காங்கிரஸை `போனால் போங்கள்' என்ற உத்தவ், இப்போது கூட்டணிக்கு அழைக்கிறார்! - மும்ப...
தஞ்சை, தண்டத்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில்: திருமண வரம் தரும்; கயிலாய தரிசனப் பலன்!
ஈசன் முனிவர்களும் தேவர்களும் வேண்டியதற்கு இணங்க திருநடனம் புரிந்து அருளினார். அவ்வாறு அவர் நடனம் புரிந்தபோது அவரின் சலங்கைகளில் இருந்த மணிகள் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த இடங்கள் எல்லாம் புனிதத் தலங்களாக மாற அங்கெல்லாம் ஈசனின் ஆலயமும் எழும்பியது. அப்படிப்பட்ட புண்ணிய பூமிகளில் ஒன்றுதான் தண்டத்தோட்டம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது இத்தலம். அரசலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஈசன் நடனபுரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். எனவே இத்தலம் சிதம்பரத்துக்கு இணையான தலம் என்கிறார்கள். இத்தலத்துக்கு நடனபுரி, நர்த்தனபுரி, தாண்டவர்தோட்டம் என்ற சிறப்புப் பெயர்களும் உள்ளதாகச் சொல்கிறது தலபுராணம். சுந்தரமூர்த்தி நாயனார் தன் பாடல்களில் இத்தலத்தை வைப்புத்தலமாகப் பாடியிருக்கிறார்.

இந்தத் தலத்தில் உள்ள விநாயகருக்கு, 'மணிகட்டி விநாயகர்' என்பது திருநாமம். இந்தத் திருநாமம் வந்தது இத்தல புராணத்தை அடிப்படையாக வைத்துதான். சிவனார் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியபோது அவரின் காலில் இருந்த சலங்கை மணிகள் தெறித்து விழுந்ததைக் கண்டு பதறிய விநாயகர், ஓடோடிச் சென்று, அந்த மணியை எடுத்து தந்தையின் சலங்கையில் கட்டினாராம்.
திருமணம் கூடிவரும் திருத்தலம்
இத்தலம் திருமணப் பரிகாரத் தலமாகவும் சொல்லப்படுகிறது. சிவன் - பார்வதியின் திருமணக் கோலத்தைத் தரிசிக்கும் விருப்பத்துடன் அகத்தியர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. அவர் வழிபட்ட சிவலிங்கம், அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமத்துடன் நடனபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. எனவே இத்தலத்துக்கு வந்து ஈசனை தரிசனம் செய்தாலே திருமணத் தடைகள் விலகும் என்கிறார்கள். நடனபுரீஸ்வரர் கோயிலில் உத்ஸவர் அழகுத் திருமேனியரான திருக்கல்யாண சுந்தரமூர்த்தி. இவர் இங்கே கார்த்தியாயினி சமேதராக மாப்பிள்ளை ஸ்வாமியாக அருள்கிறார். எனவே, இவ்வூர் கல்யாணத் தடை நீக்கும் தலமாக வும் திகழ்கிறது. மேலும் அகத்தியருக்கு திருக்கயிலாயக் காட்சி அருளிய தலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் கயிலாயத்துக்கே சென்று ஈசனை வழிபட்ட புண்ணிய பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.

இத்தலத்தின் மகிமையை அறிந்த மகாபெரியவா 1965-ஆம் வருடத்தில், சாதுர்மாஸ்ய விரதத்தை இங்கே தங்கிக் கடைப்பிடித்தாராம். பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திருப்பணிகள் செய்து வழிபட்டுள்ளனர். குறிப்பாக, பல்லவர் காலத்து 11 செப்பேடுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.
சோழ தேசத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த அந்தணர்கள் சுமார் மூவாயிரம் பேர், ஒரு காலகட்டத்தில், கேரளாவின் பாலக்காடு பகுதிக்குச் சென்று குடியேறினர். அப்போது, சுவாமி மற்றும் அம்பாளை சாளக்கிராமத் திருமேனியாகச் செய்து, இந்தத் தலத்தில் இருந்து பிடிமண்ணையும் எடுத்துக்கொண்டு, பாலக்காடு அருகில் உள்ள தங்கைக்காடு கிராமத்தில் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பி வழிபட்டனர். அடுத்தடுத்த தலைமுறையினர், தங்களின் குலதெய்வம் தெரியாது போனார்கள். இதனால், அவர்கள் குடும்பங்களில் சுமங்கலிப் பெண்களுக்கு துர்மரணமும் திடீர் நோயும் வந்தனவாம்.
இதையடுத்து பிரஸ்னம் பார்க்கும் தீவிரத்தில் இறங்க... ஒருசிலர் மகாபெரியவாளைத் தரிசித்து, தங்களின் வேதனையைத் தெரிவித்தனர். அனைத்தையும் கேட்ட மகாபெரியவா, அடையாளம் காட்டிய திருவிடம்... தண்டந்தோட்டம்.
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளகிழக்கு, தெற்கு என இரண்டு வாசல் கொண்ட கோயில்; அதில் தெற்குப் பார்த்த வாசலே அதிகம் புழக்கத்தில் இருக்கும்; அம்பாளும் தெற்குப் பார்த்தே காட்சி தருவாள்; நுழைந்ததும் வில்வமரமும் தீர்த்தக் கிணறும் இருக்கும் என கோயிலை அப்படியே விவரித்து, பாலக்காடு அந்தணர்களின் குலதெய்வத்தைக் காட்டி அருளினார் காஞ்சி மகாபெரியவா. அதேநேரம், கேரளாவில் பிரஸ்னம் பார்த்ததில், தண்டந்தோட்டம் தலம் பற்றிய தகவல்கள் வரவே, சிலிர்த்துப் போனார்கள். அப்படி நடனபுரீஸ்வரரைக் குலதெய்வமாகக் கொண்ட அநேகர் நாடுமுழுவதும் உள்ளனர்.

விளக்கேற்றினால் வாழ்க்கையில் வெளிச்சம்
இங்கு, 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்திருக் கிறார் குரு தட்சிணாமூர்த்தி. எனவே, இவரை ராசி மண்டல குரு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கினால், 12 ராசிக்காரர்களின் சகல தோஷங்களையும் போக்கியருள்வார் என்பது ஐதீகம். பெளர்ணமி தினத்தில் இந்த ஆலயத்தில் விளக்கேற்றிவைத்து வழிபடுவது விசேஷம். தொடர்ந்து 11 பெளர்ணமி தினங்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று இறைவன் நடனபுரீஸ்வரரையும் அம்பாள் சிவகாம சுந்தரியையும் மனமுருக வழிபடவேண்டும்.
அத்துடன் அவரவர் வயதுக்கு ஏற்ற எண்ணிக்கையில் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடவேண்டும். இதனால் சுபகாரியங்களிலும் புதிய முயற்சிகளிலும் ஏற்படும் தடைகள் யாவும் நீங்கும். தோஷங்கள் விலகி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.




















