``திமுக கூட்டணிக் கட்சிகளின் காலில் விழுந்து..."- தவெக-வை கடுமையாக சாடும் எடப்பா...
`அந்த வலையில் மாட்டிக்கொண்டேன்...'- நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் துவிஷா சர்மா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 2024-ல் ஒரு டேட்டிங் செயலி மூலம் போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரைச் சந்தித்துள்ளார். பின்னர் இவர்கள் இருவருக்கும் கடந்த 2025 டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், போபாலின் கடாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டில் கடந்த மே 12 அன்று துவிஷா சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த மே 7-ம் தேதி துவிஷா தனது தோழிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில், "நான் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கும் பதற்றத்திற்கும் ஆளாகியிருக்கிறேன்.

எனது வாழ்க்கையில் நான் ஏதாவது சாதிக்க விரும்புகிறேன். திருமணம் ஒரு குடும்பத்தை உருவாக்குகிறதுதான், ஆனால் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நமக்காக, நமது சுய முன்னேற்றத்திற்காக உழைப்பதை நிறுத்திவிடக் கூடாது. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் மட்டும் கல்யாணம் பண்ணிக்காதே. தீர ஆலோசித்து, யோசித்து அடுத்த அடியை எடுத்து வை. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். சீக்கிரமே உன்னை அழைக்கிறேன்." என்றும் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அவரது தோழி, "நீ நலமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன், உன்னை நினைத்தால் கவலையாக இருக்கிறது" எனக் கூற, அதற்குத் துவிஷா சர்மா, "நான் நன்றாகத்தான் இருக்கிறேன், ஆனால் எனக்கு வீட்டின் ஞாபகம் அதிகமாக வருகிறது, உன்னையும் ரொம்ப மிஸ் பண்றேன்பா..." எனத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் அனுப்பிய மற்றொரு செய்தியில், ``நண்பா, நான் ஏதோ ஒரு வலையில் மாட்டிக்கொண்டேன். நீ மட்டும் இதில் சிக்கிக்கொள்ளாதே. என்னால் இப்போது அதிகமாகப் பேச முடியாது, சரியான நேரம் வரும்போது நானே அழைக்கிறேன்" என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், ``உன்னை நினைத்து பயமாக இருக்கிறது, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்" என்று மறுபதிவு செய்துள்ளார். இந்த நிலையில்தான் அவரின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.
மகளின் மரணத்திற்குப் நீதி கேட்டு துவிஷா சர்மாவின் குடும்பத்தினர் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போபால் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் பிணவறையில் கடந்த ஐந்து நாள்களாக துவிஷா சர்மாவின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துவிஷா சர்மாவின் தந்தை நவநிதி சர்மா மற்றும் அவரது உறவினர் ஆஷிஷ் சர்மா ஆகியோர், போபாலுக்கு வந்த நாள் முதலே நீதிக்காக அலைக்கழிக்கப்படுவதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துவிஷா சர்மாவின் உறவினர் ஆஷிஷ் சர்மா, ``எங்கள் மகள் இறந்துவிட்டாள் என்ற தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே நாங்கள் டெல்லி மற்றும் அஜ்மீரிலிருந்து போபாலுக்குக் கிளம்பி வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகு நாங்கள் எதிர்கொண்டதெல்லாம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் மட்டும்தான். துவிஷாவின் உடலைப் பார்த்தபோது, உடலில் பல காயங்கள் இருந்தன. ஆனால், எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல் எங்களை அலைக்கழிப்பது மட்டுமே காவல்துறையின் வேலையாக இருந்தது. மகளிர் காவல் நிலையம், மனித உரிமைகள் ஆணையம், காவல் ஆணையர் அலுவலகம் என ஒட்டுமொத்த குடும்பமும் நீதிக்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்" என வேதனை தெரிவித்துள்ளார்.
துவிஷாவின் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டாலும், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
துவிஷா சர்மாவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான அவரது மாமியார் கிரிபாலா சிங் ஆகிய இருவர் மீதும் வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளைத் துவிஷாவின் குடும்பத்தினர் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
















