`Platinum Season Of Love 2026 விருது'- பிளாட்டினத்தில் தன் பாரம்பரியத்தை தொடரும...
Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?
சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள் (Mule Accounts).
இந்தக் கணக்குகள் மோசடி மூலம் பெற்ற பணத்தை மறைத்து வைப்பதற்கு, மோசடி செய்து பணம் பெறுவதற்கு, மோசடி பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன.
'அது சரி... அதற்கு என்ன இப்போது' என்று கேட்கிறீர்களா? தமிழ்நாடு காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு கடந்த 6, 7-ம் தேதிகளில் 48 மணிநேர ஆபரேஷன் ஒன்றை நடத்தியது. அது போலி வங்கிக் கணக்குதாரர்களுக்கு எதிரான மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கை ஆகும்.

ஆக, இந்த ஆபரேஷன் மூலம் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 545.27 கோடி மோசடி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய 837 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த ஆபரேஷன் எப்படி நடைபெற்றது?
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்றப் புகார்கள் இணையதளம் (NCRP) மற்றும் பிரதிபிம்ப் இணையதளத்தில் (Pratibimb Portal) இருந்து குற்றவாளிகளின் விவரங்கள் முதலில் எடுக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக, சைபர் குற்ற நெட்வொர்க்குகளின் நிதிப் பரிவர்த்தனை தரவுகளை ஆய்வு செய்து, வங்கிக் கணக்குகளின் பணப் போக்கைச் செக் செய்து, குற்றவாளிகளின் விவரங்கள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன் பின், கைதுகள் நடந்துள்ளது.
என்னென்ன சிக்கியிருக்கின்றன?
இந்த ஆபரேஷனுக்கான சோதனையின் போது, தமிழ்நாடு முழுவதும் 204 கைப்பேசிகள், 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப்/டெஸ்க்டாப் கணினிகள், 1 பென்டிரைவ்/சேமிப்பகம், ரூ.1,02,000 ரொக்கம், 114 வங்கிப் புத்தகங்கள், 29 செக் புத்தகங்கள், 73 ஏடிஎம்/டெபிட் கார்டுகள், 1 கிரெடிட் கார்டு மற்றும் 2 பிற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விசாரணைக்காக 155 கைப்பேசி எண்களும் 58 வங்கிக் கணக்கு விவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
நாம் எப்படி உஷாராக இருப்பது?
யாருக்கோ ஒருவருக்கு நடந்திருக்கிறது என்று இந்த மோசடிகளை எளிதாக நாம் கடந்து சென்றுவிடக் கூடாது. ஆன்ட்ராய்ட், ஆப்பிள் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருமே இந்த மோசடிகளின் எளிய இலக்குகள் தான்.
அதனால் நாம்...
பாஸ்வேர்டு, ஒ.டி.பி, வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற பெர்சனல் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மோசடிகள் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்.
போலி இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
முதலீட்டு மோசடி மற்றும் 'டிஜிட்டல் கைது' மோசடிகள் குறித்து எச்சரிக்கை இருங்கள்.
கமிஷனுக்காக வங்கிக் கணக்கை யாருக்கும் கடனாகக் கொடுத்துவிடாதீர்கள்.
அபிசியல் ஆப்களைத் தாண்டி, வேறு எந்த ஆப்கள், வலைதளங்களில் இருந்தும் ஆப்களை டௌன்லோடு செய்யாதீர்கள்.
பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யுங்கள்.
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் ஆப்களில் இருந்து உஷார்.
- இந்த டிப்ஸ்கள் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு பகிர்ந்திருப்பவை தான்.















