செய்திகள் :

ஞானேஷ் குமார்: `சட்டத்தை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், ரத்து நடவடிக்கை.!' - உச்ச நீதிமன்றம்

post image

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள மிக முக்கியமான வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மனிஷ் கார்க் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் சீமா கண்ணா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து சிறப்பு விசாரணைக் குழு  அமைக்க வலியுறுத்தியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்து பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார் இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் கலந்து ஆலோசிக்காமல், அவர்களது முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமல், தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்ததாகவும் குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இரண்டு பெயர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பான விதிமுறைகளில் தன்னிச்சையாகவே அவர் மாற்றங்களை கொண்டு வந்தார் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஞானேஷ் குமார்

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 10 மாத காலத்தில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தங்களை கலந்தாலோசிக்காமல் தனிச்சையாக எடுத்த முடிவுகளுக்கு எதிராக 14 முறை எழுத்துப்பூர்வமாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

வாக்காளர் பதிவு அதிகாரிகளின் சட்டப்பூர்வ அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்ப பிரிவு  அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

கோவாவில் தகுதியுள்ள 97 வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க கோவா தலைமைத் தேர்தல் அதிகாரி 8 முறை கடிதம் எழுதியும், மென்பொருளில் "Rollback" (மீண்டும் சேர்க்கும் வசதி) அளிக்கப்படாமல் அவர்கள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் நீதிமன்ற அதிகாரிகளால் மீட்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக, தேர்தல் ஆணையத்தின் பெயரிலேயே 16.10 லட்சம் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இதைப் பற்றி மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கோ அல்லது மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை; அனுமதியும் பெறப்படவில்லை.

SIR நடவடிக்கையின் போது நாடு முழுவதும் சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இது குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIT) அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க மனுவில் கோரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி சார்பில் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.

``உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வாக்களிக்கும் உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மூலம் வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. டெல்லியில் 30 சதவீத வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 25 சதவீத வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக உள்ளது. நியாயமான தேர்தல்கள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன" என்று காரசாரமாக வாதிட்டார்.

உச்சநீதிமன்றம்

SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பெயரில் 14 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அவற்றில் இரு தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபனை தெரிவித்திருந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு என்பதால், முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட வேண்டும் என்றும், ஒருமித்த முடிவு இல்லாதபட்சத்தில் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டம் கூறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்வது தொடர்பாக ஒருதலைப்பட்சமான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்தது. 

முதலில் தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதிலைப் பெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்பட்டதாக நீதிமன்றம் தற்போது கருதுவதாகவும், சட்டத்தை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது பதில்களில் தெரியவந்தால், அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அமர்வு தெரிவித்தது. 

மேலும், செய்தித்தாள் செய்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்தால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்றும், தேர்தல்களை யார் நடத்துவார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் பணிகளை மேற்கொள்ள முடியும் என விகாஸ் சிங் பதிலளித்தார்.

இதனிடையே, வழக்குடன் தொடர்புடைய மற்றொரு மனுவிலும் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆஜரானார். எஸ்ஐஆர் நடவடிக்கைகள், வாக்காளர் பட்டியல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் Form 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்களும் இந்த வழக்குகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

நீதிபதிகள், "நாங்களும் எங்கள் பணிகளைச் சரியாகச் செய்து வழக்கை ஆராய்ந்தே வந்துள்ளோம்" எனக் கூறினர். மேலும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு தாங்கள் நோட்டீஸ் பிறப்பிப்பதாகவும் கூறினர்.

சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ் குமார், விவேக் ஜோஷி
சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ் குமார், விவேக் ஜோஷி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 'படிவம் 6'-ல் (Form 6) இந்தியத் தேர்தல் ஆணையம் செய்துள்ள மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

படிவம் 6 மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

வாக்காளர் பட்டியலின் தீவிர மறுசீரமைப்புச் (SIR) செயல்பாட்டின் போது புதிதாக வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படும் படிவம் 6-ல் கூடுதல் அறிவிப்பு ஒன்றைச் சேர்க்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதில், விண்ணப்பதாரர் தனது பெயர் அல்லது அவரது பெற்றோர், தாத்தா-பாட்டி பெயர் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததா என்ற தகவலைக் குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த கூடுதல் நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் செப்டம்பர் 26 அன்று செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய அமர்வு, "மாற்றம் செய்யப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும், ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் போது, இந்த படிவத்தில் மாற்றங்களைச் செய்தது யார் என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் ஆணையத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையாளர்களே எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 32-ன் கீழ் தவறிழைத்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து; "மேல்முறையீடு செய்க" - திருமா

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீதானக் குற்றப் பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விசிக த... மேலும் பார்க்க

நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து - உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், கடந்த 2025 ஜூலை 27 ஆம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் வெட்டி படுகொலை செய்ய... மேலும் பார்க்க

`'மாமா' என்று நீ அழைத்த நபர் உனக்கு மிக மோசமான செயலைச் செய்தார்; ஆனால் நீ..!' - நெகிழ வைத்த தீர்ப்பு

டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுமித் என்பவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்க... மேலும் பார்க்க

`2,700 மதிப்புள்ள புற்றுநோய் மருந்து 27,000-க்கு விற்பனை; இது பகல்கொள்ளை'- உச்ச நீதிமன்றம் கண்டனம்!

உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணையின்போது, மருந்து நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் அநியாய லாபக் கொள்ளையைச் சுட... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்' இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் காவலில் அடைக்கக் கோரும் சி.பி.ஐ-யின் கோரி... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்" - உயர் நீதிமன்றம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல... மேலும் பார்க்க