கன்னி |2026 ராகு-கேது பெயர்ச்சி: திடீர் யோகம் தேடி வரும்! - 11 பலன்கள் | கே.பி.வ...
சிவகங்கை: 'ஆப்சென்ட்' ஆன தவெக MLA-க்கள்; கையெழுத்திட்ட உதவியாளர்கள்; கொதித்த கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்.பி., தலைமையில் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் முன்னிலை வகித்தார்.
மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் சைலேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
புறக்கணித்த தவெக எம்.எல்.ஏக்கள்:
மாவட்டத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் இந்த முக்கியமான கூட்டத்தில், காரைக்குடி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான டி.கே.பிரபு, திருப்பத்தூர் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி, சிவகங்கை எம்.எல்.ஏ குழந்தைராணி, மானாமதுரை எம்.எல்.ஏ இளங்கோவன் ஆகிய தவெக மக்கள் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

கையெழுத்து சர்ச்சை:
இந்த நிலையில், கூட்டத்தின் வருகை பதிவேட்டைப் பார்வையிட்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி-க்கு அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டத்திற்கு வராத சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ குழந்தைராணிக்குப் பதிலாக, அவரது உதவியாளர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தார்.
இதைக் கண்டு கடும் அதிருப்தியடைந்த கார்த்தி சிதம்பரம், உடனடியாக அந்தக் கையெழுத்தை அழிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகளும் அந்தக் கையெழுத்தை அழித்தனர்.
கார்த்தி சிதம்பரம் காட்டம்:
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் எம்.பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
"மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டால்தான், திட்டங்களின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ளவும், மக்களின் குறைகளை அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவிக்கவும் முடியும். ஆனால், தவெக எம்.எல்.ஏக்கள் யாரும் இதில் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது.
அமைச்சருக்குப் பணிகள் இருப்பதால் பங்கேற்பதில் சிரமம் இருக்கலாம். ஆனால், மற்ற எம்.எல்.ஏக்கள் ஏன் வரவில்லை? இது குறித்து ஆட்சியரிடம் கேட்டபோது, கூட்டம் தொடர்பாக ஏற்கெனவே அவர்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். அதிலும், எம்.எல்.ஏவுக்குப் பதிலாக அவரது உதவியாளர் கையெழுத்திட்டது முற்றிலும் தவறானது. அதனால்தான் அதை நீக்கச் சொன்னேன்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்து சமூக வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.












