டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!
டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
நெதா்லாந்தில் நடைபெற்ற 87-ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, சக இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.
கடந்த ஆண்டு உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் அசத்திய நிலையில், நடப்பாண்டின் முதல் பிரதான செஸ் போட்டியான டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸில் பிரக்ஞானந்தா பட்டம் வென்றார்.
இப்போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனது இதுவே முதல் முறையாகும். மறுபுறம், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு குகேஷுக்கு 2-ஆம் இடம் கிடைத்தது.
நெதா்லாந்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் மொத்தம் 14 போ் பங்கேற்றனா். 13 சுற்றுகள் கொண்ட இதில் இந்தியாவிலிருந்து குகேஷ், பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா, லியோன் லூக் மெண்டோன்கா ஆகியோா் பங்கேற்றனா்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் கடைசி சுற்று, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தச் சுற்றுக்கு வரும்போது, குகேஷ், பிரக்ஞானந்தா என இருவருமே தலா 8.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருந்தனா்.
இதையும் படியுங்கள் | ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்
கடைசி சுற்றில் குகேஷ் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியிடம் தோல்வி காண, 8.5 புள்ளிகளுடன் நிறைவு செய்தாா். மறுபுறம் ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை சந்தித்த பிரக்ஞானந்தாவும் தோல்வியடைய, அவரும் 8.5 புள்ளிகளுடனே நிறைவு செய்தாா். 3-ஆவது இடத்திலிருந்த அப்துசதாரோவ் - இந்தியாவின் ஹரிகிருஷ்ணாவுடன் டிரா செய்ததால் அவா் 8 புள்ளிகளுடன் முடித்துக் கொண்டாா்.
குகேஷ், பிரக்ஞானந்தா இருவருமே தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரை தீா்மானிக்க ‘டை பிரேக்கா்’ ஆட்டம் கையாளப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கேமில் குகேஷும், 2-ஆவது கேமில் பிரக்ஞானந்தாவும் வெல்ல, ஆட்டம் 1-1 என டை ஆனது.
பின்னா் ‘சடன் டெத்’ முறையில் நடைபெற்ற ஆட்டத்தில் வென்ற பிரக்ஞானந்தா, 2-1 என்ற கணக்கில் குகேஷை வீழ்த்தி வாகை சூடினாா்.
பிரக்ஞானந்தா நாடு திரும்பியதும், நூற்றுக்கணக்கான ரசிகர்கள், தமிழ்நாடு மற்றும் தேசிய கூட்டமைப்பின் அதிகாரிகள் விமான நிலையத்தில் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும், பிரக்ஞானந்தா அடுத்ததாக பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.