`காதல், போதைப்பொருள், பாக்., தொடர்பு' ராஜஸ்தான் குண்டுவெடிப்பில் பஞ்சாப் இளம்பெண...
`காதல், போதைப்பொருள், பாக்., தொடர்பு' ராஜஸ்தான் குண்டுவெடிப்பில் பஞ்சாப் இளம்பெண் சிக்கியது எப்படி?
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2ம் தேதி வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பகுதியை சேர்ந்த மஹதீப் கவுர்(21) என்ற பெண்ணும், தேவிந்தர் சிங்(22) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் போலீஸார் இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் பாகிஸ்தானை சேர்ந்த எல்லை தாண்டிய கிரிமினல்கள் இவர்கள் இரண்டு பேரையும் இயக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தச் செயலைச் செய்து முடிப்பதற்காக இருவருக்கும் லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ராஜஸ்தானுக்குச் சென்று, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஷா என்ற நபரின் சொல்படி ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டை வைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஷா என்ற நபர்தான் இந்த செயலை கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் பயன்படுத்தி செய்து இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கலனூர் பகுதியில் வைத்து, அந்த இருவரையும் ராஜஸ்தான் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தான் கிரிமினலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
மஹதீப் பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் இருக்கும் கிரிமினல் கும்பலுடன் தொடர்பு கொண்டதற்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது முன்னாள் கணவரே காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பௌபூர் கிராமத்தைச் சேர்ந்த மஹதீப் முன்னாள் கணவர் கரண் தீப் சிங் மற்றும் அவரது உறவினர் ஒருவர், பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், எல்லை வழியாக போதைப்பொருளை வாங்கி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொடர்புகள் மூலமாகவே மஹதீப்பிற்கு ஷா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், காலப்போக்கில் அவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு நேரடியாக அவருக்காக வேலை செய்யத் தொடங்கியிருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மஹதீப்பின் முன்னாள் கணவர் ஓராண்டுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கில் போதைப்பொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது சகோதரரும் போதைப்பொருள் வழக்கு ஒன்றின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவிந்தருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் மஹதீப் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நாளடைவில் அது ஒரு காதல் உறவாக மாறியது.
தேவிந்தரை திருமணம் செய்து கொள்வதாக தேவிந்தரின் தாயார் பல்ஜித் கௌர் மற்றும் அத்தை சுக்விந்தர் கௌர் ஆகியோரிடம் மஹதீப் உறுதியளித்துள்ளார். அதன் பிறகு தேவிந்தரை குற்றச் செயல்களில் ஈடுபடுத்திவிட்டதாக தேவிந்தர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் ராஜஸ்தானில் குண்டு வைக்க சென்ற போது மஹதீப்புடன் தேவிந்தர் சென்றதுடன், அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்கும் உதவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருவரும் பணிகளை பிரித்து செய்துள்ளனர். மூன்று முறை இதற்காக அவர்கள் ராஜஸ்தான் சென்றுள்ளனர். இது குறித்து ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' அந்த இருவரும் முதலில் அக்டோபர் 3-4 தேதிகளில் ராஜஸ்தானுக்குச் சென்றனர். ஷாவின் அறிவுறுத்தலின் பேரில், அவர்கள் ஸ்ரீகங்காநகர் பகுதியை அடைந்தனர். அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடமிருந்து அவர்களுக்கு வெடிபொருட்கள் கிடைத்தன.
அவர்கள் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் ஒரு வெடிகுண்டை வைத்தார்கள். ஆனால் அது வெடிக்கவில்லை. அக்டோபர் 12ம் தேதி மீண்டும் ராஜஸ்தான் வந்து வெடிகுண்டு வைக்க வேண்டிய இடங்களை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். அதன் பிறகு கடந்த 30ம் தேதி மீண்டும் ராஜஸ்தான் வந்து ஏற்கனவே தங்கி இருந்த ஹோட்டலில் தங்கி வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர்''என்றார்.
மஹதீப்பின் தாயார் சரப்ஜித் கவுர் தனது மகள் குறித்து கூறுகையில், தனது மகள் குடும்பத்தினரிடமிருந்து படிப்படியாக விலகிச் சென்றதாகவும், அவர்களின் பேச்சைக் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். மஹதீப் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

















