'குழந்தைகள் இல்லை... சிரிப்பும் இல்லை...' - அமைதியாகும் மெரினா ராட்டினங்கள்
கேரள மருத்துவ மாணவர் நிதின்ராஜ் தற்கொலை வழக்கு; 3 மாதங்களுக்குப்பின் HOD கைது - நடந்தது என்ன?
கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரகண்டி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ் மாணவர் நிதின் ராஜ் கடந்த 10.04.2026 அன்று கல்லூரி விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். லோன் ஆப் மிரட்டல் காரணமாக மாணவன் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் இந்த வழக்கு பார்க்கப்பட்டது.
திருவனந்தபுரம் ஆர்யநாட்டைச் சேர்ந்த நிதின் ராஜ் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக என ஆன்லைன் செயலியில் சுமார் ரூ.14,000 கடன் வாங்கியிருந்ததும், நிதினின் செல்போனுக்கு 90-க்கும் மேற்பட்ட மிரட்டல் குறுஞ்செய்திகள் வந்திருப்பதும் சைபர் கிரைம் போலீசார் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும், நிதினின் பேராசிரியர்களைத் தொடர்பு கொண்டு கடன் ஏஜென்ட்கள் ஆபாசமாகப் பேசியதாகவும், இதனால் கல்லூரி நிர்வாகம் நிதினை அழைத்து விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது. நிதின் ராஜை மிரட்டிய இன்ஸ்டன்ட் ஃபண்ட்ஸ் கடன் செயலி நிறுவன ஊழியர்களான காசியாபாத்தைச் சேர்ந்த ஹிருஷிகேஷ் திவாரி, உத்தர் பிரதேசைச் சேர்ந்த பிரசாந்த் கேவல் (28) மற்றும் பரிதாபாத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஜெய்(54) ஆகியோர் அந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
அதேசமயம் மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் டாக்டர் எம்.கே. ராம் மற்றும் டாக்டர் சங்கீதா நம்பியார் ஆகியோர் சாதி ரீதியாகவும், பாடி ஷேமிங் மூலமும் மாணவனின் மனதை காயப்படுத்தியதுதான் தற்கொலைக்கு காரணம் எனவும் நிதின் ராஜின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து டாக்டர் எம்.கே.ராம் மற்றும் டாக்டர் சங்கீதா நம்பியார் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சங்கீதா நம்பியார் ஜாமின் பெற்றார். அதேசமயம் டாக்டர் எம்.கே.ராம் தலைமறைவானார்.

கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை கண்ணூர் க்ரைம் பிராஞ்ச் எஸ்பி கே.வி. வேணுகோபால் தலைமையிலான போலீஸார் நேற்று கைதுசெய்தனர். செல்போன் இல்லாமல், தாடி வளர்த்து ஆள் அடையாளத்தையே மாற்றியவாறு டாக்டர் எம்.கே.ராம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தனது உறவினர் வட்டத்தில் மட்டுமே தஞ்சம் புகுந்து வந்த இவர், ஏதேனும் ஆபத்து என உணர்ந்தால் உடனடியாக அந்த இடத்தை விட்டுத் தப்பி, வேறு இடத்துக்கு சென்றுவிடுவார்.
கடந்த மூன்று மாதங்களாக அவர் ஒருமுறை கூட மொபைல் போனைப் பயன்படுத்தாததால் போலீஸாருக்கு அவரை நெருங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டாக்டர் ராமின் தாய் உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புப் பதிவுகளை மையமாக வைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இறுதியாக, இரண்டு உதவியாளர்களுடன் தங்கியிருந்த டாக்டர் ராம் குடகு பகுதியில் வைத்து கேரள போலீஸாரிடம் சிக்கினார்.

கைதுசெய்யப்பட்ட டாக்டர் எம்.கே.ராமை குற்றப்பிரிவு போலீஸார் தலச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதுக்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தலச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம் எம்.கே.ராமை விடுவித்தது. நீதிமன்றம் விடுவித்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவரை க்ரைம் பிராஞ்ச் போலீஸார் மீண்டும் கஸ்டடியில் எடுத்தனர். பின்னர், இரவு 10 மணியளவில் அவருக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கி விடுவித்தனர். இந்த சம்பவம் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















