கும்பகோணம்: காரில் ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரம்; பாஜக நிர்வாகியைக் கைதுசெய்த போலீஸ்!
கும்பகோணம், சத்யம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வேதா என்கிற வேதச்செல்வம் (52). இவர் பாஜக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு, மீண்டும் இரவு வேதச்செல்வம் காரில், கும்பகோணம் திரும்பியுள்ளார்.

அப்போது, கும்பகோணம் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், வேதச்செல்வம் காரை மறித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் ஆயுதங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் வேதச்செல்வத்திடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வேதச்செல்வத்தை கைதுசெய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். காரில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாஜக நிர்வாகி கைதுசெய்யப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிலரிடம் பேசினோம். ``ஆறு மாதங்களுக்கு முன்பு மற்றொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை ஆயுதங்கள் வைத்திருந்ததாக போலீஸார் கைது செய்தனர்.

அந்த நிர்வாகி மீது கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரிடம் நடத்திய விசாரணையின் போது தன் கூட்டாளி வேதச்செலவ்ம் குறித்து சொல்லி இருக்கிரார். அதன் பேரில் விசாரணை நடத்துவதற்கு கைது செய்துள்ளனர். வேதச்செல்வம் மீதும் புகார்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது" என்றனர்.



















