தவெக : தமிழகத்தில் ட்ரெண்ட் ஆகும் `ஆயா ராம் காயா ராம்' அரசியல்! - மக்கள் முடிவுக...
"சாக்குப்போக்கு வேண்டாம், இது எங்களுக்கு தகுதியான தோல்வி!" - ஜெர்மனி கேப்டன் கிம்மிச்சின் நேர்மை
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சித் தோல்வியடைந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரிலிருந்து ஜெர்மனி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறுவது, அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
போட்டியின் கூடுதல் நேரத்தில் ஜெர்மன் வீரர் ஜோனதன் தா அடித்த கோல், VAR தொழில்நுட்பத்தின் மூலம் நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனி கேப்டன் ஜோஷுவா கிம்மிச், நடுவர் மீதோ அல்லது VAR சர்ச்சை மீதோ பழிபோட மறுத்து, இது அணியின் தகுதியான தோல்வி என்று நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

குரூப் சுற்றில் சிறந்த மூன்றாவது இடம் பிடித்த அணிகளில் ஒன்றாக தகுதி பெற்ற பராகுவேயிடம் தோற்றது குறித்து பேசிய கிம்மிச், "எந்தவிதமான சாக்குப்போக்குகளுக்கும் இங்கு இடமில்லை. பராகுவே போன்ற ஒரு அணியை வீழ்த்தும் திறனும், லட்சியமும் எங்களிடம் இருந்திருக்க வேண்டும். 120 நிமிடங்களுக்குள் உங்களால் ஒரு போட்டியை வெல்ல முடியவில்லை என்றால், நீங்கள் வெளியேறுவதற்குத் தகுதியானவர்கள்தான்," என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
VAR சர்ச்சை குறித்துக் கேட்டபோது, "இன்றைய தோல்விக்கு நடுவரையோ அல்லது பெனால்டி ஷூட் அவுட்டையோ யாரும் குறை சொல்ல நினைக்கக் கூடாது. அதுபோன்ற ஒரு எதிரணிக்கு எதிராக அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க முடியாது. அவர்களை நேராக வீழ்த்தும் தரம் நம்மிடம் இருந்திருக்க வேண்டும். அதை நாங்கள் செய்யத் தவறிவிட்டோம்," என்று கிம்மிச் குறிப்பிட்டார்.

இந்தத் தோல்வியால் பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மேன் பதவி விலகுவாரா என்ற கேள்விக்கு, "நிச்சயமாக அவர் பதவி விலக மாட்டார் என நம்புகிறேன். இறுதியில், களத்தில் விளையாடுவது நாங்கள் தான். தோல்விக்கான முழுப் பொறுப்பையும் வீரர்களாகிய நாங்கள் தான் ஏற்க வேண்டும்," என்றார்.
தொடர்ச்சியான தோல்விகள் குறித்து மன வருத்தத்துடன் பேசிய கிம்மிச், "மிகவும் மோசமாக உணர்கிறேன். சிறுவயதில் ஜெர்மனி தேசிய அணியைப் பார்க்கும்போது, அவர்கள் எப்போதுமே அரையிறுதி, இறுதிப் போட்டி எனப் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள். அதுதான் எங்களுக்கு உத்வேகமாக இருந்தது. ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளாக எங்களால் எந்தவொரு உத்வேகத்தையும் மக்களுக்கு அளிக்க முடியவில்லை. ஒரு கேப்டனாக, இந்தத் தோல்விக்கு நான் பெரும் பொறுப்பேற்கிறேன். நாங்கள் மீண்டும் ஒருமுறை சொதப்பிவிட்டோம்," என்று வேதனையுடன் முடித்தார்.

















