'ஆட்சியில் பங்கு டு வாரியங்கள்.!' - தலைமைக்கு தமிழக காங். நிர்வாகிகள் அனுப்பிய க...
சசிகலா: `ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சி தொடங்க திட்டம்?' - பசும்பொன்னில் பந்தல்கால் நட்ட ஆதரவாளர்கள்!
மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி, பின்னர் தமிழரசி என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மறைந்த நடராஜனின் மனைவி வி.கே.சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்த சசிகலா ஒரு கட்டத்தில், அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக மாறினார்.
சசிகலா மற்றும் அவரது சொந்தங்களின் பிடியில் அ.தி.மு.க வின் நிர்வாகம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக முடிவு செய்த சசிகலா, ஜெயலலிதா போன்றே தனது தோற்றத்தை மாற்றினார்.

ஆனால் அப்போது முதல்வர் பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக மறுக்கவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தார் சசிகலா.
அதுவரை பவ்யமாக இருந்து வந்த பழனிசாமி முதல்வரான பின்னர் தனது கட்சியிலும் ஆட்சியிலும் தனது ஆளுமையை செலுத்தினார். இதனால் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என அ.தி.மு.க சிதறிபோனது. இடையில் அ.ம.மு.க என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி.தினகரன்.

அ.தி.மு.க என்ற கட்சி சிதறி போனதால் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க தோல்வியயே தழுவியது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி உருவானது. இந்நிலையில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரும்பினர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தினகரனை மட்டும் தனது கூட்டணிக்குள் சேர்த்து கொண்டு சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சி மற்றும் கூட்டணிக்குள் சேர்க்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில்தான் தனிக்கட்சி துவங்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வருகிற 24-ம் தேதி சசிகலா தலைமையில் நடக்க உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதற்கான அறிவிப்பினை சசிகலா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி விழாவிற்கான பந்தல்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை பசும்பொன் கிராமத்தில் நடைபெற்றறது.

சசிகலா ஆதரவாளரும், பசும்பொன் ஊராட்சி முன்னாள் தலைவருமான டி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த விழாவில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டும் முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான வெள்ளத்துரை மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இவர்கள், சசிகலா பங்கேற்க உள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து ஆலோசனை நடத்தினர். சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு அ.தி.மு.க-வினர் மட்டுமின்றி அவர்கள் தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


















