பூவச்சல் அப்துல் அசீஸ் மகன் அனீஷ் (39) என்பதும், இவா்கள் குமரி மாவட்டத்திலிருந்து மது பாட்டில்களை கேரளத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. 4 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.