ஈரோடு: போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூங்கா! | Photo Album
கருவிலேயே சிசுவுக்கு அறுவை சிகிச்சை: எய்ம்ஸ் மருத்துவர்களின் வரலாற்றுச் சாதனை!
இந்திய மருத்துவ வரலாற்றில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தாயின் கருப்பைக்குள் 25 வாரக் கருவாக இருந்த சிசுவுக்கு, கடுமையான முதுகுத் தண்டுவடக் குறைபாட்டைச் சரிசெய்யும் ஆறு மணி நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கருவிலேயே சிசுவுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அறுவை சிகிச்சை இதுவாகும்.
மைலோமெனிங்கோசீல் பாதிப்பு
சிசுவுக்கு 'மைலோமெனிங்கோசீல்' என்ற பாதிப்பு இருந்தது. இது 'ஸ்பைனா பைஃபிடா' எனப்படும் முதுகுத் தண்டுவடப் பிறவிக் குறைபாட்டின் மிகக் கடுமையான வகையாகும். கரு வளர்ச்சியின்போது முதுகெலும்பு முழுமையாக மூடப்படாமல் போவதால், முதுகுத் தண்டுவடமும் நரம்புகளும் வெளியே துருத்திக்கொள்ளும். இதனால் கால்களை அசைப்பதில் சிரமம், நடக்க முடியாத நிலை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும்.

கருவிலேயே செய்யப்படும் சிகிச்சை
பொதுவாக இதுபோன்ற குறைபாடுகளுக்குக் குழந்தை பிறந்த பிறகே அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், கருவிலேயே சிகிச்சை அளிக்கும்போது நரம்புகள் தொடர்ந்து சேதமடைவது தடுக்கப்படுகிறது. இதனால் பிற்காலத்தில் மூளையில் நீர் தேங்கும் அபாயம் குறைகிறது. எனினும், இதன் முழுமையான பலன் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே அமையும்.
ஆறு மணி நேர எய்ம்ஸ் அறுவை சிகிச்சை
நவம்பர் 12-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை மையத்தில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா தலைமையில், மகப்பேறு மற்றும் தாய்-சிசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழு இதில் பங்கேற்றது. தாயின் கருப்பை திறக்கப்பட்டு, கருவின் முதுகுப் பகுதியில் இருந்த குறைபாடு கவனமாகச் சரிசெய்யப்பட்டது.

ஆபத்துகளும் மருத்துவக் கண்காணிப்பும்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாயும் சிசுவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தாயின் கருப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதுடன், எதிர்காலப் பிரசவங்களிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
அரசு மருத்துவமனையின் சாதனை
உலகில் சில சிறப்பு மருத்துவ மையங்களில் மட்டுமே இது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் அதுவும் எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் இது இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. வசதியற்ற குடும்பங்களுக்கும் இத்தகைய அதிநவீன சிகிச்சைகள் கிடைக்க இந்த முயற்சி ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்துள்ளது.


















