செய்திகள் :

தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேற்றத்துக்கு முதல்வர் விஜய் அமைக்கட்டும் ராஜபாட்டை!

post image

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அந்த விழா மேடையிலேயே பிறப்பித்த முதல் மூன்று உத்தரவுகளில் ஒன்றாக, பெண்கள் நலன் சார்ந்த திட்டம் இடம்பெற்று நம்பிக்கையான ஆரம்பம் கொடுத்துள்ளது.

200 யூனிட் வரை இலவச மின்சாரம், போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை ஆகிய உத்தரவுகளுடன், பெண்கள் பாதுகாப்புக்காக `சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கும் உத்தரவையும் முதல்வர் விஜய் பிறப்பித்தார். தொடர்ந்து, தமிழகத்தில் முதலாவதாக சேலம் மாநகரில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆட்சிக்கு வந்ததுமே முந்தைய அரசின் நலத்திட்டங்களை முடக்கிடாது, தேவை உணர்ந்து தொடரும் ஆரோக்கிய செயல்பாடும் வரவேற்கத்தக்கது. அதன்படி, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும்வரை, பெண்களுக்கான ரூ.1,000 உரிமைத்தொகை தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் நலன் சார்ந்த தளங்களில் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு கவனம் கொடுக்க இத்தருணத்தில் வலியுறுத்துவோம். பணி மற்றும் தொழில்தள மனித வளத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்து, அவர்களது தனிப்பட்ட வளர்ச்சியையும் மாநில வளர்ச்சியையும் ஒருங்கே உயர்த்த வேண்டும். அதற்கான திறன் பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

விடுதிகள், நைட் ஷிஃப்ட்டுக்கான பயணம் மற்றும் பாதுகாப்பு, மகப்பேறு விடுமுறை, குழந்தைகளுக்கான காப்பகங்கள் என்று பணிபுரியும் பெண்களுக்கான ‘சப்போர்ட் சிஸ்டம்’ வலுப்படுத்தப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவன தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த முன்னெடுப்புகள் செய்ய வேண்டும்.

பெண்கள் உள்ளூர் அளவில் ஒன்றிணைந்து முன்னேற சிறப்பான தளமாக விளங்கும் சுய உதவிக்குழுக்கள், வரும் ஆண்டுகளில் அடுத்த பாய்ச்சலை எட்டுவதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சேமிப்பு, வங்கிக்கடன், தொழில் முயற்சிகள் மூலம் அவர்களது பொருளாதார, சமூக நிலையை உயர்த்தும் இந்தத் திட்டம் இன்னும் பல லட்சம் பெண்களை எட்ட வேண்டும்.

இடைநிற்றல் என்பதையே இல்லாமல் செய்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் உயர்கல்வி வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சுகாதாரமான கழிப்பறை மற்றும் மாதவிடாய், மார்பக மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் என, பெண்களின் ஆரோக்கியம் தனி கவனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். பெண்கள் சார்ந்த தரவுகளுக்கான வழிகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் திட்டங்கள் தீட்டுவதும் கண்காணிப்பதும் நடக்க வேண்டும்.

பாலின பட்ஜெட் (Gender budget) மூலம் மேற்சொன்னவற்றுக்கான வழிகள் உருவாக்கப் பட்டு, மாநில பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றத்துக்கு ராஜபாட்டை அமைத்துத் தரட்டும் அமைந்திருக்கும் புதிய அரசு!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

டாஸ்மாக் முதல் சந்துக்கடைகள் வரை சீரழியும் மாநிலம்... மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்!

பொறுக்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தில் தள்ளிய சமூகக் குற்றம்தான், பெண்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குப் பின்னணியாக இருக்கும். அப்படித்தான், தருமபுரி மாவட்டம், போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாகச் செயல... மேலும் பார்க்க