திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் - முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு ...
``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்..." - ஆற்காடு நவாப் பேட்டி
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தவெக சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், கலந்துகொண்ட ஆற்காடு இளவரசரின் மூத்த மகனும் இளவரசருக்கு திவானுமான நவாப் ஜாதா முகமது ஆசிப் அலி, `தமிழ்நாடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலம்' என்று பேசியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
``விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் நீங்கள் பங்கேற்கக் காரணம் என்ன?''
``ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் என எந்த ஒரு மத விழாவாக இருந்தாலும், அழைப்பு வந்தால் எங்கள் குடும்பம் அதில் பங்கேற்போம். நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், பள்ளி மற்று கல்லூரியை கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் படித்தவன். என் மகனுக்கு ஜீசஸ் பெயரான ஈஷா என்று பெயரிட்டுள்ளேன். மதங்களைக் கடந்த ஒற்றுமையைப் பேண வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனடிப்படையிலேயே, விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவிற்கு மத நல்லிணக்கம் குறித்துப் பேசுவதற்காக ஒரு பேச்சாளராக என்னை அழைத்தார்கள்.''
``தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று விஜய் தொடர்ந்து பேசிவரும் நிலையில், தவெக மேடையில், `தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு அதிமுள்ள மாநிலம்' என்று நீங்கள் பேசியதுதான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இப்போதும் அந்த கருத்தில் உடன்படுகிறீர்களா?"
``என்னுடைய முழு பேச்சையும் கேட்டால் நான் என்ன அர்த்ததில் பேசினேன் என்பது உங்களுக்குப் புரியும். நான் பேசியது தமிழ்நாட்டின் சூழல் குறித்த ஒரு பொதுவான கருத்து. ஒருகுறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடக்கும் குற்றங்களுக்கும் நான் பேசியதற்கும் தொடர்பு இல்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலங்களில் ஒன்று என்பதில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நான் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் தனியாக எடுத்துப்போட்டதால் அது விவாதமாகியிருக்கிறது. நாம் அனைவரும் தமிழ்நாட்டின் குழந்தைகள் என்பதே எனது எண்ணம் மற்றபடி எனக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை''

``தனிப்பட்ட வகையில் விஜய்யை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
``அவர் மிகவும் எளிமையான அன்பான மனிதர். கிறிஸ்துமஸ் விழாவின்போது, நான் அமர்ந்திருந்த இருக்கை உடைந்துவிட்டது. அதை யாருமே கவனிகவில்லை. ஆனால், விஜய் அதை கவனித்து, உடனடியாக எழுந்து வந்து எனக்கு உதவினார். வேறு நாற்காலியை மாற்றித்தரும்படி அவரது கட்சியினரிடம் அறிவுறுத்தினார். அவ்வளவு பெரிய மேடையில் விஜய் நடந்துகொண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்றபடி அவர் இந்த மண்ணின் மைந்தர்; மக்களுக்குச் சேவை செய்ய அவருக்கும் முழு உரிமை உண்டு.''
``மனிதநேயம் குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறீர்கள் விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது 41 உயிர்கள் பலியானது குறித்து உங்கள் பார்வை என்ன?"
``41 உயிர்கள் போனது என்பது வேடிக்கையான விஷயம் அல்ல. விபத்திற்கும் கொலைக்கும் வித்தியாசம் உள்ளது; அது உள்நோக்கத்துடன் செய்யப்படவில்லை. இதுபோன்ற விபத்துகளை வைத்து அரசியல் செய்யாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம்''

``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விஜய்யை நீங்கள் எப்படி ஒப்பிடுகிறீர்கள்?''
``முதலமைச்சர் ஸ்டாலின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு; அவரும் என் தந்தையும் பள்ளித் தோழர்கள். அதே சமயம், விஜய்யின் எளிமையையும் நான் பாராட்டுகிறேன். நான் ஒரு நடுநிலையான மனிதன் என்பதால், இவர்களை அரசியல் ரீதியாக ஒப்பிட விரும்பவில்லை"
``ஆற்காடு அரச குடும்பம் மத்திய மாநில அரசுகளுடனும் முன்னணி அரசியல் தலைவர்களுடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறது. ஆனால், ஏன் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை?''
``முன்பே சொன்னதுபோல நாங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அனைவரையும் சமமாக மதிப்பவர்கள். நாங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்தால், மற்ற கட்சிகளைத் தவிர்க்கவேண்டிய சூழல் ஏற்படும். அதை நாங்கள் விரும்பவில்லை. அதற்காகவே நாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை.
``ஆனால், உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் அரசியலில் ஈடுபடும் ஆசை இருக்கிறதா?''
``மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அதற்கு அரசியல் கட்சிதான் ஒரே வழி என்று இல்லை, பல வழிகளில் சேவை செய்யலாம். ஆனால், என் எதிர்கால அரசியல் வருகை என்பது தற்போது ஒரு 'சஸ்பென்ஸ்' தான்; அதுகுறித்து இறைவனுக்கு மட்டுமே தெரியும்''














