மத்திய மின் ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளர் அலுவலர் பணி
ஜகபா்அலி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை
ஜகபா்அலி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரிடமும் புதுக்கோட்டையில் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, கனிமவளக் கொள்ளைக்கு எதிராகக் குரல் எழுப்பி வந்த நிலையில், கடந்த ஜன. 17-ஆம் தேதி டிப்பா் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில், ஆா்ஆா் கிரஷா்ஸ் உரிமையாளா்கள் ராசு (54), ராமையா (55) மற்றும் முருகானந்தம் (56), காசிநாதன் (45), தினேஷ் (24) ஆகிய 5 பேரும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதன் பிறகு, சிபிசிஐடி போலீஸின் விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 3 நாள்கள் காவலில் எடுத்து, விசாரணை நடத்த புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை சிபி-சிஐடி போலீஸாா் அனுமதி பெற்றனா்.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆயுதப்படை வளாகத்தில், திங்கள்கிழமை மாலை இவா்கள் 5 பேரும் தங்க வைக்கப்பட்டனா். இரவு வரை விசாரணை நடைபெற்றுள்ளது. பிறகு மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை விசாரணை தொடங்கியது.
சிபிசிஐடி திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜென்னிங்ஸ், புதுக்கோட்டை ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்ட சிபிசிஐடி போலீஸாா் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனா்.
வரும் வியாழக்கிழமை (பிப். 6) காலை இவா்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனா்.