செய்திகள் :

`தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ - விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக

post image

`என்.ஆர்.காங்கிரஸ் முக்கியம்தான்… ஆனால்.!’

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது.

அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்தார் ரங்கசாமி.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி

அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர், `தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும்' என்று கூறிவிட்டுச் சென்றார். அதையடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற  என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான்.

`த.வெ.க தலைவர் விஜய்யிடம் பேசுங்கள்…’

அதேசமயம் லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. அதற்கு முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 16-ம் தேதி இரவு அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார் முதல்வர் ரங்கசாமி.

நடிகர் விஜய்யுடன் முதல்வர் ரங்கசாமி

அப்போது, `ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதை நாம் எதிர்க்கவில்லை என்று அவர்களாகவே கூறுகிறார்கள். அடுத்த தேர்தலே வந்துவிட்டது. ஆனால் நாம் வைத்த மாநில அந்தஸ்து கோரிக்கை அப்படியே நிற்கிறது. அவர்களுக்கு `லாட்டரி' மார்ட்டின் குரூப் முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம். இல்லையென்றால் த.வெ.க தலைவர் விஜய்யிடம் பேசுங்கள்' என்று முகம் சிவந்திருக்கிறார்.

`ல.ஜ.க எங்களுடன்தான் இருக்கும், நீங்கள் வெளியேறுங்கள்...’

அதையடுத்து தனியார் விடுதியில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் காத்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை இரவோடு இரவாக சந்தித்தனர் என்.ஆர்.காங்கிரஸ் குழுவினர். அப்போது, `முதல்வர் ரங்கசாமி வரவில்லையா?’ கேட்டிருக்கிறார் மன்சுக் மாண்டவியா. அதற்கு, `அவர் வரவில்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததும் சந்திப்பார்’ என்று அவர்கள் சொன்னதும், அவரின் முகம் சட்டென சுருங்கிப் போயிருக்கிறது. அதையடுத்து அவர்களிடம் முதல்வரின் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள்.

முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

அதற்கு, `ல.ஜ.க எங்களுடன்தான் இருக்கும். வேண்டுமானால் நீங்கள் வெளியேறலாம்’ என்று பா.ஜ.க தரப்பில் ஆவேசமாகக் கூறியிருக்கிறார். அதில் உஷ்ணமான என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் குழுவினர், `என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இல்லை என்று நீங்களே அறிவித்துவிடுங்கள்’ என்று கூறிவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். தோல்வியில் முடிந்த இந்த பேச்சுவார்த்தையால், உள்ளூர் தலைவர்கள்தான் துவண்டு போயிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சருக்கு தண்ணீர் காட்டிய ரங்கசாமி!

குறிப்பாக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜ.கவைச் சேர்ந்த இரண்டு பேர், `என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால், நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை’ என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து, `த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் நாம் பேசியபோது, `ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. பா.ஜ.க அதை ஏற்கவில்லை என்றால் நாங்கள் வேறு முடிவை எடுப்போம். அதேபோல த.வெ.க-வுடனான கூட்டணிக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன' என்று முடித்துக் கொண்டார்.

பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி

இதற்கிடையில் என்.ஆர்.காங்கிரஸின் கோரிக்கையை டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கூறிய மன்சுக் மாண்டவியா, 19-ம் தேதி மதியம் 1 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை சந்திப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த தகவல் முன்கூட்டியே முதல்வர் ரங்கசாமிக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் 12.30 மணிக்கு திருச்செந்தூர் கோயிலுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார் முதல்வர் ரங்கசாமி. அவரின் இந்த தொடர் புறக்கணிப்பால் துவண்டு நிற்கிறது பா.ஜ.க

இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ``சுயேச்சை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களை வளைத்து வைத்திருக்கும் லாட்டரி சார்லஸ் மார்ட்டின், இந்த தேர்தல் அவர்களை களமிறக்கி வெற்றிபெற வைக்க நினைக்கிறார். அவர்கள் மூலம் தேர்தலுக்குப் பிறகு ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, புதுச்சேரியை கேசினோ பூமியாக்குவதுதான் அவர்கள் திட்டம். தவிர, பா.ஜ.க சார்லஸ் டீமை ஏ.டி.எம் இயந்திரமாக பார்க்கிறது. அதனால்தான் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள்” என்றார்.

இதுகுறித்து பா.ஜ.க தரப்பில் பேசியபோது, ``என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியே தொடரும். என்.டி.ஏ கூட்டணியில் ல.ஜ.க இருக்காது. இன்று முடிவு அறிவிக்கப்பட்டுவிடும்” என்றனர்.

நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்... மேலும் பார்க்க

திமுக கொடுத்த முதல் அசைன்மெண்ட்! - செய்து காட்டி இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண பிரசாரம் செய்வதற்காக கிளம்பியிருக்கிறார். ’ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி விட்டது, அவருடன் யாரும் இல்லை’ என்ற ... மேலும் பார்க்க

எ.வ.வேலு ஸ்கெட்ச் ; வளைத்து இழுக்கும் அறிவாலயம் - நழுவும் செம்மலை!

தி.மு.க-வுக்கு வரும் அ.தி.மு.க-வினர்:ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் முக்கிய தலைவர்கள், அதிருப்தியில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவது, சேர்வது வழக்கமான ஒன்று. ஆனால், யாரும் யோசித்துக் கூட ... மேலும் பார்க்க

ஈரான் - இஸ்ரேல்: "அமெரிக்காவை நாங்கள் போருக்குள் இழுக்கவில்லை" - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுப் படை போர் தொடங்கி 20 நாள்கள் நெருங்கிவிட்டது. இன்றளவும் இருநாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் தாக்குதலில் கொல்ல... மேலும் பார்க்க

தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு

வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோயில் பின்புறமாக இருக்கும், மாநகராட்சி வணிக வளாகத்துக்குள் நேற்று இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மேயர் சுஜாதா, மறைமுகமாக விளை... மேலும் பார்க்க