திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!
சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - ஹெலிகாப்டர், விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்
மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் இன்று (ஜன..28) காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்குப் பிரசாரம் செய்வதற்காக இன்று காலையில் அஜித்பவார் மும்பையில் இருந்து பாராமதிக்குப் புறப்பட்டு சென்றிருக்கிறார்.

காலை சுமார் 8:45 மணியளவில் பாராமதி விமான நிலைய ஓடுதளத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளம் அருகே விபத்துக்குள்ளானது.
விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் விமானத்தில் இருந்த இரண்டு பாதுகாவலர்கள், பைலட் மற்றும் அஜித் பவார் என அனைவரும் இறந்துவிட்டனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மகாராஷ்டிரா பா.ஜ.க மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஜித்பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் பவார் மட்டுமின்றி ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகளில் பல முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

மோகன் குமாரமங்கலம்
* 1973-ம் ஆண்டு மே 31 ஆம் தேதி, டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் எம்.பி. மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார்.
சஞ்சய் காந்தி
* 1980-ம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் ஏற்பட்ட விமான விபத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் ராஜீவ் காந்தியின் சகோதரருமான சஞ்சய் காந்தி காலமானார்.
என்.வி.என். சோமு
* 1997 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் என்.வி.என். சோமு உயிரிழந்தார்.
மாதவராவ் சிந்தியா
* 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த தனியார் விமான விபத்தில் முன்னாள் ரயில்வே அமைச்சர் மாதவராவ் சிந்தியா காலமானார்.
பாலயோகி
* 2002 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருந்த ஜி.எம்.சி. பாலயோகி உயிரிழந்தார்.
நடிகை சௌந்தர்யா
* 2004 ஆம் ஆண்டு தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சௌந்தர்யா பெங்களூரில் இருந்து தெலுங்கானா மாநிலம் கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார்.
ஓ.பி.ஜிந்தால் - சுரேந்தர் சிங்
* 2005-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஹரியானா முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஓ.பி.ஜிந்தால் மற்றும் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் சுரேந்தர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஓய்.எஸ். ராஜசேகர் ரெட்டி
* 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி நல்லமலா வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஓய்.எஸ். ராஜசேகர் ரெட்டி காலமானார்.
டோர்ஜி
* 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முதல்வர் டோர்ஜி கண்டு காலமானார்.
பிபின் ராவத்
* 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்துகுள்ளாகி முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்.
விஜய் ரூபானி
* 2025 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.















