கூட்டணியில் அழுத்தம் கொடுத்து தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் - வேட்பாளர் பட்டியல் வ...
சிமெண்ட் போக்குவரத்துக்காக ரயில் பாதை, டிராம்வே - எளிதில் நிஜமான கனவு! | அணை ஓசை 12
அணை கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், இயந்திரங்கள், உணவுப் பொருட்கள், கல், மணல் போன்ற பெருமளவிலான பொருட்களை எளிதாகக் கொண்டுவர போக்குவரத்து வசதிகள் மிக அவசியம். ஆரம்பத்தில் பொருட்கள் ஈரோட்டிலிருந்து சாலை வழியாக மட்டுமே மேட்டூருக்கு கொண்டுவரப்பட்டன.
ஆனால், சாலை போக்குவரத்துக்கு செலவு அதிகம், மழைக்காலங்களில் சிமெண்ட் சேதமடையும் அபாயம், கனரக இயந்திரங்களை கொண்டு செல்லும் சிரமங்கள் போன்ற காரணங்களால் சாலை முறையைக் கைவிட்டு, ரயில் பாதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. புவியியல் அடிப்படையில் மேட்டூர், சேலத்துக்கு அருகில் அமைந்திருந்ததால் சேலம்-மேட்டூருக்கிடையில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சிமெண்ட் போக்குவரத்து
மார்ட்டின் கம்பெனி என்ற நிறுவனம் தனிச் செலவில் மேச்சேரி–மேட்டூர் டிராம் பாதை அமைக்க முன்வந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இறுதியில் சேலம் – மேச்சேரி வரை நிரந்தர ரயில் பாதையும், மேச்சேரி – மேட்டூர் வரை துணை பாதையும் அமைக்கப்பட்டது.
இந்த முடிவெடுக்க தலைமைப் பொறியாளர் முல்லிங்ஸ் நிர்வாக ரீதியிலும், குறைந்த செலவில் போக்குவரத்தை நிர்மானிக்க மிக விரிவான முறையில் ஆராய்ச்சி செய்து ரயில் பாதையை வடிவமைத்துள்ளதை ஆவணங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த சமயத்தில் தலைமைப் பொறியாளர் மிகச் சரியானதொரு முடிவு எடுத்தார். இந்த மேட்டூர் அணைத் திட்டத்திற்கு 1,60,000 டன்கள் சிமெண்ட், உணவுப் பொருட்கள் மற்றும் இயந்திரத் தளவாடங்கள் போன்றவற்றை அடுத்த நான்கு வருடங்களில் சாலை மார்க்கமாக கொண்டு செல்ல 32 லாரிகள் (ஐந்து டன் திறன் கொண்டது) இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய், இயக்குவதற்கான செலவு (Running cost) ரூபாய் 7 லட்சம், சாலை பராமரிப்புக்கு ரூபாய் 5 லட்சம் என உத்தேசமாக மொத்தம் 20 லட்சம் செலவாகும் என மதிப்பிட்டார்.
அதுமட்டுமன்றி, கனரக இயந்திரங்கள் சாலை வழியாக கொண்டு செல்லும்போது சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும், சிமெண்ட் மழைக்காலங்களில் நனைந்து உபயோகமில்லா தன்மைக்குச் சென்று விடும் எனவும் கணித்தார்.
இதனால் சேலம் - மேட்டூர் இருப்புப் பாதை முழுவதும் நிரந்தரமாக போடப்பட்டு மேச்சேரி வரை ரயில்வே வாரியம் மூலம் போடுவதற்கு ஒப்புதல் தெரிவித்தார். மேச்சேரி முதல் மேட்டூர் வரை துணை இருப்புப் பாதையாக அமைக்கவும் 5.9 லட்சம் ரூபாய் மெட்ராஸ் மாகாண பங்காகவும் வருடம் தோறும் ரூபாய் 41,000 வருமானத்துக்கு உறுதியளிப்பதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டது. (G.O No.1422 Rly dt 7.5.1929 . இதுகுறித்த முழு விபரங்கள் அடங்கிய அரசாணை)
இந்த ரயில்வே திட்டம் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் போன்ற காரணங்களினால் மற்றும் பல்வேறு இடர்ப்பாடுகளின் காரணமாக 1928 இல் முடிய வேண்டியது 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடைந்து பயணிகள் உபயோகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

26 மைல்கள் நீளமுள்ள இந்த இருப்புப் பாதை மிகுந்த சிரமங்களுக்கிடையில் அதிவேகமாக அமைக்கப்பட்டது என்றே கூற வேண்டும். அடர்ந்த காடுகள் மற்றும் பாறைகள் இவற்றை சீர்படுத்தி ஒரே வருடத்தில் செய்து முடித்தது பாராட்டத்தக்க செயலாகும்.
இதன் மூலம் தினசரி சிமெண்ட் மூட்டைகள், இயந்திரத் தளவாடங்கள் சேலம் வழியாக நேரடியாக மேட்டூர் நிலையத்துக்கே வந்தன. மழையிலிருந்து பாதுகாக்க பெரிய சரக்ககம் கட்டப்பட்டதால் பொருட்கள் சேதமின்றி கையாளப்பட்டன.
ஆரம்பகால பேச்சுவார்த்தை மற்றும் திட்டமிடலில் குறிப்பிடத்தக்க அளவு நேரம் விரயமானாலும் ஒட்டுமொத்த திட்டம் விரைவாக முடிந்தது மகிழ்ச்சியான தருணமே!
சாலைப் போக்குவரத்தை விட இந்த இருப்புப் பாதை மிகுந்த பலனை பல விதங்களில் அளித்தது எனலாம். அவை கண்கூடாக தெரிந்தன. முழு அளவில் பின்னாளில் அணை கட்டுமானம் நடந்து கொண்டிருந்தபோது ஒவ்வொரு நாளும் இந்த ரயில் பாதைகளின் வழியாக சிமெண்ட் , இயந்திரத் தளவாடங்கள் தொடர்ந்து மெட்ராஸ் மற்றும் ‘ஷகாபாத்’ இடங்களிலிருந்து சிமெண்ட் வந்த வண்ணம் இருந்தன.
சிமெண்ட் மூட்டைகள் எந்தவித மாற்றும் வேலைகள் இடையில் இன்றி அப்படியே மேட்டூருக்கு வந்து சேர்ந்தது. மூட்டைகளை கீழ இறக்கும் பணி சுலபமாக இருந்தது. ஒரு பெரிய சரக்ககம் கட்டி அமைக்கப்பட்டு மேட்டூர் ரயில் நிலையத்தில் அதன் உள்ளே ரயில் வந்து நின்று சுலபமாக இறக்கும் வசதி ஏற்படுத்தித் தந்ததால் மழையிலிருந்து சிமெண்ட் நனைந்து சேதாரம் ஆகாமல் முழுவதும் காப்பாற்றப்பட்டது.
ரயில் பாதையின் இருபுறத்திலும் அகலமான மேடை மற்றும் ரயில் நிலையத்திலிருந்து அமைக்கப்பட்ட இரண்டு அடி இரயில் டிராம் மூலம் அணை கட்டப்படும் வெவ்வேறு நிலைகளுக்கு சுலபமாக ரயிலில் இருந்து 10 வேகன்கள் கொண்ட ரயிலில் மாற்றிக் கொண்டு செல்லப்பட்டது.
ரயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் "எல்லீஸ் பாலம்" அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. உண்மையாக சொல்வதென்றால் சில சமயங்களில் அதாவது கனரக இயந்திரங்கள் என ஒவ்வொரு நாளும் எல்லா நேரங்களும் மிகுந்த நெரிசல் ஏற்பட்டு தொடர் உபயோகத்தில் இந்த ரயில் நிலையமும், டிராம்வே பயன்பாடும் இருந்தன என்பது மிகவும் ஆச்சரியம் அளிக்கும் செய்தியாகும்!

ரயில்வே லைன் சேலம் - மேட்டூருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட பின் ஈரோட்டில் இருந்து சாலை வழியாக அதுவரை பயன்பாட்டில் இருந்த மாட்டு வண்டிகள், லாரிகள் முதலியவற்றுக்கு தேவையில்லாமல் போய்விட்டது. அதற்கு முன் மூன்று வருடங்களாக பயன்பாட்டில் இருந்த கூட் செட் எனப்படும் கட்டிடங்கள் ஈரோட்டில் தேவையில்லாமல் கைவிடப்பட்டது.
1929 பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வந்த ‘பயணிகள் ரயில்’ சேலம் - மேட்டூருக்கு இடையில் தொடர்ந்து ஓடியது. சில பெட்டிகள் சிமெண்ட் மற்றும் தளவாடங்களைக் கொண்டதாக இணைக்கப்பட்டு திறமையாக நிர்வகிக்கப்பட்டது ஒரு சிறப்பம்சம். ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் ஒவ்வொரு திசையிலிருந்தும் ஓடியது.
அணை கட்டி முடிக்கப்பட்ட காலங்களில் பயணிகளின் தேவை கருதி 3 ரயில்கள் ஒரு நாளைக்கு விடப்பட்டன. விழாக் காலங்களில் அதுவும் அப்போது குறிப்பாக ஆடிப்பெருக்கு (ஆடி18) விழாவின் போது காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபடுவதற்கு ஏராளமான மக்கள் மேட்டூருக்கு வருவார்கள். அந்த சமயத்தில் விழா சிறப்பு ரயில்களும் கூடுதலாக விடப்பட்டன என்பதிலிருந்து இந்த ரயில் பாதையின் வெற்றியை நாம் உணரலாம்.
அதுவரைக்கும் சேலம் மாவட்ட மற்றும் வேறு மாவட்ட மக்கள் பவானி கூடுதுறைக்குச் சென்று புனித நீராடுவதே வழக்கமாக இருந்தது. ஏனெனில் முக்கிய சாலைகள் பவானி வழியாக சென்றதால் போக்குவரத்து வசதி அங்கு மட்டுமே இருந்தது. ஆனால், சேலம் மேட்டூர் ரயில் பாதை மேட்டூர் மூலம் காவிரி ஆற்றைச் சென்றடைய மிகுந்த வசதி ஏற்படுத்தித் தந்து விட்டது உணரப்பட்டது. ஒவ்வொரு வருடமும் இந்த விழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக சென்று கொண்டே இருந்தது.
அதே நேரத்தில், அணைச்சுவர், குவாரி, பணிமனை போன்ற பகுதிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல “டிராம்வே ரயில் பாதை” அமைக்கப்பட்டது. இது இரண்டு வகைகளில் இருந்தது – நிரந்தர பாதைகள் மற்றும் தற்காலிக, தேவைக்கேற்ப மாற்றக்கூடிய பாதைகள். ஒரு கட்டத்தில் மேட்டூர் கட்டுமானப் பகுதிகளில், டிராம்வே பாதைகள் 60 மைல் நீளத்திற்கு விரிந்திருந்தன.
24 பவுண்ட் எடையுள்ள இரும்புத் தண்டவாளங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் மரத்தால் ஆன ஸ்லீப்பர்கள் பயன்படுத்தப்பட்டாலும், பின்னர் எறும்புகள், கரையாண் காரணமாக சேதமாவதை தடுக்க இரும்பு ஸ்லீப்பர்கள் பயன்படுத்தப்பட்டன.
டிராம்வே இயக்கத்திற்கு 38 இன்ஜின்கள் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அனைத்து என்ஜின்களும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்ததால் பராமரிப்பு எளிதானது. மூன்று கன அடி, இரண்டு கன அடி, ஒரு கன அடி கொள்ளளவு கொண்ட வேகன்கள் மூலம் கற்கள், மணல், சிமெண்ட், கான்கிரீட் கலவை இயந்திரங்கள் போன்றவை இடமாற்றம் செய்யப்பட்டன. சில வேகன்கள் 10–14 டன் எடையுள்ள இயந்திரங்களையும் சுமந்தன.
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட “எல்லீஸ் பாலம்” வழியாக இரட்டை ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. சீத்தாமலை மலைப்பாதையில் ரிவர்சிங் ஸ்டேஷன் அமைத்து ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் அணை கட்டுமானத்துக்கான அனைத்து பகுதிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன.
"டிராம்வே அமைப்பு"
திட்ட ஆரம்பத்தில் கணக்கிட்ட படி "டிராம்வே" என்ஜின் மற்றும் வேகன்களின் எண்ணிக்கை, அணை கட்டுமானப்பணி முழு வீச்சில் நடக்கும் போது பற்றாக்குறையாகிப் போனது. எந்த ஒரு இடத்திலும் வேகன் பொருட்களை நிரப்பும் வரை என்ஜின் வெறுமனே நின்றிருந்தால் நேர விரயம் ஏற்படும் என்பதால் ஒரு முறை முழுவதும் நிரப்பப்பட்ட வேகன்கள் வேறு ஒரு இடத்தை அடையும்போது, அங்கே கழற்றி விடப்பட்டு தயாராக இருக்கும் நிரப்பப்பட்ட வேகன்களை என்ஜின் மூலம் வேறு ஒரு தேவை உள்ள இடத்திற்கு உடனே திருப்பி அனுப்பும் படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதற்காக பெரும் திட்டமிடலும், சிரமமும், ஒருங்கிணைப்பும் தேவைப்பட்டது. வெற்றிகரமாக இவை செயல்படுத்தப்பட்டன என்பதே உண்மை!
மூன்று கன அடி கொள்ளளவு உள்ள வேகன்கள் பெரும் கற்களை கல்குவாரியிலிருந்து கல் உடைக்கும் இயந்திரங்கள் உள்ள இடத்துக்கும், மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கும் கொண்டு வர பயன்படுத்தப்பட்டன.
மிக விரைவில் கற்களை கீழே கொட்டும் திறனை கொண்டதாகவும் குறைந்த அளவு வேலையாட்களே இதற்கு போதுமானதாகவும் இருந்தது. மேலும் 2 கன அடி மற்றும் 1 கன அடி கொள்ளளவு வேகன்கள் உள்ள டிராம்வே மூலம் தேவைக்கு தகுந்தவாறு பயன்படுத்தப்பட்டன. சிறிய அளவிலான கலவை இயந்திரங்களிலிருந்து கான்கிரிட் கொண்டு செல்லவும் இந்த வேகன்கள் டிராம்வே மூலம் பயன்படுத்தப்பட்டன.

சிமெண்ட் மூட்டைகளைக் கொண்டு செல்ல 10 டன் கொள்ளளவு கொண்ட வேகன் பெட்டியும், மெஷின்கள் கொண்டு செல்ல தட்டையான மேல் புறம் உள்ள வேகன் பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டன. 14 டன்கள் எடை உள்ள ஒரே இயந்திரமும் கூட இந்த ரயில் பாதை மூலம் கொண்டு செல்லப்பட்டது என்பது பொறியாளர்களின் திறமையை பறைசாற்றுவதாக அமைந்தது! பெரிதும் பாராட்டத்தக்க நிகழ்வுகளாக இவை அப்போது பார்க்கப்பட்டது.
மேலும் அணை கட்ட உதவும் வெவ்வேறு பகுதிகளில் உதாரணமாக தண்ணீர் நிலையங்கள், மின் நிலையம், பணிமனை, சுர்க்கி தயாரிக்கும் தொழிற்சாலை, கல்லுடைக்கும் இயந்திரம் (Crusher unit) கான்கிரீட் கலவை போடும் கோபுரம் மற்றும் அதன் கலவை இயந்திரங்கள் போன்றவை தேவைப்படும் இடங்களில் நிர்மாணிக்கப்பட்டன.
இந்த "டிராம்வே" அமைப்பினால் பொருட்களின் போக்குவரத்து சுலபமாக அமைந்தது. டிராம்வே மற்றும் ரயில் பாதை அமைப்புகளால் பொருட்களை கைகளால் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறைந்தது. வேலை வேகம் அதிகரித்து, செலவு குறைந்தது. சேலம்–மேட்டூர் ரயில்வே பயணிகள் போக்குவரத்திலும் பெரும் பங்கு வகித்தது.
இதனால், மேட்டூர் அணை கட்டுமானம் வெற்றிகரமாகவும், விரைவாகவும், குறைந்த செலவிலும் நிறைவேறியது. ‘பொறியாளர் முல்லிங்ஸ்’ அவர்களின் தொலைநோக்கு பார்வையும், ரயில்வே–டிராம்வே அமைப்புகளின் ஒருங்கிணைப்பும் இதற்குப் பெரும் காரணமாக அமைந்தன.
பயணம் தொடரும்....
காவிரி நன்னீர் சிறப்பு




















