2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது...
'தவெக-வில் இணைகிறீர்களா?' - மனம் திறந்த செங்கோட்டையன்
அதிமுக-வில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர் செங்கோட்டையன். அதிமுக வரலாற்றில் அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சுற்றுப்பயணம் வகுத்து கொடுத்தவர், அமைச்சர் என்று பல முக்கிய பொறுப்புகளை கொண்டிருந்தார்.

ஆனால் இது எல்லாம் கடந்த காலம். அண்மை காலமாக செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் பனிப்போர் நிலவி வருகிறது.
இதில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் அதிரடி முடிவு எடுப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் செங்கோட்டையன் நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் தவெக வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்பு செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளேன். அப்படி இயக்கத்திற்காக உழைத்த என்னை உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்று நீக்கியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த மன வேதனை உங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும். அதை மீறி வேறு எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை.” என்று கூறி சென்றார்.



















