Bigg Boss tamil 10: வைல்டு கார்டு என்ட்ரியில் களமிறங்கும் புதிய போட்டியாளர்! - ய...
கோட்டை விடுகிறதா ஐ.நா; ட்ரம்ப், நெதன்யாகு பேச்சுகள் எதை பிரதிபலிக்கின்றன?!
ஐ.நா என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், அதன் கொள்கை, கோட்பாடு என்ன என்று தெரியாத ஒருவருக்குக்கூட, ‘இரு நாடுகளுக்கு இடையே சண்டை நடந்தாலோ, போர் நடந்தாலோ, ஐ.நா தான் சமாதானம் பேசும்’ என்பது தெரியும்.
ஐ.நா என்றாலே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும்... எந்தச் சண்டை நடந்தாலும் சமாதானத்திற்கு வழிவகுக்கும் என்கிற மைண்ட்செட் தான் நம் அனைவரிடமும் உள்ளது.
இது எல்லாத்திற்கும் மேலே, ஐக்கிய நாடுகளின் கொள்கைகளில் ஒன்று - “நாங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவோம்”.
மனிதநேயம் என்று வந்துவிட்டாலே, அங்கே ‘போர்’ அடிபட்டுப் போகும். மேலே சொன்ன கொள்கையின்படி, ஐக்கிய நாடுகள் போருக்கு எதிரானது என்றே எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் நடந்துவரும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் மனிதநேயம் தென்படவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் குறித்தும், தாக்குதல் குறித்துமே பேசியுள்ளனர்.

ட்ரம்ப் பேச்சு
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, “நான் ஒரு மிக முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது.
ஈரானை மீண்டும் கட்டியெழுப்பி, முன்பை விட மிகப்பெரிய நாடாக... ஒருவேளை மத்திய கிழக்கிலேயே அல்லது உலகிலேயே மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் ஒரு ஒப்பந்தத்தை அவர்களுடன் செய்துகொள்வதா?
அல்லது இஸ்லாமியக் குடியரசை உடனடியாக முற்றிலும் அழித்தொழித்து, பிற நாடுகளை மீண்டும் அவர்கள் கொல்லவும் அழிக்கவும் வாய்ப்பே இல்லாதவாறு செய்வதா?” என்று பேசியிருந்தார் ட்ரம்ப்.
மேலும், இந்த ஜனவரி மாதம் வெனிசுலா நாட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து, அந்த நாட்டு அதிபர் மாதுரோ நிக்கோலஸைக் கைதுசெய்ததைக் கூட பெருமையாகப் பேசியிருக்கிறார் ட்ரம்ப்.
ஏகப்பட்ட பொய்கள்...
பல்வேறு நாடுகள் கூடியிருக்கும் ஓர் அரங்கில், அமைதியை முன்னிறுத்தும் ஓர் அரங்கில் ஒரு நாட்டிற்குள் புகுந்து அந்த நாட்டின் உச்சத் தலைவரைக் கொன்றது குறித்த எந்தவொரு உணர்வும் இல்லாமல், அந்த நாட்டை அழித்தொழிக்கவா என்றும்,
இன்னொரு நாட்டின் இறையாண்மைக்குள் புகுந்து, அனைத்திற்கும் உச்சமாக அந்த நாட்டு அதிபரையே கைது செய்தது குறித்துப் பெருமை பேசியிருக்கிறார் ட்ரம்ப்.
இதுமட்டுமல்ல, அவர் பேசிய உரையில் ஏகப்பட்ட பொய்கள்.

இதுவரை 8 போர்களை நிறுத்தியுள்ளேன் என்று ட்ரம்ப் பேசியிருக்கிறார். இது குறித்த அவரது பேச்சு ஒன்றும் புதிதல்ல. அங்கே 8 போர்கள் குறித்த கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.
அந்த 8 போரில் இந்தியா-பாகிஸ்தான் போரும் உண்டு. முதலில் இந்தியா, பாகிஸ்தானுக்கு நடந்தது போரே அல்ல. அது எதிரெதிர் தாக்குதல். அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது என்று ட்ரம்ப் திரும்பத் திரும்பக் கூறுவதை இதுவரை இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.
அடுத்ததாக, எகிப்து மற்றும் எத்தியோப்பியா, செர்பியா மற்றும் கொசோவோவிற்கு மத்தியில் நடந்தது போரே அல்ல. அது தகராறு தான்.
ஆனால், அதை இதுவரை ட்ரம்ப் 'போர்' என்று ஊதிப் பெரிதாக்கி சமாதானம் செய்ததாகவும் அறிவித்துக்கொண்டார்.
தான் அதிபரானதிலிருந்து ஈரானுக்கு வந்த முதலீடுகள்... ஈரான் போரில் ஆயுதங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை; இன்னும் நிறைய ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளது என்று ட்ரம்ப் ஐ.நாவில் பேசிய எதற்குமே ஆதாரம் இல்லை.
இவை ட்ரம்ப் பேசிய பொய்களின் ஓரிரு ஆதாரங்களே.
ஐ.நாவில் நெதன்யாகு
நேற்று ஐ.நாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசினார். அவர் பேசத் தொடங்கியதுமே, சவூதி அரேபியா, சூடான், துனிசியா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், அல்ஜீரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறினார்கள்.
இவர்களை ‘மனசாட்சியற்றக் கோழைகள்’ என்று அரங்கிலேயே விமர்சித்தார்.
மேலும், நெதன்யாகுவும் உரையில், “ஈரான் ஆட்சி ஒரு நாள் கவிழும்” என்று பேசியிருந்தார்.
தங்களது நாட்டிற்குள், தங்களுடைய பிரதிநிதிகள், தலைவர்கள் மட்டும் இருக்கும் ஓர் அரங்கில் ட்ரம்பும், நெதன்யாகுவும் பேசியதை ஏற்றுக்கொள்ளலாம்.

பேச்சுகள்...
காரணம், ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளன. அதற்கேற்பத் தான் பேசுவார்கள். செயல்களை முன்னெடுப்பார்கள்.
ஆனால், ஒரு சர்வதேச அரங்கில் இரு அதிபர்களும் பிற நாடுகளின் மீது வெறுப்புகளை இப்படிக் கொப்பளித்திருக்கின்றனர்.
ஒரே அரங்கில் தங்களுடன் அமர்ந்திருக்கும் நாடுகளை ‘கோழைகள்’ என்று அழைப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.
ஐ.நா 'வீக்' ஆனதா?
அமைதிக்கு தூது என்று பேரெடுத்த ஓர் அமைப்பில் இப்படிப்பட்ட பேச்சுகள் ஒலித்திருக்கின்றன.
ட்ரம்ப், நெதன்யாகு மட்டும் தான் போர் குறித்துப் பேசினார்களா என்று பார்த்தால், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் போர் குறித்துப் பேசினார்கள்.
ஆனால், இவர்கள் பேசியது என்னவோ, தற்காப்புத் தாக்குதல் குறித்துத் தான்.
ஆனால், ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் பேசியது அவர்களது வெறுப்பின் உச்சம்.
இப்போது ஐ.நாவின் பக்கம் வந்தால், ஏற்கெனவே அமைதிக்காக... சமத்துவத்திற்காக... உண்மைக்காக... வேற்றுமைகளைப் போற்றுவதற்காகத் தொடங்கப்பட்ட ஐ.நாவின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுவருகிறது.
ட்ரம்பே பல முறை ஐ.நாவைச் சாடியிருக்கிறார்.

இதுபோக, ஐ.நா மீது பல நாடுகளுக்கு நம்பிக்கையும், மரியாதையும் போய்விட்டது.
இந்த வேளையில், ஐ.நா பொதுக்கூட்டத்திலேயே அதிபர்கள் இப்படிப் பேசினால், அதன் மீதான நம்பிக்கை மேலும் அடிபடும்.
அதிபர்கள் அங்கே என்ன பேசுகிறார்கள் என்பதில் ஐ.நா ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால், ஐ.நா ஓர் அமைப்பாக முன்புபோல வலுப்பெற வேண்டும். வெறும் அறிக்கைகள்... பேச்சுவார்த்தைகள் என்றில்லாமல், தங்களுடைய கொள்கைகளையும், செயல்பாடுகளையும் வலுவாக முன்னெடுத்து வைக்க வேண்டும்.
அப்போதே அதிபர்கள் தாங்களாகவே அங்கே அவர்கள் பேசும் பேச்சைத் திருத்துவார்கள்.
எங்களுடைய கொள்கை அமைதிதான். அதைத் தான் நாங்கள் முன்னெடுப்போம் என்கிற நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்த வேண்டும்.
ஐ.நா பாதிக்கப்படும் ஒவ்வொரு நாட்டுக்கும் உறுதுணையாகவும், எவர் பக்கம் சரியோ அவர் பக்கம் நிற்க வேண்டும்.
இது தான் ஐ.நாவிற்கு மீண்டும் மரியாதை வரும் வழி.
















