3-வது ஆட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு: "பயோகேஸ் நோக்கி இந்தியா நகர வேண்டும்" - பிரதம...
சர்வதேசப் பதற்றங்களால் கடன், வறுமை அதிகரிக்கும் அபாயம்... நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!
சர்வதேச அரசியல் பதற்றங்கள், போர்ச் சூழல்கள், பொருளாதார மந்தநிலை, எரிபொருள் விலையேற்றம், வேலைவாய்ப்பை இழக்கும் அச்சம் - இவையெல்லாம் இனி செய்திகள் அல்ல; நம் அன்றாட வாழ்வு. இந்நிலை தொடர்ந்து மோசமானால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என உலக வங்கியே எச்சரித்திருப்பது, பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இதே நேரத்தில், இந்தியாவில் கிரெடிட் கார்டு செலவுகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன என்பது, மக்களின் நிதி எதிர்காலத்தைப் பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கிறது. 2025-26 நிதியாண்டில் ரூ.23.62 லட்சம் கோடி கிரெடிட் கார்டுகள் மூலம் செலவிடப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்குப் பயன்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டு, இன்று அடுத்த மாத சம்பளம் வரும் வரை வாழ்க்கையைத் தாங்குவதாகி உள்ளது. உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட மக்கள் கடனை நம்பி இருக்கிறார்கள்.
கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பது பொருளாதார வளர்ச்சியின் அறிகுறி எனக் கூறப்பட்டாலும், அது மக்களின் சேமிப்பு குறைந்து வருவதையே சுட்டிக்காட்டுகிறது. சம்பாதிப்பதற்கு முன்பே செலவழிக்கும் பழக்கம் வேகமாகப் பரவிவருகிறது.
இதிலுள்ள மிகப்பெரிய ஆபத்து, மக்கள் நிதிச் சுதந்திரத்தை இழந்து வருவதுதான். சம்பளம் வந்த உடனே இ.எம்.ஐ, கிரெடிட் கார்டு பில், வட்டி என்று வருமானத்தின் பெரும்பகுதி போய்விடுகிறது. இதனால் திடீர் மருத்துவ அவசரம், வேலையிழப்பு உள்ளிட்ட சூழல்களைச் சமாளிக்கும் சக்தி குறைந்து வருகிறது.
இந்த நெருக்கடி சூழலிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் வரப்போவதில்லை. நாம்தான் நம் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கடன் வாங்குவதை நிறுத்துவது, ஏற்கெனவே இருக்கும் கடன்களைக் குறைப்பது, கிரெடிட் கார்டை வருமானம்போல பயன்படுத்தாமல் இருப்பது, சுற்றுலா, சினிமா, ஹோட்டல் போன்ற செலவுகளைத் தவிர்ப்பது, ஆயுள், மருத்துவக் காப்பீடு எடுப்பது, நெருக்கடி காலங்களைச் சமாளிக்க குறைந்தபட்ச அவசரகால நிதியை உருவாக்குவது என, இந்த செக் லிஸ்ட்டை உடனடியாக நிறைவேற்ற ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பணத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வரவிருக்கும் நிச்சயமற்ற நிதிச் சூழல்களில், நம் நிதி ஒழுக்கமும், பண மேலாண்மையுமே நம்மை பாதுகாக்கும்.
உலகம் முழுக்க நிலவும் பதற்றங்கள் எப்போது முடியும் என்பது தெரியாது. ஆனால், நிதி ஒழுக்கம், சேமிப்பு, செலவும் கட்டுப்பாடு, புத்திசாலித்தனமான முதலீடுகள் ஆகியவை இருந்தால் வர இருப்பவற்றை நம்மால் சமாளிக்க முடியும். தவறினால், நிதிச் சிக்கல் சுழலில் மாட்டிக்கொள்ள நேரிடும், கவனம் மக்களே!
- ஆசிரியர்

















