திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் - முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு ...
தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! - தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
'அதிகாரம் கொடியது!'
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொள்ளா மைல்களை கடப்பார்கள். நிலப்பிரபுக்களாக இருந்த பண்ணையார்களின் அடியாட்கள், எதிர்க்கட்சிகளின் குண்டர்கள், காவல்துறை என யார் கண்ணிலும் சிக்கக் கூடாது.
தற்காப்புக்கு பையில் வெடிகுண்டுகளையும் வைத்திருப்பார்கள். 1949 டிசம்பர் 20, நள்ளிரவில் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டங்களையெல்லாம் முடித்துவிட்டு கட்சித் தோழர் ஒருவரின் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் நல்லகண்ணு. காவல்துறைக்கு துப்பு கிடைக்கிறது. நெல்லையின் அந்த புலியூர் குறிச்சி கிராமத்துக்குள் காவலர்கள் சடசடவென இறங்குகிறார்கள். நல்லகண்ணு கைது செய்யப்படுகிறார். சொல்லொனா துயரத்துக்கு ஆளாகிறார். அதிகாரத்தின் பூட்ஸ் கால்கள் நல்லகண்ணுவின் நெஞ்சில் ஏறி மிதித்தன. அதிகாரி ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்து நல்லகண்ணுவின் மீசையை கருக்கினார். உதட்டின் மேல் பகுதியிலும் சூடு வைத்து உயிர்போகும் வலியை கொடுக்கிறார்.
நல்லகண்ணு அப்போதும் மனம் தளரவில்லை. தீர்க்கமான நெஞ்சத்தோடு தன்னுடைய தோழர்களை பற்றி எந்தத் தகவலையும் அவர் காவல்துறையிடம் சொல்லவில்லை. விளைவாக, நல்லகண்ணு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் சித்ரவதைகள் தொடர்ந்தது.
'நெல்லை சதி!'
'நெல்லை சதி' என்ற பெயரில் அதிகாரத்துக்கு எதிராக போராடிய 109 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் 16 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதில், நல்லகண்ணு உட்பட ப.மாணிக்கம், ஐ.மாயாண்டி, பாரதி, பொன்னு ஆர்.கிருஷ்ணன், கே.ப.எஸ்.மணி, அழகுமுத்து, அ.வேலாயுதம், ஆர்.பழனிசாமி என 9 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
நல்லகண்ணு சிறையிலிருந்த நாட்களிலும் நிறைய கொடூரங்கள் நடந்திருந்தது. மில் தொழிலாளர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் போராடிய உசிலம்பட்டி பாலு, ஒரு காவலர் கொலையுண்ட வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பாலு தூக்குமேடை ஏறிய சமயத்தில், தூக்குத் தண்டனைக்கு எதிராக மதுரை சிறையிலிருந்து கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் நல்லகண்ணு.
'நெஞ்சுரமூட்டிய சிறை!'
அதேமாதிரி, நல்லகண்ணுவுடன் ஆயுள்தண்டனை பெற்றிருந்த அ.வேலாயுதமும் தண்டனைக் காலத்திலேயே காச நோயினால் அவதிப்பட்டு உயிரிழந்தார். வேலாயுதம் ஏழ்மை குடிகொண்ட குடும்பத்தவர். நல்லகண்ணுவுடன் வேலாயுதம் சிறையிலிருந்த போதுதான் அவருக்கு மகன் பிறந்திருந்தான். குடும்பச்சூழல், மகனை காண முடியாத துயரம் என வேலாயுதத்தின் மனவேதனைகள் அத்தனையையும் அருகிலிருந்து பார்த்து நொந்துப்போனார் நல்லகண்ணு.
சிறை ஒரு மனிதனை உலுக்கிவிடும். மனச்சத்து அத்தனையையும் உருக்குலைத்துவிடும். அதுவும் நல்லகண்ணு சிறையிலிருந்த காலத்தில் அவரின் மன உறுதியை உடைக்கும் வகையில்தான் அத்தனை சம்பவங்களும் நடந்திருந்தது. ஆனாலும் அவர் அசரவில்லை. மக்களுக்கு முன் நிற்கும் போராளி இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்தது.
இவ்வளவு நெஞ்சுரத்தை அவர் பெறக் காரணம், அவர் மாணவப் பருவத்திலிருந்தே தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கிவிட்டார். காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு என அப்போது தேசியளவில் முன் நின்ற தலைவர்கள் மீது பெரும் ஈர்ப்பைக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களிலும் மாணவராக பங்கேற்றிருந்தார். தேசியவாத எண்ணம் கொண்ட காங்கிரஸின் மீதான நல்லகண்ணுவின் ஈர்ப்பை அவரின் ஆசிரியர் பலவேசம்தான் மார்க்சிய தத்துவங்களின் மீது திருப்பிவிடுகிறார்.
'சக தோழர்களின் வாழ்க்கைப் பாடம்!'
ஸ்ரீவைகுண்டத்தில் 'காரநேஷன்' என்கிற பள்ளியில்தான் நல்லகண்ணு பயின்றார். பலவேசம் அந்தப் பள்ளியின் இந்தி ஆசிரியர். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள வாசகசாலை ஒன்றில் பத்திரிகைகளை படிப்பது மாணவராக இருந்த நல்லகண்ணுவின் வழக்கம். அவரின் வாசிப்புப் பழக்கத்தை பார்த்துவிட்டு பலவேசம்தான் 'சோவியத் ருஷ்யா' 'கார்ல்மாக்ஸ் வரலாறு' போன்ற நூல்களை வாசிக்கக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்துதான் கம்யூனிச சித்தாந்தத்தின் மீது நல்லகண்ணுவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. மாணவ இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் மைக் கட்டுவது, சேர்களை ஒழுங்குப்படுத்துவது போன்ற ஒத்தாசைகளை செய்துகொண்டே அவர்கள் பேசும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டார். தோழர் பாலனும் தோழர் ஜீவாவும்தான் நல்லகண்ணுவின் ஆஸ்தானங்கள். அவர்களிடமிருந்துதான் எளிமையையும் கொள்கைப்பிடிப்பையும் அவர் கற்றுக்கொண்டார்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் பஞ்சம் நிலவிய சமயத்தில், நிலப்பிரபுக்கள் நெல்லை பதுக்கி வைக்கத் தொடங்கினர். ஆங்கிலேய அரசும் ஏழை மக்களுக்கு உளுத்துப்போன அரிசியையும் சோளத்தையும் கொடுத்தனர். இதற்கெதிராக ஸ்ரீவைகுண்டத்தில் பாலன் தலைமையில் 'உளுத்த சோள எதிர்ப்புத் தினம்' என பொதுக்கூட்டம் நடத்தினர். அந்தப் பொதுக்கூட்டத்தில் ஓடியாடி அத்தனை வேலைகளையும் நல்லகண்ணுவே செய்திருந்தார். பாலனின் உரைகளை கேட்பது நல்லகண்ணுவுக்கு அவ்வளவு பிடிக்கும். அவரின் உரைகள்தான் நல்லகண்ணுவை செதுக்கின. நெல்லை பதுக்கி வைத்திருந்தவர்களை தேடித் தேடிப் பிடித்து பதுக்கி வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளை வெளியே கொண்டு வந்த பாலனின் தீரம் நல்லகண்ணுவுக்கு நெஞ்சுரத்தை கொடுத்தது.
'வேண்டாம் சென்னை!'
தோழர் ஜீவா நல்லகண்ணுவை ஜனசக்தியில் பணியாற்றுமாறு சென்னைக்கு அழைத்துக் கொண்டார். ஆனால், சென்னை பிடிக்காமல் நல்லகண்ணு நெல்லைக்கே திரும்பினார். அங்கு உடனிருந்த தோழர்களுடன் சேர்ந்து விவசாய சங்கங்களை கட்டியெழுப்பினார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடினார். தோழர் சீனிவாசராவ் போன்றோருடன் ஏற்பட்ட நெருக்கம் நல்லகண்ணுவை இன்னுமே எளிமைப்படுத்தியது.

1960 களின் தொடக்கத்தில் நில உச்சவரம்பு மசோதாவில் திருத்தம் கொண்டுவரக் கோரி இடதுசாரிகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அந்தப் போராட்டத்திற்காக சீனிவாசராவ் நெல்லை வருகிறார். போராடுகிறவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நிகழ்த்தும் அடக்குமுறைகளைக்கு எதிராகவும் விவசாயிகளுக்கான உரிமைகளைக் கோரியும் உடல் நலிவுற்றிந்த சமயத்திலும் வீரியமாக உரையாற்றுகிறார். அந்த சமயத்தில் அவருக்கு தீவிர ஆஸ்துமா. நெல்லையில் போராட்டத்தை முடித்துவிட்டு அவர் தஞ்சைக்கு செல்ல வேண்டும். சீனிவாசராவை வழியனுப்ப சில தோழர்களுடன் நல்லகண்ணுவும் செல்கிறார். உடல் நலிவுற்றிருப்பதால் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யுமாறு நல்லகண்ணு கூறுகிறார். சீனிவாசராவ் மறுக்கிறார். மீண்டும் அழுத்தி கூறுகிறார். சீனிவாசராவ் ஏற்றுக்கொள்ளவே இல்லை. துண்டை விரித்துக் கொள்கிற இடம் எனக்கு போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்துகொள்கிறேன் என விடாப்பிடியாக பேசிவிட்டு கிளம்பியிருக்கிறார். கடைசி மூச்சு வரை மக்களுக்காக போராடியே ஓய்ந்தார் சீனிவாசராவ்.
'பெண் கொடுத்த தோழர்!'
நல்லகண்ணு பிறந்தது வசதியான குடும்பமாக இருக்கலாம். ஆனால், அவர் பார்த்து வளர்ந்து உடன் பயணித்ததெல்லாம் தூக்குமேடை பாலு, அ.வேலாயுதம், பாலன், ஜீவா, சீனிவாசராவ் போன்ற எளிமையும் போராட்டக்குணமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற செங்கொடி ஏந்திய தோழர்களுடன்தான். ஒருவகையில் நல்லகண்ணுவை அரவணைத்துக் கொண்டதுமே இதே மாதிரியான தோழர் ஒருவர்தான். சதி வழக்கில் சிறை சென்று நல்லகண்ணு விடுதலை ஆகி வெளியே வரும்போது அவருக்கு வயது முப்பதை கடந்துவிட்டது. நல்லகண்ணுவுக்கு திருமணம் செய்துகொள்ள பெண் கொடுத்தது ஒரு கம்யூனிஸ்ட் தோழர்தான்.

அன்னசாமி என்கிற அவர் சாதி ஒழிப்பு மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் என மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடியவர். அன்னசாமிக்கு மொத்தம் 11 பிள்ளைகள். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த ஆண்டில் அவருக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அந்தப் பெண் பிள்ளைக்கு 'கேரள குமாரி' என பெயரிட்டார். அந்தளவுக்கு கம்யூனிஸ்ட். அவர்தான் தனக்கு இரண்டாவதாக பிறந்த மகள் ரஞ்சிதத்தை நல்லகண்ணுவுக்கு கட்டி வைத்தார். தன்னுடைய தந்தையின் போராட்ட வாழ்வை பார்த்தே வளர்ந்திருந்ததால் ரஞ்சிதம்மாள் நல்லகண்ணுவுக்கும் உற்றத் துணையாக இருந்தார். மாமனார் அன்னசாமியும் நல்லகண்ணுவுக்கு ஒரு முன்னோடி. நிலமீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு இருவரும் ஒரே சிறையில்தான் காலத்தை கழித்திருந்தனர்.
'ஆடம்பரம் அநாவசியம்!'
எந்தத் துதிபாடல்களையும் புகழுரைகளையும் விரும்பாதவர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கம் போல தன்னை தன்னுடைய பெயர் சுருக்கத்தை வைத்து 'ஆர்.என்.கே தோழர்!' என அழைப்பதை மட்டுமே நல்லகண்ணு எப்போதும் விரும்பினார். 1992 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார். 2005 வரை அவர்தான் மாநிலச் செயலாளர். மாநிலச் செயலாளராக ஆன பிறகு மணப்பாறைக்கு முதல் பொதுக்கூட்டத்தில் பேசச் செல்கிறார். அவர் காரில் வந்து இறங்குவார் என எதிர்பார்க்க எளிமையாக ஆட்டோவில் வந்து இறங்கியிருக்கிறார்.

தன்னை வரவேற்க தெருக்களில் கட்டியிருந்த லைட்டுகளையும் தோராணங்களையும் பார்த்துவிட்டு, 'ஊரில் எதுவும் கோவில் திருவிழாவா?' என உள்ளூர் நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். 'உங்களை வரவேற்கத்தான் எல்லா ஏற்பாடும்...' என நிர்வாகிகள் பதில் நல்லகண்ணுவின் முகம் வாடிவிட்டது. மேடையில் அவருக்கு ஆளுயர மாலை போட திட்டமிட்டிருந்தனர். அதையும் வேண்டாமென கறாராக கூறிவிட்டார். பின்னர் நிர்வாகிகளை அழைத்து, 'நாட்டோட நிலைமையை இந்த மாலையும் லைட்டுமா எடுத்து சொல்லப்போகுது? இந்த செலவையெல்லாம் கட்சிக்கு நிதியா கொடுத்திருந்தா ஒரு கம்யூனிஸ்ட்டு நாடாளுமன்றம் போயி மக்கள் பிரச்னைகளை பேச உதவியா இருந்திருக்குமே..' என அறிவுரையும் கூறியிருக்கிறார்.
80-வது பிறந்தநாளில் கட்சி திரட்டிக் கொடுத்த நிதி மொத்தத்தையும் அப்படியே கட்சிக்கே மட்டும் நிதியாக திருப்பிக் கொடுத்தார். அவருக்கு வெகுமதியாக வந்த எல்லாமே கட்சிக்குதான். படோபடம் மட்டுமே ஒரே மொழியாகக் கொண்ட அரசியலில் இவ்வளவு எளிமையாக சிந்தித்ததால்தான் என்னவோ தேர்தல் அரசியலில் ஒரு முறை கூட அவரால் வெல்ல முடியாமல் போனது.

1990 களில் நெல்லையில் கொடூரமான சாதியக் கலவரங்கள் நடந்துகொண்டிருந்தது. இரு வேறு சமூகங்களுக்கிடையே தொடர் மோதல், தொடர் கொலைகள். சாதி ஒழிப்புக்காக தீவிரமாக போராடிய நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமியை வீடு புகுந்து வெட்டினர். அந்த சமயத்தில் நல்லகண்ணு மாநிலச் செயலாளர். அவரால் விஷயத்தை பெரிதுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், தனிமனிதன் ஒருவனின் துயரமும் ஆக்ரோஷமும் சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக நல்லகண்ணு அமைதி காத்தார். ஒவ்வொரு இழப்புமே நல்லகண்ணுவிற்குள் இருக்கும் போராளிக்கு இன்னும் உரத்தையே ஏற்றியது. மாமனார் கொல்லப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே சாதியக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டி கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். 'என் நாடு, என் மக்கள்..' என்பதுதான் நல்லகண்ணுவின் மார்க்சியம். அந்தக் கருத்திலும் கொள்கைப் பிடிப்பிலும் கடைசி வரைக்குமே சமரசம் செய்துகொள்ளாமல்தான் இருந்தார்.
'கட்சிதான் குடும்பம்!'
ஒரு பேட்டியில் தோழர் நல்லகண்ணுவின் மனைவி இப்படி கூறியிருப்பார். அதாவது, 'மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் விடுபட்டதும் நான் ரொம்பவே மகிழ்ந்தேன். இனி போதுமான அளவுக்கு ஓய்வெடுப்பார் என எண்ணினேன். ஆனால், மீண்டும் முன்பை விட வேகமாக அலைந்துகொண்டுதான் இருக்கிறார். என்ன செய்ய? குடும்பத்தில் வளர்ந்ததை விட அதிகம் கட்சியில்தான் வளர்ந்தார். உறவினர்களோடு இருப்பதை விட கட்சித் தோழர்களோடும் மக்களோடும் இருப்பதைத்தான் விரும்புவார். அதுதான் அவருடைய உடல்நிலைக்கும் ஒத்ததாக இருக்கிறது. அதை நிறுத்தினால் அவருடைய உடம்பு ஒத்துக்கொள்ளாது.' எனக் கூறியிருப்பார். தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு வாழ்வை இதைவிட ஆகச்சிறப்பான வார்த்தைகளில் கோர்க்க முடியாது.

அதிகாரம் கோரமானது. அதிகாரம் எளிய மக்களை தங்களின் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும். தங்களுக்கு எதிராக நிற்பவர்களை கடித்து குதறி விரட்டியடிக்கும். தோழர் நல்லகண்ணுவை அப்படி எத்தனையோ முறை விரட்டியடிக்க முயன்றிருக்கிறது. மீசை மயிரை கருக்கியது தோழரை விரட்டியடிக்க அதிகாரம் கையிலெடுத்த முதல் முயற்சி. அது தோல்வியில் முடிந்தது. அதற்கு பிறகான அத்தனை முயற்சிகளுக்கும் அதே முடிவுதான். ஏனெனில், நல்லகண்ணு எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கமும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின் பக்கம் மட்டுமே நின்றார். நீதியின் குரல் தோழருக்குள் ஒரு அணையாத செந்தீயை மூட்டியது.

'இருட்டறையில் மெழுகுவத்தியை கொளுத்தி வைக்கிறோம். எரிந்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால், மெழுகுவத்தியும் எரிந்து உருகிவிடுகிறது. ஒளிகொடுத்து தன்னை அழித்துக்கொள்ளும் மெழுகுவத்தியைப் போல ஒரு சில லட்சிய வீரர்களின் வாழ்க்கையும் அமைந்துவிடுகிறது.' சீனிவாசராவுக்கு நல்லகண்ணு எழுதிய இரங்கல் குறிப்பு இது. நல்லகண்ணுவும் இந்த தமிழ்ச் சமூகத்தின் பாட்டாளி வர்க்கத்துக்காக இன்றைக்கும் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கும் உன்னத ஒளியே!














