Brothers & Sisters: "என் மனைவியே இந்த சீரிஸ் பார்க்கமாட்டேங்குறாங்க!" - போஸ் வெங...
கைது! | குறுந்தொகை முதல் சமூக ஊடகங்கள் வரை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
'கைது' - நடைமுறையில் உள்ள வார்த்தை. ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒருவர், இருவர் அல்லது பலர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை குறிக்கும் வார்த்தை அது. பெரும்பாலும் காவல் துறையோடு தொடர்புடையது. தினசரி நடக்கும் சில அசாதாரண சம்பவங்கள் 'கைது' தலைப்புச் செய்திகளில் இடம் பெற காரணமாகிறது.
'கைது' எல்லாவற்றிலும் உண்டு. சங்க காலத்திலும், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நடந்ததற்கான சான்றுகள் உள்ளன.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான 'குறுந்தொகையில் கண்களால் கைது செய்யப்பட்ட சம்பவம் உள்ளது.
"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே."
-தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட போது ஒருவரை ஒருவர் கண்களால் கைது செய்து கொண்டார்கள். இந்த பாடலின் பொருள்: 'எங்கம்மாவும் உங்கம்மாவும் யார் யாரோ...எங்கப்பாவும் உங்கப்பாவும் எந்த வகையில் உறவினர்கள்...நாம ரெண்டு பேரும் எப்படி ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் ஆகினோம்...செம்மண் நிலத்தில் விழுந்து மழை நீர் போல அன்புடைய நெஞ்சங்கள் ஒன்றாக கலந்து விட்டது.

"அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.."
-கம்பராமாயணத்தில் மிதிலை காட்சிப் படலத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற வரி. ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக பார்த்த போது காதலால் கைது செய்யப்பட்டார்கள்.
நேரில் சந்திக்காமலே 'நலம் நலமறிய ஆவல்' என்று கடிதம் மூலமாகவே இரு மனங்கள் காதலால் கைது செய்யப்பட்டது சங்க இலக்கியங்களில் கூட இல்லை. முடியும் என்று 'காதல் கோட்டை' படத்தின் மூலம் காட்டினார் இயக்குநர் அகத்தியன் . காதலில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது இப்படம்.
கைது என்பது தனி நபர்களுக்கு மட்டுமல்ல. ஒரு போராட்டம்/கருத்தரங்கு நடக்கும் போது கலந்து கொண்ட அனைவரையும் கைது செய்து ஒரு இடத்தில் அடைத்து பின்னர் விடுவிப்பதும் உண்டு. அந்த வகையில் சிலவற்றை பார்க்கலாம்.
'நாடோடி மன்னன்' - மக்கள் திலகம் அவர்களின் படங்களில் மிக முக்கிய பங்கு வகித்த படம். இடைவேளைக்கு முன்பு 2 மணி நேரமும் அதற்கு பிறகு சுமார் 1 3/4 மணி நேரமும் ஓடும். படம் பார்க்க வந்த மக்களை எழுந்து வெளியே செல்ல விடாமல் அரங்கத்திற்குள் சிறை வைத்த படம் இது. இன்றைய GEN Z தலைமுறைகளும் ரசிக்கும் அளவுக்கு இயக்கி இருப்பார் மக்கள் திலகம். தனது வசீகர தோற்றத்தாலும் வள்ளல் தன்மையாலும் மக்களை கவர்ந்து முதலமைச்சராகும் அளவுக்கு உயர்ந்தார். இன்றும் மக்களின் மனங்களில் இருந்து வருகிறார்.
'வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன்.. நாம் பார்க்காத பலரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் நடிகர் திலகம் அவர்கள். பாசமலராக, ராஜபார்ட் ரங்கதுரையாக, எஸ்.பி.செளத்ரி யாக, பாரிஸ்டர் ரஜினிகாந்தாக, பிரெஸ்டிஜ் பத்மநாபனாக வாழ்ந்து காட்டி திரையரங்குகளில் பலரை சிறைபிடித்தவர்.
'கல்யாணப்பரிசு, நெஞ்சிருக்கும் வரை, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, போன்ற படங்களை தந்த இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் 'காதலிக்க நேரமில்லை' என்ற முழு நீள நகைச்சுவை படமும் தந்தார்.

கே.பாலச்சந்தர் 'இருகோடுகள், அரங்கேற்றம், வறுமையின் நிறம் சிவப்பு, நீர்க்குமிழி, உன்னால் முடியும் தம்பி' படங்களை இயக்கி 'தில்லு முல்லு, பாமா விஜயம்' போன்ற நகைச்சுவை படங்களையும் பரிசாக அளித்தார்.
பாரதிராஜாவின் '16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள்'...பாக்யராஜின் 'அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு,'.. மணிரத்னம் அவர்களின் 'நாயகன், மெளன ராகம்.' மகேந்திரன் அவர்களின் 'முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள்'.. பாலுமகேந்திரா அவர்களின் 'மூன்றாம் பிறை'-இப்படி நிறைய இயக்குனர்களின் திரைப்படங்கள் ஒவ்வொரு காட்சியின் போதும் ரசிகர்களை சுமார் 2 லிருந்து 2.30 மணி நேரம் சிறைப்படுத்தின.
திரைப்பட பாடல்களை தந்த கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் ஆகியோர் தங்களது சிறப்பான வரிகளின் மூலமாக, அந்த பாடலுக்கு இசையமைத்தவர், பாடியோர் - இந்த ஒட்டுமொத்த கூட்டணியும் சில நிமிடங்கள் நம்மை கைது செய்து விடும்.
சில பேச்சாளர்கள் பேச ஆரம்பித்தால் கூடியிருக்கும் கூட்டம் மெய்மறந்து கேட்கும். இதுவும் ஒரு வகை கைது தான். அப்படி பேசுபவர்களை 'வெள்ளி நாவு படைத்த பேச்சாளர்' என்று சொல்வார்கள். அப்படி ஒரு பட்டத்தை வாங்கியவர் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அவர்கள்.
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு கேட்க இனிமையாக இருக்கும். நகைச்சுவையாக பேசுவார். குட்டிக் கதைகளை சொல்வார். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கேட்கும்படி இருக்கும்.
திரு கி.வா.ஜெகந்நாதன் அவர்களின் சிலேடை பேச்சு அனைவருக்கும் பிடிக்கும். அவர் ஒரு ஊருக்கு பேச சென்ற போது அவருக்கு உணவு ஏற்பாடு செய்தவர் 'உங்களுக்கு பூரி பிடிக்குமா' என்று கேட்க...ஜெகநாதனுக்கு 'பூரி' பிடிக்காமல் போகுமா என்று சொல்ல அந்த பதில் அனைவரையும் சிரிக்க வைத்தது.
கைது செய்வதை இயற்கையும் தொழிலாக வைத்திருக்கின்றன. ஆர்ப்பரித்து கீழே விழும் அருவி, கோடையில் பெய்யும் மழை, ஏழு வண்ணங்களில் காட்சியளிக்கும் வானவில், உயரமான மலை தொடர்கள், பரந்து விரிந்து உயரமாக இருக்கும் மரங்கள்... இவைகளை ரசித்துப் பார்க்கும் வேளையில் தான் நாம் அவைகளால் கைது செய்யப்பட்டு இருப்போம்.
மரங்களில் கூட்டமாக அமர்ந்திருந்து கீச் கீச்சென்று கத்திக் கொண்டே பறக்கும் பறவைகள், குருவிகள், தோகை விரித்தாடும் மயில்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வானத்தின் அழகை கூட சில சமயம் ரசித்துப் பார்க்கலாம். ஏனென்றால் 'வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்...' வைரமுத்து அவர்கள் பாடியதை மறக்க முடியுமா...?"
நாதஸ்வர வித்வான்கள் காருக்குறிச்சி அருணாசலம், மதுரை சேதுராமன், பொன்னுசாமி. தவில் சக்கரவர்த்தி வலையப்பட்டி சுப்பிரமணியன், ஆகியோரின் இன்னிசை கச்சேரி மற்றும் இசைஞானியின் பின்னணி இசை - இவையனைத்தும் நித்தமும் நம்மை சிறைப்படுத்துபவை.
தற்போது அலைபேசி, முகநூல், ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் பலரை சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக சொன்னால் சமூக ஊடகங்கள் பலரை கைது செய்து அவ்வப்போது பரோலில் வெளியே அனுப்பி வைக்கிறது.
அரசியல் பின்னணி, குற்றப் பின்னணி இல்லாத கைதுகள் நம் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை நாம் உணர முடியாது. இந்த கைதுக்கு எதிராக முன் ஜாமீன் கேட்க முடியாது. இதை கண்டித்து போராட்டம் நடத்தவும் முடியாது. வேற மாதிரியான இந்த கைது நமக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை தரும்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ




















