பிரான்ஸ் போராட்டம் உலகிற்கு என்ன சொல்கிறது? - Gen Z எழுச்சியின் நேரடி சாட்சியங்க...
பிரான்ஸ் போராட்டம் உலகிற்கு என்ன சொல்கிறது? - Gen Z எழுச்சியின் நேரடி சாட்சியங்கள்!
தென்னாசிய நாடான நேபாளத்தில் ஆட்சியையே கவிழ்த்த இளம் தலைமுறையின் போராட்டம், இந்தியாவில் நீட் (NEET) மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களில் டெல்லி வீதிகளில் எதிரொலித்த மாணவர்களின் ஆவேசக் குரல்கள்... என உலகின் பல்வேறு நாடுகளிலும் ‘Gen Z’ எனப்படும் இளம் தலைமுறையினர், ஆட்சியாளர்களுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் எதிராக வீதிகளில் இறங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தச் சர்வதேச இளைஞர் எழுச்சியின் மற்றொரு களமாக மாறியிருக்கிறது பிரான்ஸ்!
பிரான்ஸின் அமைதியான புறநகர் வீதிகள் போராட்ட முழக்கங்களால் அதிர்ந்திருக்கின்றன. பாரிஸ் நகரின் தென்கிழக்குப் புறநகர் கிரெத்தயில் (Créteil). அங்கு ஒரு பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறைக்கும் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் இல்லாததற்கும் எதிராக செப்டம்பர் மாதம் மாணவர்கள் தொடங்கிய போராட்டம், படிப்படியாக நாடு தழுவிய மக்கள் போராட்டமாக உருவெடுத்தது.

மாணவர்களுடன் தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் கைகோக்க, அக்டோபர் 17 அன்று மட்டும் லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டனர். போராட்டக் களத்தில் அரங்கேறிய வன்முறைகளும் கடைகள் சூறையாடப்பட்ட சம்பவங்களும் உலகளவில் பேசுபொருளாகின. கல்விசார் கோரிக்கைகளுடன் தொடங்கிய மாணவர்களின் போராட்டம், எப்படிப் பொருளாதார நெருக்கடி, அரசியல் அதிருப்தி, சமூகப் பிளவுகள் எனப் பல்வேறு பிரச்சனைகளையும் வெளிக்கொண்டுவந்தது? இந்த எழுச்சியில் Gen Z தலைமுறையின் பங்கு என்ன? பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடமே பேசினோம்.
“பிரான்ஸில் தற்போது நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே Gen Z தலைமுறை மாணவர்கள்தான். மாணவர் பேரவைகளும் மாணவர் அமைப்புகளும்தான் முதலில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன. ஆனால், இது வெறும் கல்விசார் கோரிக்கைகளுக்கான போராட்டம் மட்டுமல்ல. இன்றைய இளம் தலைமுறையினர் அரசியல் அமைப்புகளை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் இந்தப் போராட்டம் வெளிப்படுத்துகிறது!” என்கிறார், பாரிஸின் புறநகரான வில்னேவ்-லா-கரென் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்துவரும் காரை அக்பர்.

அவர் விரிவாகப் பேசுகையில், “பிரான்ஸில் கல்வி, மருத்துவம், நீதி ஆகியவை மக்களின் அடிப்படை உரிமைகளாகவே கருதப்படுகின்றன. விலை உயர்ந்த உயிர்காக்கும் மருந்துகள்கூட அரசின் மருத்துவக் கட்டமைப்பு மூலம் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால், நீண்டகாலப் பொருளாதார மந்தநிலையும் நிதிப் பற்றாக்குறையும் இந்தக் கட்டமைப்பைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. நிதிச்சுமையைச் சமாளிக்க அரசு மேற்கொள்ளும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளால் மக்கள் இதுவரை அனுபவித்துவந்த சலுகைகள் படிப்படியாகக் குறைகின்றன. அதுதான் மக்களின் அதிருப்தியை அதிகரிக்கிறது.
குறிப்பாக, கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதால் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படுவதில்லை. முன்பெல்லாம் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது 30 முதல் 38 மாணவர்கள் வரை சேர்க்கப்படுகிறார்கள். பள்ளிகள், பல்கலைக்கழகங்களின் கட்டடங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பல ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனைகளுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் தொடங்கிய போராட்டம்தான், மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களை இரண்டு தரப்பினராகப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு தரப்பினர் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மாணவர்கள். மற்றொரு தரப்பினர், போராட்டச் சூழலைப் பயன்படுத்தி வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்.
கடைகளின் கண்ணாடிகளை உடைப்பது, பொருட்களைச் சூறையாடுவது, குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைப்பது, பட்டாசுகள் போன்ற வெடிபொருட்களைப் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்குள் வீசுவது எனப் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுடன் தொடர்புடைய சில இளைஞர்களும் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் காவல்துறையினரைத் தாக்குவதிலும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவதிலும் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இவர்களையும் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மாணவர்களையும் ஒன்றாகப் பார்க்க முடியாது.
இந்தப் போராட்டங்களில் சமூக வலைதளங்களின் பங்கு மிக முக்கியமானது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தளங்கள் மூலமாகவே மாணவர்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள். அதேநேரத்தில், வன்முறையில் ஈடுபடும் குழுக்களும் இந்தத் தளங்களைத் தங்களுடைய செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்துகின்றன. வன்முறைச் சம்பவங்களை வீடியோவாகப் பதிவுசெய்து வெளியிடுவதும் நடக்கிறது.

மாணவர்கள் தொடங்கிய போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆதரவளிக்கத் தொடங்கிய பிறகுதான், அது நாடு தழுவிய மக்கள் போராட்டமாக விரிவடைந்தது.
இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகம் முழுவதும் இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தற்போதைய அரசியல் அமைப்புகள் மீதும் அவற்றை வழிநடத்தும் தலைவர்கள் மீதும் நம்பிக்கை குறைந்து வருகிறது. முந்தைய தலைமுறையினரின் அரசியல் மொழியும் அணுகுமுறையும் இவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. மதம், இனம், மொழி, சாதி போன்ற அடையாளங்களைக் கடந்து பொதுவான பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து சிந்திக்கும் போக்கும் இவர்களிடம் இருக்கிறது. இந்தத் தலைமுறையின் அரசியல் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் அவர்களுடைய போராட்டங்களையும் புரிந்துகொள்ள முடியாது.
அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், பொருளாதார நெருக்கடி நீடித்தால் போராட்டங்கள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவக்கூடும்.” என்கிறார்.
“பிரான்ஸ் முழுவதுமே வன்முறையில் மூழ்கியிருப்பதுபோன்ற தோற்றம் உலக ஊடகங்களில் உருவாக்கப்படுகிறது. ஆனால், கள நிலவரம் அப்படியல்ல!” என்கிறார் பாரிஸில் வசிக்கும் சுயாதீனப் பத்திரிகையாளர் ஜேஸ்.
அவர் விரிவாகப் பேசுகையில், “பிரான்ஸில் போராட்டங்கள் புதிதல்ல. 1968-ல் மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய எழுச்சி, அந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமானது. தற்போதைய போராட்டமும் மாணவர்களின் கோரிக்கைகளில் தொடங்கி, தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் இணையும் போராட்டமாக மாறியிருக்கிறது.

ஆசிரியர் பற்றாக்குறை, பழமையான பள்ளிக் கட்டடங்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளை மாணவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கினர். சில இடங்களில் காவல்துறையினரின் தாக்குதல்களிலிருந்து மாணவர்களை ஆசிரியர்களே பாதுகாத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
ஆனால், அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் சில இடங்களில் கடுமையான வன்முறையாக மாறியது. பெரிய வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அவற்றுக்கு அருகிலிருந்த சிறிய கடைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. செல்போன் கடைகள், மளிகைக் கடைகள், சிறிய உணவகங்கள் எனச் சாதாரண மக்களின் வாழ்வாதாரமும் சேதமடைந்தது. அவற்றில் பல கடைகள் புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படுபவை என்பதையும் கவனிக்க வேண்டும்.
இங்கு முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், போராட்டக்காரர்களுக்கும் வன்முறையாளர்களுக்கும் உள்ள வேறுபாடு. பிரெஞ்சு மொழியில் பொதுச் சொத்துகளை உடைத்து நாசப்படுத்துபவர்களை ‘Casseurs’ என்று அழைப்பார்கள். அமைதியாக நடைபெறும் போராட்டங்களுக்குள் கறுப்பு உடையணிந்து நுழையும் சில வன்முறையாளர்கள், முதலில் காவல்துறையினருடன் மோதலை ஏற்படுத்துகிறார்கள். பின்னர் அருகிலுள்ள கடைகளின் கண்ணாடிகளை உடைத்து, ஷட்டர்களைச் சேதப்படுத்தி, பொருட்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இது திட்டமிட்ட குற்றச்செயல்.
அதேநேரத்தில், வரலாற்றுச் சின்னங்களையும் அரசு அலுவலகங்களையும் சிறு வணிகர்களின் கடைகளையும் சேதப்படுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையாகப் போராடும் மக்களாலேயே இந்த வன்முறைக் கும்பல்களைத் தங்களிடமிருந்து பிரித்துக் காட்ட முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
இந்த வன்முறைகளுக்கு இன்னொரு ஆபத்தான பக்கமும் இருக்கிறது. பிரான்ஸில் நடைபெறும் சம்பவங்களை முன்வைத்து, ஆப்ரிக்க அமெரிக்கர்கள், வட ஆப்பிரிக்க வம்சாவளியினர், இஸ்லாமியர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீது வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரான்ஸில் வாழும் புலம்பெயர்ந்த சமூகங்கள் குறித்து விமர்சனங்களே இல்லை என்று சொல்லவில்லை. பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால், ஒரு போராட்டத்தில் நடந்த வன்முறைகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மதத்தினரையும் இனத்தவரையும் குற்றவாளிகளாக்குவது தவறு. ஏற்கெனவே இஸ்லாமியர்கள் மீதும் கறுப்பினத்தவர்கள் மீதும் வெறுப்பைக் கொண்டிருக்கும் தீவிர வலதுசாரிகள், இந்தச் சம்பவங்களைத் தங்களுடைய அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதே என்னுடைய பார்வை.
2027-ல் பிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த வன்முறைகள் அரசியல் முக்கியத்துவமும் பெற்றிருக்கின்றன. மாணவர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்ததைச் சுட்டிக்காட்டி, வலதுசாரிகள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை வலுப்படுத்த முயல்கிறார்கள்.

போராட்டங்களால் எங்களுக்கும் போக்குவரத்து நெரிசல், ரயில் சேவைகளில் மாற்றம், பாரிஸின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத சூழல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டன. ஆனால், பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் பாதுகாப்பாகவே இருந்தன. பிரான்ஸ் முழுவதும் ஒரே நேரத்தில் கலவரம் நடந்ததுபோலக் காட்டுவது உண்மையான நிலவரத்தைப் பிரதிபலிக்காது.
இவ்வளவு பெரிய போராட்டத்துக்குப் பிறகும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு முழுமையான தீர்வை அறிவிக்கவில்லை. கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது குறித்த உறுதிமொழிகள்தான் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் எழுப்பிய அடிப்படைப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும். இல்லையென்றால், இத்தகைய போராட்டங்களுக்கான காரணங்கள் தொடர்ந்து நீடிக்கும்” என்கிறார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த எல்.எஸ்.பிரவீன், 2022-ல் மேற்படிப்புக்காக பிரான்ஸுக்குச் சென்றவர். தற்போது தெற்கு பிரான்ஸின் நீஸ் (Nice) நகரில் உற்பத்தித் துறையின் விநியோகச் சங்கிலிப் பிரிவில் பணியாற்றுகிறார்.
அவர் விரிவாகப் பேசுகையில், “நான் வசிக்கும் நீஸ் நகரில் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியாகவே நடைபெறுகின்றன. மாணவர்கள், தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் பங்கேற்கிறார்கள். குறிப்பாக, பிரெஞ்சு மக்கள் அதிக அளவில் போராட்டங்களில் கலந்துகொள்வதை நேரில் பார்க்கிறேன். ஆனால், ஊடகங்களில் அரபு மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் இடம்பெறும் காட்சிகளையே அதிகம் முன்னிலைப்படுத்துகிறார்கள்.
போராட்டங்களால் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழி படித்து வருகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக வகுப்புகள் நடைபெறவில்லை. இப்போதுதான் மீண்டும் தொடங்கியிருக்கின்றன.

நான் 2022-ல் பிரான்ஸுக்கு வந்தபோதே இங்கு விலைவாசி அதிகமாக இருந்தது. வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்ப மக்களின் ஊதியம் உயரவில்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைவிட ராணுவத்துக்கான செலவுகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.
இன்னொரு முக்கியமான பிரச்சனை காலநிலை மாற்றம். பிரான்ஸ் பொதுவாகக் குளிரான நாடு என்பதால், இங்குள்ள கட்டடங்களும் அதற்கேற்பவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான இடங்களில் ஏசி இருக்காது. இந்த முறை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. வகுப்பறைகளில் அமர்வதே அடுப்புக்குள் உட்கார்ந்திருப்பதுபோல இருந்தது. நானும் அந்தச் சிரமத்தை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்தாததும் மக்களின் அதிருப்திக்கான காரணங்களில் ஒன்று.
இப்படிப் பல்வேறு பிரச்சனைகளால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த மக்கள், மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தை ஒரு பொதுவான களமாகப் பயன்படுத்தி ஒன்றிணைந்திருக்கிறார்கள்” என்கிறார்.
தற்போதைய நிலவரம் என்ன?
மாணவர்களின் போராட்டம் தொடங்கி ஏறக்குறைய இரண்டு மாதங்களாகியும் பிரான்ஸில் போராட்டங்கள் ஓயவில்லை. கடந்த நவம்பர் 14-ம் தேதி நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தில் 1,06,000 பேர் பங்கேற்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. பாரிஸில் மட்டும் 24,000 பேர் திரண்டிருக்கிறார்கள். கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் காவல்துறையின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் மக்கள் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

புதிய ஆசிரியர்களை நியமிப்பது, வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்துவது, உயர்கல்வி மாணவர் சேர்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது எனப் பல்வேறு உறுதிமொழிகளை பிரான்ஸ் அரசு அளித்திருக்கிறது. எனினும், அரசின் அறிவிப்புகள் போதுமானதாக இல்லை எனக் கருதும் மாணவர் அமைப்புகள், நவம்பர் 17-ம் தேதி மீண்டும் பள்ளி முற்றுகைப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.
நேபாள், பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் வெளிப்பட்ட 'ஜென்சி' (Gen Z) தலைமுறையின் அதிருப்திக்குப் பின்னால் இருக்கும் ஒரு அடிப்படையான கேள்வி, “எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியல் முடிவுகளில் எங்களுடைய பங்கு என்ன?” என்பதுதான். தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆட்சியாளர்களிடம், தங்களுக்கான பதில்களைக் கேட்கின்றனர்.
மேலும், முந்தைய தலைமுறையினர் பெரிதாகக் கேள்விக்குள்ளாக்காத அரசியல் அணுகுமுறைகளையும் அதிகார அமைப்புகளையும் இன்றைய ஜென்சி இளைஞர்கள் துணிச்சலாகக் கேள்வி கேட்கின்றனர்.
இனி இவர்களின் குரல்களை அரசுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதில்தான் உலக நாடுகளின் எதிர்காலம் அடங்கியுள்ளது!















