செய்திகள் :

சிவகங்கை மாவட்டம், கீழக்கோட்டை ஆதினமிளகி ஐயனார் கோயில்: கவலைகள் தீரும்... உணவுப் பஞ்சம் ஏற்படாது

post image

தமிழகமெங்கும் ஐயனார் கோயில்கள் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். ஐயன், ஐயனார், சாஸ்தா என்றெல்லாம் கொண்டாடப்படும் இவர் பூரணா புஷ்கலா என்னும் தன் தேவியருடன் காட்சி தரும் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

தர்மத்தின் வடிவமாகக் கருதப்படும் இந்தச் சாஸ்தாவை வழிபட்டால் சகலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு கிட்டும். குறிப்பாக திருமணப்பேறு, குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பார் ஐயனார்.

அப்படி ஒரு தலம்தான் சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்து கல்லல் மார்க்கமாக சிவகங்கை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஆதினமிளகி ஐயனார் கோயிலின் வளைவு வரை செல்கின்றன. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

ஆதினமிளகி ஐயனார் கோயில்
ஆதினமிளகி ஐயனார் கோயில்

இங்கு இரண்டு சேமக்குதிரைகளின் நடுவில் பூரணா மற்றும் புஷ்கலா தேவியருடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஆதினமிளகி ஐயனார். இந்த ஐயனார் குறித்துத் தலவரலாறு சொல்லும் தகவல் சுவாரஸ்யமானது.

1876 - ம் ஆண்டுகளில் (தாது வருடம்) ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது, சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை எனும் கிராமத்தில் இருந்த மக்கள், அருகிலிருந்த எட்டு ஊர்களுக்குப் புலம் பெயர்ந்தனர். அப்போது, அப்பகுதியின் பஞ்சத்தைப் பார்வையிட வந்த சிவகங்கை மன்னர், கீழக்கோட்டை பகுதியில் குடிசை அமைத்து, கண்ணாங்குடி என்னும் விவசாய கண்மாயை ஏற்படுத்தியதோடு, அதற்குக் காவலாகவும், ஊர் செழிக்கவும் புலம்பெயர்ந்த மக்களின் குல தெய்வமான, 'ஆதினமிளகி ஐயனார்' கோயிலைக் கட்டியதாகத் தலவரலாறு சொல்கிறது.

இந்தக் கோயிலின் அருகிலேயே சிவகங்கை மன்னரின் குலதெய்வமான பொக்கிஷக் கோட்டை காளியின் கோயிலும் அமைந்திருக்கிறது. ஐயனாரை நம்பினால் கைவிடுவாரா... ஊர் மீண்டும் செழித்தது. என்றைக்கு மன்னர் இந்தக் கோயிலைக் கட்டினாரோ அதன்பிறகு, அங்கே பஞ்சமே ஏற்பட்டதில்லை என்கிறார்கள் ஊர்மக்கள்.

அதனால்தான் இந்த ஐயனாரை வழிபட்டுச் சென்றால் வாழ்வில் உணவுப்பஞ்சமே ஏற்படாது என்கிறார்கள்.

விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் கண்ணாங்குடிக் கால்வாயில் மீன்களைப் பிடிப்பதற்கும் ஒரு வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கின்றனர் அங்குள்ள மக்கள். ஆண்டுதோறும் கண்ணாங்குடிக் கால்வாயில் சித்திரை மாதம் நீர் வற்றும் காலத்தில், ஏழு மண் பானைகளில் மீன்களைப் பிடித்து, ஐயனார் கோயில் அருகில் உள்ள சேங்கை என்னும் குளத்தில் விட்டுவிட்டு, அதன் பிறகே கண்மாயில் மீன் பிடிக்கிறார்கள். இதனால், ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் வராது என்பது மக்களின் நம்பிக்கை.

மகாசிவராத்திரி நாளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால், அனைத்துக் குடும்பக் கஷ்டங்களும், பணப்பற்றாக்குறையும் நீங்கும் என்பது நம்பிக்கை.

தர்மசாஸ்தா

நம்மை கம்பீரமான ராஜகோபுரம் வரவேற்கும். அதை வணங்கு ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் பூரணா புஷ்கலா தேவியர் சமேதராக ஆதினமிளகி ஐயனாரைத் தரிசனம் செய்யலாம். கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஐயனின் தோற்றமே நம்மைப் பரவசப்படுத்தும். கவலைகளை மறக்கச் செய்யும்.

ஒருமுறை தரிசித்துவிட்டால் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்கிற ஆவல் பிறக்கும். அப்படி ஒரு சாந்நித்தியம் அந்தச் சந்நிதானத்துக்கு. இந்த ஆலயத்தில் அகோர வீரபத்திரர், பைரவர், சின்னக்கருப்பர் மற்றும் பெரிய கருப்பர், கண்ணாங்குடியார், நீலி அம்மன், சப்த கன்னியர் ஆகியோரும் தனிச் சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜபெருமாள்: திருமண வரம் தரும் மஞ்சள்மாலை பிரார்த்தனை!

வேள்விகள் செய்வதன் மூலம் நம் வாழ்வுக்குத் தேவையான சகலத்தையும் அதேவேளையின் பெருமாளின் அனுக்கிரகத்தையும் பெறமுடியும் என்பது நம்பிக்கை. தேவர்கள் முதல் ரிஷிகள் மன்னர்கள்வரை அனைவரும் வேள்வி செய்து இறைவனை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்: பதவி யோகம் வேண்டுமா? இந்த ஈசனைத் தரிசியுங்கள்!

புராணங்களோடு தொடர்புடைய பழைமையான தலங்களைத் தரிசிப்பதே பெரும் மகிழ்ச்சியானது. பெரும்பாலும் அத்தலங்களின் பெயர்கள் அவற்றின் தலவரலாற்றோடு தொடர்புகொண்டே திகழும். கால ஓட்டத்தில் அவை திரிந்து மருவி அழைக்கப்ப... மேலும் பார்க்க

திருமண வரம் தரும் திருத்தலத்தில் சக்திவிகடன் நடத்தும் விளக்குப்பூஜை... நீங்களும் கலந்துகொள்ளலாம்!

சக்தி விகடன் மாதம்தோறும் அற்புதமான திருக்கோயில்களில் திருவிளக்குபூஜை நடத்துவது வழக்கம். விளக்கேற்றி வழிபட்டால் சகல தெய்வங்களையும் ஆராதனை செய்த பலன் கிடைக்கும். அதுவும் வெள்ளிக்கிழமை மாலைவேளையில் விளக்... மேலும் பார்க்க

எண்கண் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர்... ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயில் கும்பாபிஷேகம் LIVE

எண்கண் பிரஹன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீசுப்பிரமண்யசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் லைவ். Watch the LIVE telecast of the sacred Maha Kumbabishekam of Enkan Sri Brahmapureeswarar Temple and Sri ... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம் எண்கண் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்: கண் ஒளி அருளும் முருகன் திருத்தல கும்பாபிஷேகம்!

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது எண்கண் கிராமம். இந்த ஆலயம் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. பிரம்மன் வணங்கிய ஈசன் இவர் என்பதால் இவருக்கு பி... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில்: துக்கங்கள் தீர்ப்பாள் அஷ்டபுஜ துர்கை!

அம்பிகையின் திருவடிவங்களில் ஒன்று துர்கை. அசுரனை வதம் செய்ய எடுத்த இந்தத் திருவடிவத்தோடு அம்பிகையின் சந்நிதி பெரும்பாலும் கோயில்களின் கோஷ்டத்தில் இருந்தாலும் துர்கையே பிரதானசந்நிதிகளில் ஒன்றாகவும் துர... மேலும் பார்க்க