சிவகங்கை: 'ஆப்சென்ட்' ஆன தவெக MLA-க்கள்; கையெழுத்திட்ட உதவியாளர்கள்; கொதித்த கார...
``மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்தத் தர்ஹாவும் இல்லை" - மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் பதிலடி
தமிழக பா.ஜ.க சாா்பில் அரசமைப்பு தின விழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ``நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நாம் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
டாக்டர் அம்பேத்கரையும் அவரது அரசியலமைப்புச் சட்டத்தையும் அதற்குரிய மரியாதையுடன் நாம் எப்போதும் மதித்து நடந்து வருகிறோம். ஆனால், சிலர் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்துத் தங்கள் சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை விடக் குடும்பமே முக்கியம்.

அரசியலமைப்பின் மீதான நம்பிக்கை, விழுமியங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. தேர்தல்களை நடத்தும் அரசியலமைப்பு வழிமுறைகளிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்று நாடு முழுவதும் இவ்வளவு குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் நடைபெற்ற 'SIR'-ஐ எதிர்த்ததா? இல்லை.
கேரளாவிலும் 'SIR' நடந்தது அங்கே யார் வென்றார்கள்? 'SIR' காரணமாக வெற்றி பெறுகிறோம் என்கிறார்கள். பல லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால்தான் இன்று நம்மால் நாட்டிற்குச் சேவை செய்ய முடிகிறது.
காங்கிரஸ் கட்சி தனது சொந்தத் தோல்விகளுக்கு 'SIR'-ஐ காரணம் காட்ட விரும்புகிறது. அப்போதைய பிரதமர் நேரு டாக்டர் அம்பேத்கரைத் தனது அமைச்சரவையின் உறுப்பினராக எவ்வாறு நடத்தினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் ஒருபோதும் அவரை நம்பியதில்லை.
எங்கெல்லாம் EVM இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் தோற்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிலும் EVM வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, இமாச்சலப் பிரதேசம் என எல்லா இடங்களிலும் EVM வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்திலும் நடந்தது. அங்கே இந்தக் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது? பூஜ்ஜியம்.

மதம், சாதி, மாநிலம், மொழி ஆகிய எவ்வித பாகுபாடும் இன்றி ஒவ்வொரு மனிதரும் சமம் என்ற உரிமையை நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ளது. அதனால்தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால் இன்று இந்தியாவின் பிரதமராக வர முடிகிறது.
ரயில்வே துறை மேம்பட மாநில அரசும் தனது கடமையைச் செய்ய வேண்டும். ஏனெனில், நிலம் கையகப்படுத்துவது மாநில அரசின் அதிகாரமாகும். நமக்கு சுமார் 4,800 ஹெக்டேர் நிலம் தேவை. ஆனால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலம் வெறும் 1,253 ஹெக்டேர் மட்டுமே. நிலத்தைக் கொடுக்க மாநில அரசு தயாராக இல்லாதபோது, ரயில்வே எவ்வாறு திட்டங்களைக் கட்டமைக்கும்?
இந்த மேடையிலிருந்து தவெக-விற்கு எனது வேண்டுகோள். நிலத்தைக் கையகப்படுத்துங்கள். எந்தத் தடங்கலும் இன்றி ஒவ்வொரு திட்டத்தையும் நாம் செய்து முடிப்போம். எவ்வளவு நிதி தேவையோ அந்த நிதியை நாம் தருவோம், அந்தத் திட்டங்களை முடித்துத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவோம். உங்கள் பொறுப்புகளிலிருந்து பின்வாங்காதீர்கள்.
தீபம் ஏற்றப்படுவதை வேண்டுமானால் உங்களால் தடுக்க முடியும். ஆனால் தமிழ் மக்கள் வளர்வதையும், முன்னேற்றம் அடைவதையும் உங்களால் தடுக்க முடியாது. தீபம் ஏற்றுவதைத் தடுத்ததன் மூலம், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை நீங்கள் புண்படுத்தியிருக்கிறீர்கள்.

இன்று ஒரு தீபத்தைத் தடுத்துள்ளார்கள். நாளை கோயிலுக்கு யாரும் செல்லக் கூடாது என்று சொல்வார்களா? இதுதான் அவர்கள் விருப்பமா? நமது அரசியலமைப்புச் சட்டம் கொடுத்தது இதுதானா? நமது மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ளது.
மதுரை ரயில் நிலையத்திலேயே ஒரு தீபம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்களது இறை நம்பிக்கையை இந்த ரயில் நிலையத்தின் ஓர் அங்கமாக இடம்பெறச் செய்வதை முதலமைச்சராலும் காங்கிரஸாலும் தடுக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``'புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்' என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நீங்களோ, உங்களின் கூட்டமோ ஒருபோதும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டீர்கள்; ஏனென்றால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்தத் தர்ஹாவும் இல்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb












