சிவகங்கை: 'ஆப்சென்ட்' ஆன தவெக MLA-க்கள்; கையெழுத்திட்ட உதவியாளர்கள்; கொதித்த கார...
திருச்செந்தூர்: கோயிலில் ரூபாய் நோட்டுகளைக் கிழித்தெறிந்த தாய், மகன்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகிறார்கள்.
ஆதரவற்றவர்கள், வீட்டை விட்டு வந்தவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என, கோயில் வளாகத்தில் நிரந்தரமாகவே பலரும் தங்கி இருக்கிறார்கள். காலை முதல் இரவு வரை திருக்கோயிலில் தரப்படும் தொடர் அன்னதான உணவை உண்டு தங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், திருக்கோயில் வளாகத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும், அவரது 40 வயது மகனும் கடந்த சில மாதங்களாகவே தங்கி வருதுள்ளனர். இந்த நிலையில், கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்து கொண்டு தங்கள் உடைமைகளை வைத்திருந்த பையில் இருந்து ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான ரூ.10, 20, 50, 100, 200 மற்றும் ரூ.500 வரையிலான ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துள்ளனர். திடீரென இருவரும் மாறி மாறி ரூபாய் நோட்டுகளைக் கிழித்து வீசிக் கொண்டிருந்தனர்.
கோயில் வளாகத்தில் ரூபாய் நோட்டுகள் கிழித்துப் போடப்பட்டிருந்ததைக் கண்ட பக்தர்கள் மற்றும் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். எதற்காக ரூபாய் நோட்டுகளை இப்படிக் கிழித்துப் போடுகிறீர்கள் என அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கேட்டதற்கு, “அது எங்களோட பணம். நாங்க என்ன வேணும்னாலும் செய்வோம்” எனச் சொல்லிக்கொண்டே மீண்டும் ரூபாய் நோட்டுகளைக் கிழித்துக் கீழே போடுகின்றனர்.
அப்போது அங்கு நின்ற பெண் ஒருவர், ”உழைத்த பணத்தை யாரும் இப்படி கிழிக்க மாட்டார்கள்” எனக் கூறுகிறார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், கோயில் வளாகத்தில் இருவரும் கடந்த சில நாட்களாகச் சுற்றித் திரிந்ததாகவும், அவர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர்.

பையில் இருந்த பணம் யாருடையது என்று கேட்டதற்கு எங்கள் பணம் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறி இந்தச் செயலில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தாய், மகன் இருவரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் தெரிகிறது என்கின்றனர்.
அவர்கள் தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து போலீஸார் அவர்கள் யார்? அவர்களிடம் பணம் எப்படி வந்தது? என, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














