Aaromaley Review: 90ஸ் கிட்ஸின் காதலும், மேட்ரிமோனியின் மறுபக்கமும்! எமோஷன் எடுப...
`சிலையா, அரசியலா?’ - பட்டுக்கோட்டை அரசுப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்கு முட்டுக்கட்டைப் போடுவது யார்?
பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டு பழமையானது. தற்போது சுமார் 2,500 மாணவர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் இப்பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர், இன்ஜீனியர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பள்ளியில் படித்த பலர் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கின்றனர். பட்டுக்கோட்டையின் அடையாளங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடாமல் கிடப்பில் போட்டிருப்பது முன்னாள் மாணவர்களுக்கு வேதனையை அளிப்பதாக உள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டே நூற்றாண்டு விழா கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அரசு, பள்ளிக்கல்வித்துறை விழா கொண்டாடுவதற்கு எவ்வித முன்னெடுப்பும் செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் கட்சியினர் சிலர் பள்ளி நூற்றாண்டு விழா நடத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டுக்கட்டை போடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
பாரம்பர்யமான பள்ளியில் அரசியல் உள்ளே புகாமல் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். பள்ளிக்கு நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என கூறி முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார் பள்ளியின் முன்னாள் மாணவரான காங்கிரஸ் கட்சி பிரமுகர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.
ஆனாலும் நூற்றாண்டு விழவை கொண்டாடுவதற்கான முன்னெடுப்புகள் எதுவும் தொடங்காமல் இருப்பது பள்ளி மீது ஆர்வம் கொண்ட மற்றும் முன்னாள் மாணவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை ராஜேந்திரனிடம் பேசினோம், ``பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் பள்ளியில் படித்த ஆயிரகணக்கானவர்கள் உலக அரங்கில் நல்ல நிலையில் இருக்கின்றனர். பள்ளியை சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்து ஆளாகியிருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 28 தகைசால் பள்ளிகளில் இதுவும் ஒன்று. மிகப்பெரிய விளையாட்டு மைதானம், உயர் தொழில் நுட்ப ஆய்வகம், 20 ஸ்மார்ட் கிளாஸ் என தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

எங்கள் உணர்வுகளில் கலந்த இப்பள்ளி 2023ம் ஆண்டுடன் நூறாண்டை நிறைவு செய்து விட்டது. அப்போது விழா எடுப்பதற்கான முன்னெடுப்பு தொடங்கியது. ஆனால் சில காரணங்களாலும், குளறுபடிகளாலும் அப்படியே அதற்கான ஏற்பாடு நிறுத்தப்பட்டது. முன்னாள் மாணவர் என்கிற முறையில் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக கடந்த ஒரு வருடமாக தீவிரமாக முயற்சித்து வருகிறேன். நூற்றாண்டு விழாவில் பள்ளி வளாகத்திற்குள் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எனது சொந்த செலவில் சிலை செய்து வைத்துள்ளேன். விழா தொடர்பாக அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ், முரசொலி எம்.பி என பலரை சந்தித்து கோரிக்கை வைத்து விட்டேன். கல்வித்துறை ஒப்புதல் அளித்தால் போதும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்.
எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்கள் மட்டுமின்றி பல தரப்பை சேர்ந்த மாணவர்கள் கல்விக்கற்பதற்கு காரணமாகவும், சமத்துவத்தை உணர்த்தியதற்கும் எங்கள் பள்ளிக்கு விழா எடுக்க வேண்டும் என்பது முன்னாள் மாணவர்களின் விருப்பம். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விழாவை நடத்த வேண்டும் என்பது என் எண்ணம். இதற்காக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் பள்ளி நூற்றாண்டுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் பள்ளியில் தாமதம் இல்லாமல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நிலையில் இங்கு மட்டும் ஏன் அதிகாரிகள் சுணக்கம் காட்டுகிறார்கள் என தெரியவில்லை" என்றார் ஆதங்கத்துடன்.

மேலும் சிலர் கூறுகையில், `பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்த ஒருவருக்கும், ஆளும்கட்சி முக்கியப்புள்ளி ஒருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2023ல் விழா எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது திருவள்ளுவர் சிலை உள்ளே வைப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் யோசிக்கின்றனர். ஆளும்கட்சியை சேர்ந்த மற்றொரு முக்கியப்புள்ளி திருவள்ளுவர் சிலை வைப்பதை விரும்பவில்லை. இதனால் தொடர்ந்து முடுக்கட்டை போடப்படுகிறது. விழா எடுத்து அதில் தங்களை முன்னிலை படுத்தி கொள்ளவும் சிலர் முனைகிறார்கள்.
லோக்கலில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இடையே நிலவும் கோஷ்டி பூசலும் இது தடைபட்டு நிற்பதற்கு காரணம். இவைகளை களைந்து பட்டுக்கோட்டை மக்கள் வாழ்வில் ஒன்றாக கலந்த பள்ளிக்கு சிறப்பாக விழா எடுக்க வேண்டும்' என்றனர். பள்ளி வட்டாரத்தில் விசாரித்தோம், `சில காரணங்களால் நூற்றாண்டு விழா தள்ளிப்போனது. விரைவில் விழா நடத்துவதற்கான ஏற்பாடு நடக்கிறது' என்றனர்.
















