RBI-க்கு கிடைத்த 12.50 லட்சம் கோடி! வங்கி FD-யே சரணாகதி என்று இருந்தால் பெரும் ப...
"தவெக ஆட்சி வந்தது நல்லதுதான்!" - சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா
2026 சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் இடைத்தேர்தலில் மீண்டும் தனித்தேப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இச்சூழலில் அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்கானாவை தொடர்பு கொண்டு பேசினேன்.
"2026 சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துவிட்டப் போதிலும் இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குவது ஏன்?"

"வெற்றி தோல்வியை கணக்கிட்டு நாம் தமிழர் கட்சி அரசியல் செய்திருந்தால் 2016-ல் 1.1% வாக்குகள் பெற்றபோதே நாங்கள் கூட்டணி அரசியலை கையிலெடுத்திருப்போம். அன்றைக்கே கூட்டணிக்குப் போகாதா நாங்கள் 4% வாக்குகளை கொண்டிருக்கும்போது எதற்காக கூட்டணிக்கு செல்ல வேண்டும். எனவே கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் நா.த.க சோர்ந்துவிட்டது.. கூட்டணிக்கு சென்றுவிடும் என்பதெல்லாம் கற்பனைவாதம். தற்காலிக பின்னடைவுக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராகயில்லை. நா.த.க தனித்தே போட்டியிடும்"
"த.வெ.க ஆட்சிமீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லையே?"
"முந்தைய ஆட்சிகளின் அரசுக்கு எதிரான பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களை இயக்கங்களும் கட்சிகளும் முன்னெடுப்பதை பார்த்திருப்போம். த.வெ.க ஆட்சி அமைந்தபிறகு தன்னெழுச்சியாக மக்களே வீதிக்கு வந்துவிட்டார்கள். பட்டினம்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கக் கூடாதென மீனவர்களும், மின்வெட்டை கண்டித்து நகர்பகுதி மக்களும் பயிர்கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளும் தொடர்ச்சியாக போராடுகிறார்கள். நாளடைவில் ஆட்சிக்கு எதிரான புரட்சி தமிழ்நாட்டில் வெடிக்கும். ஆக அரசியல் கட்சிகள் போராடாமல் இருந்தாலும் மக்களே த.வெ.க-வை விரட்டியடிப்பார்கள். மதுராந்தகம் தொகுதியில் வாக்குக் கேட்க சென்ற மரகதம் குமரவேலை பொதுமக்கள் ஊருக்கு விடாமல் தடுக்கிறார்களே.. இந்த சூழல் முதல்வர் விஜய்க்கும் ஏற்படும்"
"த.வெ.க ஆட்சியைப் பிடித்துவிட்டதால், நா.த.க இனி வளர்வது கடினம்தான் என்கிறார்களே!"
"த.வெ.க ஆட்சியைப் பிடித்திருப்பது தமிழகத்துக்கு சீரழிவுதான் என்றாலும் அரசியல்ரீதியாக அதிலொரு நன்மையும் இருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக சாதி, மதம், பணம், சின்னத்தை பார்த்து வாக்களித்துக் கொண்டிருந்த மக்களை தனது சினிமா கவர்ச்சி, போலி பிம்பத்தால் அதிலிருந்து வெளியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். ஆட்சியை பிடிக்க முடிந்த விஜய்யால் ஆட்சியை நடத்தமுடியவில்லை. அந்த அளவுக்கு திறமையில்லாமல் இப்போது தடுமாறுகிறார். எனவே மாற்று என ஏமாற்றத்துக்கு வாக்களித்த மக்களை அடுத்தமுறை உண்மையான மாற்றத்தை தரக்கூடிய நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்"

"நா.த.க தி.மு.க-விடம் விலைபோய்விட்டதாகச் சொல்கிறார்கள்?"
"யார் ஆளும்கட்சியோ அவர்களை நோக்கித்தான் விமர்சனங்களை முன்வைக்க முடியும். அந்த வகையில் த.வெ.க-வை அதிகமாக விமர்சிப்பதால் த.வெ.க-வினர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இப்போதும் சொல்கிறோம் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸும் தமிழினத்தின் துரோகிதான். பா.ஜ.க மனித குலத்தின் விரோதிதான். புதிதாக வந்திருக்கும் த.வெ.க, தி.மு.க - பா.ஜ.க-வின் கலவைதான். நா.த.க-வை எவராலும் விலைக்கு வாங்க முடியாது. த.வெ.க ஆட்சியையும் தி.மு.க-வின் அரசியலையும் ஒழிப்பதே நா.த.க-வின் இலக்கு"




















