ஈரோடு: போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூங்கா! | Photo Album
தலித் + இஸ்லாமியர் = 40% வாக்குகள்; சவாலான களத்தில் பாஜக எப்படி வெல்கிறது? | UP Election Explained
2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும் போட்டி அணிகளும் உருவாகியுள்ளன. ஆளும் பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதை விட, தலைமைப் பதவி, தொகுதிப் பங்கீடு, தலித்-முஸ்லிம் வாக்கு வங்கிகளைத் தக்கவைத்தல் ஆகியவற்றில்தான் எதிர்க்கட்சிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
இதன் உச்சகட்டமாக, அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியும், நகீனா தொகுதி மக்களவை உறுப்பினர் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியும் (கன்ஷிராம்) இணைந்து 'சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா' (சமூக மாற்ற முன்னணி) என்ற புதிய கூட்டணியை லக்னோவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

ஓவைசியின் நீண்டநாள் கோரிக்கையும் புறக்கணிப்பும்
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான 'இந்தியா' கூட்டணியில் ஓர் இடம் வேண்டும் என்பது ஓவைசியின் நீண்டநாள் கோரிக்கை. பீகாரில் ஏற்பட்ட புறக்கணிப்பு, பலமுறை மேற்கொண்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றுக்குப் பிறகு, நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் இவ்வாறு எச்சரித்தார்:
"உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை மஜ்லிஸ் கட்சி விரும்பவில்லை என்று முன்பும் சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன். நான் கை கோர்க்கத் தயாராக இருக்கிறேன். கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறேன். இது பேசுவதற்கான நேரம். தேர்தல் முடிந்த பிறகு அழாதீர்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை."
ஆனால், தங்களுக்குள்ளேயே இன்னும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாத சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் அவரது கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்க ஓவைசி தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே சந்திரசேகர் ஆசாத்துடன் கைகோர்த்ததாக AIMIM-ன் உத்தரப் பிரதேசத் தலைவர் சௌகத் அலி தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியின் அறிவிப்பு
கடந்த வார வியாழக்கிழமை லக்னோவில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், பாஜகவைத் தடுக்க மாநிலத்தில் ஒரு வலுவான மாற்று அரசியலை உருவாக்கப்போவதாக ஓவைசி அறிவித்தார். அவர் மேலும் திட்டவட்டமாகக் கூறியது, "மக்களின் நலனுக்காக நாங்கள் இறக்க நேரிட்டால், அது எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம்; அகிலேஷ் யாதவ் முதல்வராக ஆக மாட்டார்."
2027 சட்டமன்றத் தேர்தலுக்கு சந்திரசேகர் ஆசாத் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது இந்த புதிய கூட்டணி.
தலித்துகள், முஸ்லிம்கள், பின்தங்கிய சமூகங்களை ஒரு பொது அரசியல் தளத்தின் கீழ் அணிதிரட்டுவதே இவர்களின் முக்கிய நோக்கம் என்கிறார்கள்.
புதிய கூட்டணியின் மையமாக உள்ள முஸ்லிம்-தலித் சமூகங்கள் இணைந்து மாநில வாக்காளர்களில் சுமார் 40% ஆகின்றனர். ஆனால், மக்கள்தொகைக் கணக்குகள் மட்டுமே தானாக வாக்குகளாக மாறிவிடுவதில்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல் களம் ஏற்கெனவே பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிறிய சாதிக் கட்சிகளால் நிரம்பியுள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டணியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதே கேள்வி.

தலித்-முஸ்லிம் வாக்குகளை ஒரே குடையின் கீழ் திரட்டும் இந்த முயற்சி, பாரம்பரியமாக இவ்விரு சமூகங்களின் வாக்குகளை நம்பியிருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்குப் பெரும் சவால். அந்த வாக்குகள் சிதறினால் அது பாஜகவுக்குப் பெரும் சாதகமாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் வெறும் ஆறு இடங்களில் போட்டியிட ஓவைசி முன்வந்தார். ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அதை நிராகரித்தது.
2020 தேர்தலில் சீமாஞ்சல் பகுதியில் 5 இடங்களை வென்று AIMIM தனது பலத்தை நிரூபித்திருந்தது. (பின்னர் அந்த 5 எம்எல்ஏக்களில் நால்வர் ஆர்ஜேடிக்குத் தாவியது வேறு கதை.) 2025-ல் தனித்துப் போட்டியிட்ட AIMIM மீண்டும் அதே 5 தொகுதிகளை வென்று தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்தது. இது ஆர்ஜேடி கூட்டணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதே போன்ற புறக்கணிப்பு இப்போது உத்தரப் பிரதேசத்திலும் நிகழ்ந்துள்ளது. அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைக்க ஓவைசி பலமுறை விருப்பம் தெரிவித்தும் சமாஜ்வாதி கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவே இந்தப் புதிய முன்னணி.
சமாஜ்வாதி கட்சிக்கு நேரடிச் சவால்
இந்தக் கூட்டணியால் உடனடியாகக் கவலைப்பட வேண்டியது அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதிதான். அக்கட்சியின் PDA (பிச்ச்டா, தலித், அல்பசங்க்யாக் - பின்தங்கிய வகுப்பினர், தலித்துகள், சிறுபான்மையினர்) சமூகக் கணக்குக்கு ஓவைசி-ஆசாத் கூட்டணி நேரடிப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
முஸ்லிம் வாக்கு வங்கி சமாஜ்வாதிக்குப் பெரும் பலவீனமாக மாறக்கூடும். சுமார் 19% உள்ள முஸ்லிம் வாக்காளர்கள், கடந்த தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கும் பிரதான கட்சியாக சமாஜ்வாதிக்கே பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
மாநிலத்தின் 143 சட்டமன்றத் தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.

"உங்களுக்கு வாக்களிக்கும் முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏன் வழங்குவதில்லை?" என்று ஓவைசி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். ஆசாத்துடனான கூட்டணி இந்த வாதத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. இது வெறும் முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக இல்லாமல், தலித்-முஸ்லிம் சமூகங்களின் பரந்த கூட்டணியாகத் தங்களை முன்னிறுத்த உதவுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு நெருக்கடி
ஓவைசி சமாஜ்வாதியின் முஸ்லிம் வாக்கு வங்கியைக் குறிவைத்தால், ஆசாத்தின் நகர்வுகள் பகுஜன் சமாஜுக்கும் மாயாவதிக்கும் பெரும் அழுத்தத்தை உருவாக்கும்.
மாநிலத்தில் 21% தலித் மக்கள் இருந்தாலும் அவர்கள் ஒரே அரசியல் தொகுப்பாக இல்லை. பகுஜன் சமாஜின் பாரம்பரிய வாக்கு வங்கி ஜாதவ் சமூகத்தினர். ஜாதவ் அல்லாத தலித்துகளிடையே பாஜக படிப்படியாகச் செல்வாக்கை அதிகரித்து வருகிறது.

இளம் தலித் தலைவராக உருவெடுத்துள்ள ஆசாத்தின் வளர்ச்சி மாயாவதிக்குப் புதிய சவால். 2024 மக்களவைத் தேர்தலில் நகீனாவில் பெற்ற வெற்றி, ஆசாத்தை ஒரு தலித் உரிமைப் போராளி என்பதையும் தாண்டி, தேர்தல் சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது.
காங்கிரஸின் நிலை
சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் மீண்டும் தடம் பதிக்க முயலும் காங்கிரஸுக்கும் இந்தக் கூட்டணி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தலித்துகள், சிறுபான்மையினரை ஈர்க்க காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சிகள் ஓவைசி-ஆசாத் கூட்டணியின் இலக்குகளுடன் நேரடியாக மோதுகின்றன.
சாதகம்: ஓவைசி முஸ்லிம் வாக்குகளையும் ஆசாத் தலித் வாக்குகளையும் பிரித்தால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறும். 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 41.29% வாக்குகளுடன் 255 இடங்களை வென்றது. சமாஜ்வாதி 32.06% வாக்குகளுடன் 111 இடங்களைப் பிடித்தது. வாக்குகள் சிதறினால் பாஜக எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.
பாதகம்: யாதவ் அல்லாத ஓபிசி, ஜாதவ் அல்லாத தலித் சமூகங்களை இணைத்து பாஜக உருவாக்கியுள்ள சமூகக் கூட்டணிக்கு இந்தப் புதிய முன்னணி சவாலாக அமையலாம்.
எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியை இது பலவீனப்படுத்தினால், இறுதியில் அது பாஜகவுக்கே மிகப்பெரிய நன்மையாக முடியும்.

2024 மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணியாகப் போட்டியிட்ட சமாஜ்வாதியும் காங்கிரஸும் மொத்தமுள்ள 80 இடங்களில் 43 இடங்களைக் (சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6) கைப்பற்றி பாஜகவுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தன. ஆனால், 2027 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் தரப்பு: உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கௌதம், 175 முதல் 200 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதியிடம் முதற்கட்டப் பட்டியலை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். "மக்களவைத் தேர்தல் வெற்றி மற்றும் கட்சியின் கட்டமைப்பு பலத்தின் அடிப்படையில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது" என்பது அவரது வாதம். தற்போது சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு வெறும் 2 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களவை வெற்றியைச் சட்டமன்ற இடங்களாக மாற்ற அக்கட்சி தீவிரம் காட்டுகிறது.
சமாஜ்வாதி தரப்பு: மக்களவைத் தேர்தல் முடிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதிக இடங்களை விட்டுக்கொடுக்க அகிலேஷ் தயாராக இல்லை. நேரு-காந்தி குடும்பத்தின் கோட்டைகளாகக் கருதப்படும் ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸின் தற்போதைய கள நிலவரம், வாக்கு வங்கி குறித்து ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரு கட்சிகளும் தனித்தனி குழுக்களை அமைக்கவுள்ளன.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கடந்த நவம்பர் 5-ம் தேதி, மாநிலத்தின் 75 மாவட்டத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மாயாவதி, வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்தவும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
2022 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1 இடத்தை மட்டுமே வென்று 12.88% வாக்குகளைப் பெற்ற பிஎஸ்பி, 2024 மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தைக்கூடப் பெறவில்லை. இருப்பினும், மாநிலம் முழுவதும் பரவியுள்ள அடிமட்டக் கட்டமைப்பு, பாரம்பரிய தலித் வாக்குகள் மூலம் பல தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக பிஎஸ்பி நீடிக்கிறது.

எதிர்க்கட்சிகளுக்கு முன்னுள்ள சவால்
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாகப் பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முரண்பாடுகள் பாஜகவுக்குச் சற்று நிம்மதி அளித்துள்ளன. பாஜகவின் தூக்கத்தைக் கெடுக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் பல விஷயங்களைச் செய்தாக வேண்டும்:
சமாஜ்வாதியும் காங்கிரஸும் தங்கள் பலத்தைச் சிதைத்துக்கொள்ளாமல் தொகுதிப் பங்கீட்டைச் சுமுகமாக முடிக்க வேண்டும்.
பிஎஸ்பி, AIMIM, ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை தலித், முஸ்லிம் சமூகங்களிடையே தனித்தனி அரசியல் தளங்களை உருவாக்க முயல்கின்றன. அதை அகிலேஷ் யாதவ் முன்நின்று முறியடிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் தேசிய விவகாரங்களை மையப்படுத்தியது. ஆனால் 403 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் உள்ளூர்த் தலைமை, வேட்பாளர் தேர்வு, கூட்டணிக் கட்சிகளிடையேயான வாக்குப் பரிமாற்றம் ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கும்.
பாஜகவை வீழ்த்துவதற்கு முன்பாக, தங்களுக்குள் ஏற்படும் அதிகாரப் போட்டியால் அடிப்படை வாக்கு வங்கிகள் சிதறாமல் தடுப்பதே எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய சவால். ஓவைசியும் ஆசாத்தும் தங்கள் தலித்-முஸ்லிம் கணக்கை வலுவான தேர்தல் சக்தியாக மாற்ற முடியுமா, நிறுவப்பட்ட கட்சிகளுக்குச் சவால் விடும் அளவுக்கு 'சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா' வளருமா என்பதை வரும் மாதங்கள் தீர்மானிக்கும்.
பிரஷாந்த் ஜாவின் “How the BJP Wins” (தமிழில்: "பாஜக எப்படி வெல்கிறது?") சொல்வது என்ன?
மூத்த பத்திரிகையாளர் பிரஷாந்த் ஜா எழுதிய How the BJP Wins: Inside India’s Greatest Election Machine நூலில், உத்தரப் பிரதேச அரசியலில் பாஜகவின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட (OBC) வாக்குகள் எவ்வாறு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன என்பது நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக "பிராமணர்-பனியா (வணிகர்)" கட்சியாக மட்டுமே பார்க்கப்பட்ட பாஜக, உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் தனது சமூகத் தளத்தை விரிவுபடுத்தியே ஆக வேண்டும் என்பதை அமித் ஷாவும் சுனில் பன்சாலும் உணர்ந்தனர்.
1. வாக்கு வங்கிக் கணக்கு (55-60% ஃபார்முலா)
அமித் ஷா குழுவினர் உத்தரப் பிரதேசத்தின் சமூகக் கட்டமைப்பைத் துல்லியமாகப் பிரித்துப் பார்த்தனர்:
முஸ்லிம்கள் (20%): பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
யாதவர்கள் (10%): சமாஜ்வாதிக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
ஜாதவ் தலித்துகள் (11-12%): மாயாவதியின் பிஎஸ்பிக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
இவற்றைக் கழித்தால் மீதமுள்ள 55% முதல் 60% வாக்காளர்களே வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் என்பதை பாஜக கண்டறிந்தது. இதில் முன்னேறிய சாதியினருடன், அதிகாரத்துக்கு வராத ஜாதவ் அல்லாத தலித்துகளும் யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்டோரும் அடங்குவர்.

2. தலித் வாக்குகளை உடைத்த விதம் (ஜாதவ் vs ஜாதவ் அல்லாதோர்)
மாயாவதியின் ஆட்சியில் தலித் சமூகத்துக்குள் "ஜாதவ்" பிரிவினரே அதிகப்படியான அரசியல் அதிகாரத்தையும் அரசுப் பணிகளையும் பெற்றதாக ஒரு கருத்து நிலவியது. பாஜக அதைத் தனக்குச் சாதகமாக்கியது:
பிற தலித் பிரிவுகளை ஈர்த்தல்: வால்மீகி, பாசி, கோரி, தோபி, கத்திக் போன்ற ஜாதவ் அல்லாத தலித் சாதியினரைக் குறிவைத்து, மாயாவதி மீதான அவர்களின் அதிருப்தியை அறுவடை செய்தது.
உள்ளூர்த் தலைவர்களுக்குப் பிரதிநிதித்துவம்: சிறிய தலித், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உள்ளூர்த் தலைவர்களுக்குக் கட்சிப் பதவிகளிலும் தேர்தல் சீட்டுகளிலும் கணிசமான இடங்களை ஒதுக்கியது.
3. இந்துத்துவக் குடையின் கீழ் தலித்துகளை ஒருங்கிணைத்தல்
அம்பேத்கரைத் தத்தெடுத்தல்: பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அம்பேத்கரைக் கொண்டாடத் தொடங்கின. அவர் தொடர்பான 5 இடங்களை 'பஞ்ச தீர்த்தம்' என மேம்படுத்தியது, நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தியது போன்றவை தலித்துகளிடையே பாஜக மீதான தயக்கத்தைக் குறைத்தன.
சமூக நல்லிணக்க நிகழ்வுகள் (சாமாஜிக் சமரசதா): ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தலித் குடியிருப்புகளுக்குச் சென்று சமபந்தி போஜனம் நடத்தியதும் உள்ளூர் தலித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியதும் அடிமட்டத்தில் வாக்குகளாக மாறின.
முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்: கிராமப்புறங்களில் யாதவர்கள், முஸ்லிம்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுவதாக உணர்ந்த தலித் பிரிவினரிடம், பாஜக தனது இந்துத்துவ அரசியலை (குறிப்பாகப் பசுப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு) கொண்டு சேர்த்தது.
4. "தலித் வாக்குகள் கிடைத்தால் வெற்றி; தவறினால் தோல்வி"
ஏன் வெற்றி? உயர் சாதியினர் வாக்குகள் (சுமார் 18-20%) மட்டும் பாஜகவை வெல்ல வைக்கப் போதாது. 2014 மக்களவைத் தேர்தலிலும் 2017 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக வரலாற்று வெற்றி பெற்றதற்குக் காரணம், பாரம்பரியமாக பிஎஸ்பிக்குச் சென்றுகொண்டிருந்த தலித் வாக்குகளில் கணிசமான பகுதியை (குறிப்பாக ஜாதவ் அல்லாத வாக்குகளை) தன் பக்கம் இழுத்ததுதான்.
எப்போது தோல்வி? பாஜக தன்னை ஒரு "ஆதிக்க சமூக கட்சியாக" காட்டிக்கொள்ளும்போதோ, தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும்போதோ இந்தச் சமூகக் கூட்டணி உடையும். தலித் வாக்குகள் மீண்டும் பிஎஸ்பிக்கோ சமாஜ்வாதி கூட்டணிக்கோ திரும்பும்போது பாஜகவின் வாக்கு வங்கி சரிந்து தோல்வி ஏற்படும் என்பதை 2004 முதல் 2012 வரையிலான உத்தரப் பிரதேசத் தேர்தல் வரலாறு மூலம் அவர் விளக்குகிறார்.
சுருக்கமாக: பிரசாந்த் ஜாவின் பார்வையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றி வெறும் 'மோடி அலை'யால் நிகழ்ந்ததல்ல. முன்னேறிய சாதியினர் + யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்டோர் + ஜாதவ் அல்லாத தலித்துகள் ஆகியோரை இணைத்து அமித் ஷா உருவாக்கிய துல்லியமான சமூகப் பொறியியலின் விளைவு அது. இந்தக் கூட்டணியிலிருந்து தலித் வாக்குகள் விலகும்போதெல்லாம் பாஜகவின் வெற்றி கேள்விக்குறியாகிறது.
5. யாதவ் அல்லாத OBC ஒருங்கிணைப்பு: பாஜகவின் அசுர பலத்தின் அடித்தளம்
மாநில மக்கள்தொகையில் OBC-க்கள் சுமார் 40% முதல் 45% வரை உள்ளனர். அதில் யாதவர்கள் (சுமார் 9-10%) சமாஜ்வாதியின் உறுதியான வாக்கு வங்கி. மீதமுள்ள சுமார் 32% முதல் 35% வாக்காளர்கள் குர்மி, மௌரியா/சாக்யா/சைனி, லோத், நிஷாத்/மல்லா, ராஜ்பர், ஜாட் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர OBC சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை பாஜக பின்வருமாறு ஒருங்கிணைத்தது:
> யாதவ ஆதிக்கத்துக்கு எதிரான மனநிலையைப் பயன்படுத்துதல். சமாஜ்வாதி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அரசு வேலைவாய்ப்புகள், காவல்துறை நியமனங்கள், உள்ளூர் அதிகாரம் அனைத்தும் யாதவர்களுக்கே சென்றதாக மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே கடும் அதிருப்தி இருந்தது. "சமாஜ்வாதி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோருக்கான கட்சி அல்ல; அது ஒரு குடும்பம் (முலாயம் குடும்பம்), ஒரு சாதியின் (யாதவர்) கட்சி" என்ற பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்தது. இதனால் அதிகாரப் பகிர்வு கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டிருந்த சிறிய OBC சாதிகள் பாஜகவைத் தங்கள் மீட்பராகப் பார்க்கத் தொடங்கின.

> சிறிய சாதிக் கட்சிகளுடன் கூட்டணி (மைக்ரோ-அலையன்ஸ்):
அப்னா தளம்: கிழக்கு உ.பி.யில் (பூர்வாஞ்சல்) செல்வாக்குள்ள 'குர்மி' வாக்குகளுக்காக அனுப்ரியா படேலின் கட்சியுடன் கூட்டணி.
சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (SBSP): கிழக்கு உ.பி.யில் 'ராஜ்பர்' வாக்குகளுக்காக ஓம் பிரகாஷ் ராஜ்பருடன் கூட்டணி.
நிஷாத் கட்சி: நதிக்கரையோர மீனவ, படகோட்டி சமூக வாக்குகளுக்காக சஞ்சய் நிஷாத்துடன் கூட்டணி.
OBC முகங்களை முன்னிறுத்துதல்:
மோடியின் OBC அடையாளம்: 2014 தேர்தலில் நரேந்திர மோடி தன்னை ஒரு 'பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்' (தெலி/கஞ்சி) என முன்னிறுத்தியது அடித்தட்டு OBC மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேசவ் பிரசாத் மௌரியா: 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, யாதவ் அல்லாத OBC-யான (மௌரியா) இவரை மாநிலத் தலைவராக அமித் ஷா நியமித்தார். பின்னர் துணை முதல்வராகவும் ஆக்கினார். இது OBC சமூகங்களின் நம்பிக்கையைப் பன்மடங்கு அதிகரித்தது.
சீட் ஒதுக்கீடு: 2017 தேர்தலில் பாஜக போட்டியிட்ட இடங்களில் 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் யாதவ் அல்லாத OBC வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தது.
முஸ்லிம் எதிர்ப்பும் சட்டம்-ஒழுங்கும். கிராமப்புறங்களில் யாதவர்கள், முஸ்லிம்களின் ஆதிக்கத்தால் தங்கள் நிலங்களும் பாதுகாப்பும் கேள்விக்குறியாவதாகக் கருதிய பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு, பாஜகவின் கடுமையான "சட்டம்-ஒழுங்கு", இந்துத்துவ அரசியல் ஆகியவை பாதுகாப்பு உணர்வைத் தந்தன. குறிப்பாக 2013 முசாபர்நகர் கலவரத்துக்குப் பிறகு, மேற்கு உ.பி.யின் 'ஜாட்' சமூகம் முஸ்லிம்களிடமிருந்து விலகி பாஜக பக்கம் முழுமையாகத் திரும்பியதை பிரஷாந்த் ஜா சுட்டிக்காட்டுகிறார்.
1990-களில் கன்ஷிராமும் மாயாவதியும் "பகுஜன்" (தலித்துகள் + பிற்படுத்தப்பட்டோர் + சிறுபான்மையினர்) கூட்டணியை உருவாக்கி வெற்றி பெற்ற அதே சமூகப் பொறியியல் உத்தியை, அமித் ஷா தலைமையிலான பாஜக தலைகீழாக மாற்றியது. "முன்னேறிய சாதியினர் + யாதவ் அல்லாத OBC + ஜாதவ் அல்லாத தலித்துகள்" என்ற புதிய 'இந்து வாக்கு வங்கி' அப்படிக் கட்டமைக்கப்பட்டது. இதுவே உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக்கியது.













