செய்திகள் :

“ஜேசன் நீங்க நல்லவரா, கெட்டவரா, இல்ல பழக்கடை மூர்த்தியா?” - இந்த வாரம் பிக் பாஸில் நடந்தது என்ன?

post image

அவினாஷ் மற்றும் முத்தழகி எவிக்ஷன்.

தான் வெளியேற்றப்படுவோம் என்பது முத்தழகிக்கு எப்போதோ தெரிந்து விட்டிருந்தது. எனவே அவர் இருந்த நாட்கள் எல்லாம் போனஸ்தான்.

பிஸிக்கல் டாஸ்க்கில் மட்டும் சிறந்து விளங்கிய அவினாஷ், அவ்வப்போது ஆங்க்ரி பேர்ட் அவதாரம் எடுத்தார். தங்கை வந்த பிறகு வீறு கொண்டு அந்நியனாக மாறினார். தங்கை போன பிறகு அம்பியாக சுருங்கினார். 

இந்த இரு எவிக்ஷன்களுமே அவசியமானவை. ‘அடப்பாவமே, இவங்களா போறாங்க?” என்று எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை. 

bb tamil 10
bb tamil 10

10வது வாரத்தில் என்ன நடந்தது?


இந்த வாரத்தின் சிறப்பம்சம், பிக் பாஸ் இல்லாத வீடு. இந்த முக்கியமான பொறுப்பை போட்டியாளர்களே ஏற்று இல்லத்தை வழிநடத்த வேண்டும் என்பது சுவாரசியமான டாஸ்க். 

விவேகமும் புத்திசாலித்தனமும் கூடிய போட்டியாளர்களாக இவர்கள் இருந்திருந்தால்,  இந்த டாஸ்க்கை சிறப்பாக கையாண்டு “நீங்க அமெரிக்காவுலயே செட்டில் ஆயிடுங்க சிவாஜி’ என்று பிக் பாஸிற்கு டாட்டா காட்டியிருக்கலாம். ஆனால் தமிழ் நண்டு கதையாக ஒருவரின் காலை இன்னொருவர் இழுத்து பின்னால் நகர்த்தும் வேலையைத்தான் சிறப்பாக செய்தார்கள். 

ஜூனியர் பிக் பாஸ் என்கிற பதவியில் அமர்பவருக்கு அந்தப் பெருமை மட்டுமல்லாது, அவர் தனது பதவியை தக்க வைக்கும் நாட்களைப் பொறுத்து நாமினேஷன் ஃப்ரீ முதற்கொண்டு முதல் ஃபைனலிஸ்ட் என்கிற உச்சபட்ச சலுகை வரை கிடைக்கும். 

எனவே ஒரேயொருவருக்கு தங்கத் தட்டில் வைத்து கொடுக்க முடியாது. அது சரியான போட்டி மனப்பான்மையாகவும் இருக்காது. அந்த வகையில் தினம் ஒரு ஜூனியர் பாஸ் என்கிற கோணத்தை போட்டியாளர்கள் சிந்தித்தது சரியானது. அதை சரியாக செயல்படுத்தியிருந்தால் தினம் தினம் பார்வையாளர்களுக்கு சுவாரசியம் கிட்டியிருக்கும். 

ஜூனியர் பிக் பாஸ் நாற்காலிக்கு நடந்த உக்கிரமான சண்டைகள்

மாறாக, ஓர் அறிமுக நடிகருக்கு இரண்டு படங்கள் ஹிட் ஆனாலே முதலமைச்சர் கனவு வந்து விடுவதைப் போல ஆளாளுக்கு ‘நானும் ஜூனியர் பிக் பாஸ் ஆக விரும்புகிறேன்” என்று அந்தப் பதவியை மியூசிக்கல் சேர் மாதிரி ஆடினார்கள். அதிலும் முனியம்மா செய்ததெல்லாம் பயங்கர அலப்பறை. ஏதோ குழந்தை யானைச் சவாரி செய்ய ஆசைப்பட்டதைப் போல “கொஞ்ச நேரம் ஏறிட்டு இறங்கிடறேன். நீங்க சொல்றப்ப பதவியை விட்டுடுவேன். அதுல உக்காந்து பார்க்க ஆசையா இருக்கு. அம்புட்டுதேன்’ என்று சொன்னதையெல்லாம் நம்பி ஏற்றி வைத்து அழகு பார்த்தது மோசமான முடிவு. 

வீட்டை வழிநடத்துவது, டாஸ்க்குகளை யோசிப்பது, போட்டியாளர்களுக்கு விளக்குவது.. இதையெல்லாம் செய்ய பிக் பாஸில் பெரிய டீமே இருக்கும். ஆனால் ஒற்றையாளாக இதைச் சாதித்தார் வினோத் பாபு. ஒரு நீண்ட டாஸ்க்கை யோசித்து சிறப்பாக ஆடச் செய்தார். பதவியில் இருந்த இரு நாட்களும் தூங்காமல் போட்டியாளர்களை கண்காணித்தார். 

bb tamil 10
bb tamil 10

வினோத்தின் பதவிக்காலத்தில் சில சறுக்கல்களும் நிகழ்ந்தன. ஷாதிகாவை லீடர் ஆக்கி விட்டு, கிச்சன் அணி உருவான பிறகு மீண்டும் லீடர்ஷிப் டாஸ்க்கை ஆரம்பித்து ஜேசன் லீடர் ஆனது குழப்பத்தை ஏற்படுத்தியது. ‘பிக் பாஸ் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்” என்று தனது கடுமையான ஆட்சேபத்தை வெளிப்படுத்தினார் ஷாதிகா. 

மற்றபடி ‘நவம்பர் ஃபூல்’ என்கிற சீக்ரெட் டாஸ்க் உள்ளிட்டு வினோத் செய்த சம்பவங்கள் அனைத்தும் அருமையானவை. வினோத்தை பதவி இறக்க போதுமான காரணங்கள் இல்லையென்றாலும் கூட ஷாதிகா உள்ளிட்டவர்கள் செய்த அழும்பு காரணமாக அவரது பதவி பறிபோனது. 

‘நான் ஒரு ஜீரோ. எதுவுமே தெரியல’ - கலங்கிய முனியம்மாள்

அடுத்த ஜூனியர் பிக் பாஸாக வந்தவர் முனியம்மாள். ‘முதல் பெண் குரல்’ என்கிற பெருமையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நாம் ஆரம்பத்திலிருந்தே பார்த்து வருகிறோம். முனியம்மாள் சுவாரசியமான போட்டியாளராக இருந்தாலும் அவரிடம் தலைமைப் பண்பு என்பது சுத்தமாக இல்லை. இது அவருக்கே தெரியும். இருந்தாலும் ‘நானும் சைக்கிள் ஓட்டிப் பழகணும்’ என்கிற மாதிரி இருக்கையில் ஏறி அமர்ந்து விட்டார். 

அமர்ந்த பிறகுதான் அந்த முள் கிரீடத்தின் வலியும் சுமையும் முனிக்கு தெரிந்தது. அதுவரை டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டு வினோத் தன்னை செய்த கிண்டலையெல்லாம் டிவியில் பார்த்து ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்துக் கொண்டிருந்தார். விட்டிருந்தால் ‘பாஸ்.. இந்த டிவில சன்டிவி வருமா.. ரொம்ப போரடிக்குது.. சீரியல் பார்க்கப் போறேன்’ என்று கூட கேட்டிருப்பார். 


டாஸ்கிற்கான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்த ரூமிற்குள் நுழைந்த பிறகு, பொம்மைக் கடையில் நுழைந்த குழந்தை மாதிரி விக்கித்துப் போனார் முனி. எதை எடுப்பது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றைப் பாராட்டியாக வேண்டும். தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பது ஒருவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். கூடுதலாக அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதற்கு பெரிய மனமுதிர்ச்சி வேண்டும். “நான் ஒரு ஜீரோ. ஏதோ ஆசைப்பட்டு வந்துட்டேன். நான் இதுக்கு லாயக்கில்லை” என்று கலங்கிய முனியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பல விஷயங்களை தன்னியல்பாக சிந்திக்கும் முனியம்மாள், சற்று முனைப்புடன் முயன்றிருந்தால் இந்தப் பதவியையும் கையாண்டிருக்க முடியும். 

வினோத் ஒரு நல்ல முன்மாதிரி ரெஃப்ரன்ஸ் ஆக இருந்ததால் அடுத்த வந்த அன்சர் தனது பதவியை சிறப்பாக கையாண்டார். போட்டியாளர்களிடமிருந்து வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் டாஸ்க்குகளை யோசித்து செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. பிக் பாஸ் இல்லாத நேரத்தில் அவருக்காக கடிதம் எழுதும் டாஸ்க்கை யோசித்தது சிறப்பானதொன்று. ஆனால் சில சமயங்களில் பிக் பாஸின் ஸ்டைல் அன்சருக்கு வரவில்லை. வீட்டில் உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருந்தால் பிக் பாஸ் அதை உற்சாகமாக வேடிக்கை பார்த்து விட்டு பிறகுதான் உள்ளே வருவார். ஆனால் அன்சரோ, ஷாதிகாவிற்கும் வாசனுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த போது குறுக்கிட்டு அடுத்த டாஸ்க் பற்றி நினைவுபடுத்தினார். 

பரோட்டா காமெடி மாதிரி ஆட்டத்தைக் கலைத்த ஷாதிகா

‘இந்த கிளாஸ்லயே.. ஏன்.. இந்த ஸ்கூல்லயே.. ஏன்.. இந்த மாநிலத்திலேயே.. ஏன்.. இந்த உலகத்திலேயே பெஸ்ட் ஸ்டூடண்ட் நான்தான். என்னை லீடராக்காம கண்ட கண்ட ஆட்களை ஜூனியர் பிக் பாஸா உக்கார வைக்கறாங்களே.. பிக் பாஸிற்கே பாடம் கத்துக் கொடுக்ககூடிய அளவிற்கு திறமை உள்ளவன்டா நானு’ என்று கறுவிக் கொண்டிருந்த ஜேசன், அடுத்த ஜூனியரை தேர்ந்தெடுக்கும்  போதெல்லாம் குறுக்கே கட்டையைப் போட்டுக் கொண்டிருந்தார். போதாதற்கு வினோத்துடன் வேறு ஏழரை. எனவே ‘என்னைப் பார்த்தா உங்களுக்கெல்லாம் பிக் பாஸா தெரியலையா?” என்று கேட்டு, விவாதத்தின் போது ஒப்புக் கொள்வது மாதிரி தலையாட்டி விட்டு, தேர்வின் போது ‘நான் ஆட்டைக்கு வரலை’ என்று எஸ்கேப் ஆகி அலப்பறை செய்து கொண்டிருந்தார். 

bb tamil 10
bb tamil 10

இப்போது ஜேசனின் பிரதான சிஷ்யையாக மாறியிருக்கும் ஷாதிகாவிற்கும் இதே பழக்கம் ஒட்டிக் கொண்டு விட்டது. தன்னுடைய லீடர் பதவியை காலி செய்த வினோத்தை பழிவாங்க ‘ஜூனியர் பிக் பாஸை மாத்தணும்’ என்று தைய்யா தக்கா என்று குதித்துக் கொண்டிருந்தார். பிறகு அன்சரையும் மாத்தணும் என்று உக்கிரமாக களத்தில் இறங்கி அனைவரையும் திரட்டியவர், மேடையில் அழும் அரசியல்வாதி மாதிரி திடீரென்று ‘அன்சரை விட்டா நம்மள காப்பாத்தறதுக்கு யாரு இருக்கா?” என்று ஷாதிகா கலங்கி அழுததில் பிக் பாஸ் சமஸ்தானமே ஆடிப் போயிற்று. ‘இவன் வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டே இருக்கான்’ என்று எரிச்சல்படும் அளவில் ஷாதிகாவின் ஆட்டம் இருந்தது. அதிலும் அவர் கையை ஆட்டி ஆட்டி பாயிண்ட் பாயிண்ட்டாக பேசும் போதெல்லாம் சிரிப்பாக வந்தது. 

டாஸ்க்கில் தன்னை முன்னிறுத்தி போராடவில்லையென்றால் வார இறுதியில் ஹோஸ்டின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே என்று திடீர் ஞானோதயம் பெற்று விட்ட தன்யா, ரேங்கிங் டாஸ்க், ஜுனியர் பிக் பாஸ் டாஸ்க் என்று அனைத்திலும் முடிந்த வரை போராடினார். ஆனால் அவரை யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே ‘இருக்கற இடம் தெரியாம இருந்துடணும்’ என்கிற போட்டியாளராக தன்யா இருந்ததுதான் காரணம். திடீரென விழித்துக் கொள்ளும் போது மற்றவர்களுக்கு நம்புவது சிரமமாக இருக்கிறது. என்றாலும் தன்யாவின் இந்த தாமதமான போராட்டக் குணம் பாராட்டத்தக்கதது. 


அன்சரின் பதவியைப் பிடுங்கி எப்படியாவது தான் அமர வேண்டும் என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் போட்டியாளர்களுக்குள் நடந்து கொண்டிருந்த போது, அது பிக் பாஸிற்கே பொறுக்கவில்லையோ, என்னமோ, ‘டக்..டக்’ என்கிற ஷூக்கால் சத்தத்துடன் வீட்டில் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார். ‘குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும் வாங்கி வர முடியாததற்கு’ வாசனிடம் குறும்பாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். 

சக அடிமை முன்னேறினால் இன்னொரு அடிமைக்கு பிடிப்பதில்லை

இந்த ஜூனியர் பிக் பாஸ் டாஸ்க்கின் மூலம் இரண்டு விஷயங்கள் நிரூபணமாகின. அடிமைகளின் கூட்டத்தில் யாராவது ஒருவர் முன்னேறி அதிகார வட்டத்திற்கு முன் நகர்ந்தால் மற்ற அடிமைகளுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. ‘அது எப்படி அவன் மேலே போலாம்?’ என்று பின்னே இழுத்துப் போடுகிறார்கள். 

எந்தவொரு அலுவலகத்திலும் இதைப் பார்க்கலாம். தனக்கு இணையாக பணிபுரிந்து கொண்டிருந்த சக ஊழியருக்கு பிரமோஷன் கிடைத்து முன்னேறி விட்டால் மற்ற பெரும்பாலான ஊழியர்களுக்கு அது பிடிக்காது. சட்டென்று விரோதிகளாக மாறி விடுவார்கள். இதே குணாதிசயம்தான் இந்த டாஸ்க்கில் வெளிப்பட்டது. 

இரண்டாவது, ஒரு சரியான தலைமை இல்லாவிட்டால், அந்தக் கூட்டம் எப்படி தங்களுக்குள் அடித்துக் கொண்டு இருக்கிற அமைப்பின் அம்சங்களை தாறுமாறாக பிய்த்துப் போடுகிறது என்பது மறுபடியும் நிரூபணமாகிறது. 

நான் பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் பிக் பாஸ் சீசன்களை பார்த்து எழுதி வருகிறேன். ஜேசன் போன்ற சிக்கலான, முரண்கள் குவிந்திருக்கிற ஒரு போட்டியாளரை இதுவரை கண்டதில்லை. இதுவே அவரின் மீது எரிச்சலையும் இன்னொரு பக்கம் சுவாரசியத்தையும் தருகிறது. 

bb tamil 10
bb tamil 10

வீட்டிற்குள் ஆவேசமாக சண்டை போடும் அசிம், பாலா முருகதாஸ் போன்ற சண்டைக் கோழிகள் கூட வார இறுதி நாட்களில் ஹோஸ்ட் முன்னால் போலியாக பம்மி அமர்ந்து விடுவார்கள். ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படக்கூடாது என்கிற அச்சத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். 

“ஜேசன்.. நீங்க நல்லவரா.. கெட்டவரா.. இல்ல பழக்கடை மூர்த்தியா?”

ஆனால் தான் மனதில் நினைப்பதை அப்படியே வெளிப்படுத்தும் திமிர் கொண்ட நேர்மையாளராக ஜேசன் இருக்கிறார். “நான் சொன்னதை நீங்க புரிஞ்சுக்கலை.. என்னை பேச விட மாட்டேன்றீங்க” என்று எந்தவொரு போட்டியாளரும் சொல்லத் தயங்குகிற விஷயங்களை விஜய்சேதுபதியிடம் துணிச்சலாக வெளிப்படுத்துகிறார். இவையெல்லாம் அவமரியாதை செய்கிற விஷயங்கள் அல்ல. ஆனால் கடுமையான எச்சரிக்கைகளை மீறியும் அவர் காட்டுகிற உடல்மொழி அசைவுகள், சைகைகள்தான் (gestures) எரிச்சல்படுத்துகின்றன. 

தன்னைத் தாண்டி வெற்றி பெறுகிற போட்டியாளர் மீது நமக்கு பொறாமையும் எரிச்சலும் வருவது வழக்கம்தான்.. ஆனால் சபை நாகரிகம் கருதி  உள்ளூற ஒளித்துக் கொண்டு அவருடைய வெற்றிக்கு போலியாக கைத்தட்டுவோம். ஆனால் ஜேசன் இந்த போலித்தனத்தை எப்போதும் செய்வதில்லை. வாசன் உள்ளிட்டவர்களுக்கு அதிகமாக கைதட்டல் வரும் போதும் சரி, ஷமாவிற்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும் போதும் சரி..  என்று பல சமயங்களில் தன் அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். நம்மை தவறாக நினைப்பார்களே என்றெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை.

மக்களின் வாக்குகள் குறைந்து விடும் என்பதற்காக பார்வையாளர்களுக்கு எதிராக பேசுவதற்கு எந்தவொரு போட்டியாளரும் துணிய மாட்டார்கள். ஆனால் ஜேசனோ, ‘மக்கள்தான் என் வெற்றிக்கு தடைக்கல்லாக இருக்கக்கூடும். இங்குள்ள எவரும் எனக்கு சமமானவர்கள் அல்ல’ என்கிற மாதிரி ஒரு டாஸ்க்கில் சொல்கிறார். ‘மக்கள் கருத்து முக்கியமில்லையா?’ என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் போது ‘I don't care’ என்று பழக்கடை மூர்த்தி மாதிரி அசால்ட்டாக பதில் சொல்கிறார். 

ஜேசனால் சக போட்டியாளரின் வெற்றியைத் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. அனைத்து வெற்றியும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று கருதுகிறார். இந்த Superiority Complex-ம் கறாரான போட்டி மனப்பான்மையும் ஒரு வகையில் கவர்ச்சிகரமான அம்சமாகவும் இன்னொரு வகையில் எரிச்சலூட்டும் அம்சமாகவும் இருக்கிறது. 

ஒருவரின் ஆட்டம் முடியும் போது அவர் மீதுள்ள அத்தனை கசப்புகளையும் விரோதங்களையும் கைவிட வேண்டும். ஏனெனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நிகழும் அத்தனை பகைமைகளும் அந்த ஷோவின் ஃபார்மட்டால் ஏற்படுவது. வெளியேறும் போட்டியாளர்கள் பலருக்கும் இது புரிகிறது. ஆனால் ஜேசனுக்கு புரியவில்லை. முத்தழகியின் எவிக்ஷனின் போது எதிலும் கலந்து கொள்ளாமல் தள்ளி நின்று தவிர்த்தார். அவரிடம் ஸ்போர்ட்மேன்ஷிப் இல்லாததன் குறைபாட்டை இது காட்டுகிறது. 

அதே சமயத்தில் யாரிடமும் நட்பு பாராட்டாத காட்டுமிராண்டியாக ஜேசன் இருக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. வினோத், அன்சர், முகேஷ், அவினாஷ் என்று நெருக்கமான நட்பு வட்டம் அமைந்திருந்தது. முனியம்மாளின் ஆட்டத்திறனை பல சமயங்களில் ஜேசன் புகழ்ந்திருக்கிறார். சாந்தினி, அக்ஷிதா, தற்போது ஷாதிகா என்று தோழிகளும் அமைந்திருக்கிறார்கள். ‘எனக்கு அழ வராது ப்ரோ’ என்று சொல்லிக் கொண்டாலும் ஜேசன் கண்கலங்கி உணர்ச்சிவசப்படும் தருணங்களும் உண்டு. 

bb tamil 10
bb tamil 10

ஜேசனுக்கு விஜய் சேதுபதி ரெட் கார்ட் தந்திருக்க வேண்டுமா?


‘இந்தி பிக் பாஸில் சல்மான்கானைப் பாருங்கள். எந்தவொரு போட்டியாளராவது சிறிய அவமதிப்பு செய்தால் கூட வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இங்குள்ள ஹோஸ்டிற்கு துணிச்சல் இல்லை’ என்கிற மாதிரி சமூக வலைத்தளங்களில் விஜய்சேதுபதியை சிலர் வசைபாடுகிறார்கள். ‘என் கிட்ட அப்படில்லாம் பேசக்கூடாது ஜேசன்’ என்று அடிக்கடி எச்சரித்தாலும் “நான் வெளியே போறேன்” என்று ஜேசன் சொன்ன போது அதை உடனே ஏற்காமல் நிதானித்தார் விசே. “அவர் இந்த மாதிரி ஓவரா ஆட்டிடியூட் காட்டறாரு. எப்படி நீங்க சகிச்சக்கறீங்க?” என்று பார்வையாளர் ஒருவர் கேட்ட போது “அது அவரோட இயல்பு. இந்த ஆட்டம் அப்படி. அதுக்காக நாம ஏன் வெறுக்கணும்?’ என்று விசே சொன்னது முதிர்ச்சியான பார்வை. ‘உங்க கேம் பிடிக்கும் ஜேசன். நல்லா ஆடுங்க’ என்று பிறகு  விசே பாராட்டியதும் சிறப்பு. 


ஜேசன் போன்ற முக்கியமான பிளேயரை பிக் பாஸ் டீம் இழக்க விரும்பவில்லை, அதனால்தான் வெளியே அனுப்பத் தயங்குகிறார்கள் என்கிற யூகமெல்லாம் தவறாக இருக்கலாம். பிரதீப் போன்ற ஒரு சீசனின் ஆட்டத்தையே நிர்ணயித்தவர்களையெல்லாம் பாதியில் வெளியே அனுப்பியிருக்கிறார்கள். 

தன்னைச் சுற்றி இந்த சீசனை சுற்ற வைப்பதில் பெரும்பாலும் ஜேசன் வெற்றி பெறும் போது அவருடைய உத்தியை வெற்றிகரமாக டீகோட் செய்பவர்களும் இருக்கிறார்கள். “ஏன் அவனை நடுவுல உக்கார வெச்சி பேசி முக்கியத்துவம் கொடுக்கறீங்க?” என்று சலித்துக் கொண்ட லட்சுமிபிரியா, “வாரம் ஃபுல்லா அட்டாக் மோடுல இருப்பாரு. நடுவுல தன்னோட கிரே ஷேடை காண்பிப்பாரு. வாரக் கடைசில ‘நான் நல்லவன்’ன்ற மாதிரி காட்டிப்பாரு” என்று ஜேசன் குறித்து LP சொன்னது துல்லியமான பார்வை. ஜேசனை டீகோட் செய்வதில் வினோத்தின் கருத்துகளும் முக்கியமானவை.


எதையுமே செய்யாமல் சும்மா இருக்கிற போட்டியாளரை விடவும், ஏதாவது ஒரு உரண்டையை இழுத்துக் கொண்டேயிருந்து விட்டு, உக்கிரமாக சண்டை போட்டு விட்டு அத்தனை கவன ஈர்ப்புகளையும் நிகழ்த்தி, கடைசியில் சம்பந்தப்பட்டவரிடம் ‘ஸாரி ப்ரோ’ என்று கைகுலுக்கினால், அவர் மீது எரிச்சலும் பிறகு பரிதாபமும் தோன்றி ‘ச்சே.. என்னா மனுஷன்யா’ என்றாகி விடும். இந்த உத்தியை திட்டமிட்டோ அல்லது தன்னிச்சையாகவோ ஜேசன் பின்பற்றுகிறார் என்று தோன்றுகிறது. 

bb tamil 10
bb tamil 10

இப்போதைய நிலவரப்படி வினோத், அன்சர், முனியம்மாள், ஜேசன் ஆகிய நால்வரும் முக்கியமான ஆட்டக்காரர்களாக இருப்பதாகத் தோன்றுகிறது. வாசனுக்கு அவர் சம்பாதித்து வைத்திருக்கும் ரசிகக்கூட்டம் தொடர்ந்து காப்பாற்றுமா என்று தெரியவில்லை. 

டாப் டென் என்று பத்து நபர்களாக சுருங்கியிருக்கும் நிலைமையில் இனிவரும் வாரங்கள் எப்படி சுவாரசியமாக இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

இந்த டாப் டென் போட்டியாளர்களில் உங்களின் மனம் கவர்ந்தவர் யார் என்பதை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். 

Bigg Boss 10: ஜேசனின் EVP தியாகம்; அஷ்மிதா செய்த அட்டகாசமான கொலைகள்- இந்த வாரம் என்ன நடந்தது?

அஷ்மிதாவும் அக்ஷிதாவும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இருவரின் பெயர்களை எழுதும் போதெல்லாம் சமயங்களில் குழப்பம் வரும். இனி அந்தப் பிரச்சினை இல்லை.அஷ்மிதா எப்போதோ எலிமினேட் ஆகியிருக்க வேண்டியவர். முகேஷ... மேலும் பார்க்க