செய்திகள் :

தாய்ப்பால்: சீம்பால் எனும் மாமருந்து... உயிர்காக்கும் தானம்! | உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு

post image

தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் கடமையோ அல்லது ஒரு வேலையோ அல்ல... அது தாய்க்கும் சேய்க்கும் இடையே நிகழும் ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம்! ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 1990-ஆம் ஆண்டு WHO, UNICEF ஆகியவை இணைந்து உருவாக்கிய ‘இன்னொசென்டி பிரகடனம்’ (Innocenti Declaration) நினைவாக, 1992 முதல் ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவர் டாக்டர் R. பிரியதர்ஷினி MBBS DCH DNB(Pediatrics) பகிர்ந்த விரிவான மருத்துவ வழிகாட்டல்கள் இதோ...

முதல் தடுப்பூசி: 'சீம்பால்' எனும் Colostrum!

குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுப்பது நல்லது. அதிகபட்சம் ½ அல்லது 1 மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் அல்லது சிசேரியன் எதுவாகினும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிரசவித்த முதல் சில நாள்களில் சுரக்கும் இந்த அடர் மஞ்சள் நிற 'சீம்பாலில்' IgA (Immunoglobulin A) என்ற முக்கியமான ஆன்டிபாடி உள்ளது. இது பிறந்த குழந்தையின் குடல் மற்றும் சுவாசப் பாதையை கவசமாக நின்று பாதுகாத்து, பாக்டீரியா - வைரஸ் தொற்றுகளிலிருந்து குழந்தையைக் காக்கும் இயற்கையின் 'முதல் தடுப்பூசி'!

டாக்டர் R. பிரியதர்ஷினி

எவ்வளவு காலம் கொடுக்க வேண்டும்?

முதல் ஆறு மாதங்கள்... தாய்ப்பால் மட்டுமே! பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை. குழந்தைக்கு தேவையான நீர்ச்சத்து முதல் ஊட்டச்சத்து வரை அனைத்தையும் தாய்ப்பாலே வழங்கிவிடும். அதனால் வேற எந்த உணவும் இக்காலகட்டத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தேன் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தைக்கு தேவையான இணை உணவுகளை (Complementary feeding) தொடங்கலாம். ஆனால், அதனுடன் சேர்த்து இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

உலக தாய்ப்பால் வாரம்

தாய்க்கும் தாய்ப்பால் தரும் பாதுகாப்பு!

தாய்ப்பால் என்பது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, தாயின் உடல் மற்றும் மனநலத்துக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தம் வலுப்பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை இயல்பான அளவுக்கு விரைவாகச் சுருங்கவும், அதிக ரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும், மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் (Ovarian Cancer) சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் (Hypertension) ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

தாய்ப்பால் சுரக்க... உணவும் ஓய்வும் அவசியம்!

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க விலை உயர்ந்த உணவுகள் தேவையில்லை. ஆரோக்கியமான, சத்தான உணவுப் பழக்கமே போதுமானது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் 4 முதல் 6 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். பூண்டு, இஞ்சி, முளைகட்டிய பயிர்கள், கீரை வகைகள், முட்டை, பால், நட்ஸ், இறைச்சி போன்ற புரதம் மற்றும் சத்துகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், காபி, டீ, சாக்லேட் போன்ற கஃபைன் (Caffeine) அதிகம் உள்ள உணவுகளை அளவோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மது, ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், உணவு மட்டுமே போதாது. தாய்ப்பால் கொடுக்கும் போது மன அழுத்தம் இல்லாமல், போதுமான ஓய்வுடன், குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுவதும் மிகவும் முக்கியம். தாயின் மனநிலையும் தாய்ப்பால் சுரப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரசவத்துக்குப் பிறகு பல தாய்மார்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய கவலை இதுதான்.

உலக தாய்ப்பால் வாரம்

ஆனால்,‌ தாய்ப்பால் சுரக்காமல் போவது மிகவும் அரிதான சூழ்நிலை. குழந்தை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் குடிக்கும்போது, உடலில் இயற்கையாகவே அதற்கேற்ப அதிக பால் சுரக்கத் தொடங்கும். குழந்தை அடிக்கடி பால் குடிப்பதே தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அதனால், ஆரம்பத்திலேயே “பால் வரவில்லை” என்று பதற்றப்படாமல், பொறுமையுடன் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இருந்தும் போதுமான அளவு சுரக்கவில்லை என்றால், மருத்துவரின் உதவியை அணுக வேண்டும். பிறந்த முதல் இரண்டு அல்லது மூன்று நாள்களில் தாய்ப்பால் குறைவாகச் சுரப்பது இயற்கையான ஒன்று. அந்த நாள்களில் சுரக்கும் சீம்பாலே குழந்தைக்குப் போதுமானது.‌ ஆரம்பத்திலேயே பால் இல்லை என்று நினைத்து மாட்டுப்பால் அல்லது (Formula Milk) ஃபார்முலா பாலைத் தொடங்குவது தேவையற்றது. குழந்தை தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கக் குடிக்க, 48 முதல் 72 மணி நேரத்திற்குள் இயற்கையாகவே பால் சுரப்பு அதிகரிக்கும்.

எப்போது தாய்ப்பால் கொடுக்கக் கூடாது?

பொதுவாக பெரும்பாலான சூழ்நிலைகளில் தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதே. ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் மருத்துவரின் ஆலோசனை அவசியம். சிகிச்சை தொடங்காத காசநோய் (Tuberculosis) பாதிப்பு இருந்தாலோ, புற்றுநோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ, அந்த மருந்துகள் தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லும் அபாயம் இருப்பதால், அத்தகைய சூழ்நிலைகளில் மருத்துவரின் வழிகாட்டுதல்படி மட்டுமே செயல்பட வேண்டும். மற்ற எல்லா சூழ்நிலைகளிலும், தாய்ப்பால் கொடுப்பதற்கு பெரும்பாலும் எந்தத் தடையும் இல்லை.

உலக தாய்ப்பால் வாரம்

தாய்ப்பால் கிடைக்காவிட்டால்...?

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், முதன்மையான தேர்வாக தாய்ப்பால் வங்கியில் (Human Milk Bank) இருந்து பெறப்படும் தானப் பால் பரிந்துரைக்கப்படுகிறது. தாய்ப்பால் வங்கியில் சேகரிக்கப்படும் பால், தாயிடம் தொற்று நோய்கள் இல்லையா என்பதை உறுதி செய்த பிறகே பெறப்படும். பின்னர், அந்தப் பால் பாஸ்ச்சரைசேஷன் (Pasteurization) செய்யப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைகளுக்குப் பிறகே குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, குறைமாத குழந்தைகள் (Preterm babies), மிகவும் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் போன்றோருக்கு இந்தத் தானப் பால் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள்... தாய்ப்பாலைத் தொடர முடியுமா?

வேலைக்குச் செல்வதால் தாய்ப்பாலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை முன்கூட்டியே சேகரித்து (Breast pump) பாதுகாப்பாகச் சேமித்து, குழந்தைக்குக் கொடுக்கலாம். இதற்காக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, தங்கள் வேலை நேரம் மற்றும் குடும்பச் சூழலுக்கு ஏற்ற திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்வது நல்லது.

தாய்ப்பாலை எப்படி சேமிக்கலாம்?

தாய்ப்பாலைச் சேமிப்பதற்கு முன், கைகளையும் பிரெஸ்ட் பம்பையும் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், சுத்தமான உணவுத் தர (Food-grade) பிளாஸ்டிக் கண்டெய்னர் அல்லது அதற்கான பிரத்யேக சேமிப்புப் பைகளில் பாலைச் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம் குறித்து அவர் கூறியவை:

அறை வெப்பநிலையில் – 4 மணி நேரம் வரை

குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) – 4 நாள்கள் வரை

ஃப்ரீஸரில் (Freezer) – 6 முதல் 12 மாதங்கள் வரை

(குறிப்பு: உரைய வைத்த பாலை (Thawing) அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்த பிறகு குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதன் பின்னர் உரைய வைத்த பாலை‌ திரும்பவும் ஃப்ரீஸரில் வைத்து பயன்படுத்தக் கூடாது). சேமிக்கும் ஒவ்வொரு பையிலும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு வைக்க வேண்டும். முதலில் சேமித்த பாலை முதலில் பயன்படுத்தும் FIFO (First In, First Out) முறையைப் பின்பற்ற வேண்டும். உறையவைத்த பாலை அறை வெப்பநிலைக்கு வந்த பிறகே குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

உலக தாய்ப்பால் வாரம்

தாய்ப்பால் வங்கிகள்... பல குழந்தைகளுக்கு உயிர் காக்கும் பாலம்!

தாய்ப்பாலை தானம் செய்வதால், தங்களுடைய குழந்தைக்குத் தாய்ப்பால் குறைந்து விடும் என்ற அச்சம் தேவையில்லை. மாறாக, தாய்ப்பால் தொடர்ந்து சுரக்கவும் உதவும். இன்னொரு குழந்தையின் உயிரைக் காக்கும் வாய்ப்பும் கிடைக்கும். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும், சில தனியார் மருத்துவமனைகளிலும் தாய்ப்பால் வங்கிகள் (Human Milk Banks) செயல்பட்டு வருகின்றன. தாய்ப்பால் கிடைக்காத சூழலில் இது ஆதரவாக இருக்கிறது.

உலக தாய்ப்பால் வாரம்

தாய்ப்பால் பற்றிய தவறான நம்பிக்கைகள்... உண்மை என்ன?

தாய்ப்பால் கொடுத்தால் உடல் அழகு குறைந்துவிடும், மார்பகத்தின் தோற்றம் மாறிவிடும் என்ற நம்பிக்கை இன்னும் சிலரிடம் உள்ளது. ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து.‌ மாறாக, தாய்ப்பால் கொடுப்பதால் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த உடல் எடை குறைய உதவுகிறது. மேலும், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. அதேபோல், குழந்தை பிறந்த பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி தம்பதியர் மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் தொடங்கலாம். அதனால் தாய்ப்பால் சுரப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் Postpartum Depression குறித்து விழிப்புணர்வு அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது சுரக்கும் ஆக்ஸிடோசின் (Oxytocin) போன்ற ஹார்மோன்கள், தாயின் மனநிலையை மேம்படுத்த உதவுகின்றன. அதே நேரத்தில், தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம், தூக்கமின்மை, “குழந்தைக்குப் போதுமான பால் கொடுக்க முடியவில்லையே” என்ற குற்ற உணர்வு போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். அதனால், இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம்.

ஒரு தாயின் பின்னால்... ஒரு குடும்பம் நிற்க வேண்டும்!

தாய்ப்பால் கொடுப்பது தாயின் பொறுப்பு மட்டுமல்ல; குடும்பத்தின் பொறுப்பும் கூட. கணவன் மற்றும் குடும்பத்தினர், தாய்க்கு போதுமான ஓய்வு கிடைக்க உதவ வேண்டும். சத்தான உணவு, மன உற்சாகம், ஊக்கமளிக்கும் வார்த்தைகள், அமைதியான குடும்பச் சூழல் ஆகியவை தாய்ப்பால் சுரப்புக்கும், தாய்-குழந்தை ஆரோக்கியத்துக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேவைப்படும் நேரங்களில், தாய்ப்பாலை சேகரித்து வைத்திருந்தால், குடும்பத்தினரும் குழந்தைக்குப் புகட்ட உதவலாம். இதன் மூலம் தாய்க்கு ஓய்வு கிடைப்பதோடு, மன அழுத்தமும் குறையும்.

உலக தாய்ப்பால் வாரம்

தாய்ப்பாலை கடமையாக அல்ல... பந்தமாக நினையுங்கள்!

புதிதாகத் தாயான பெண்களுக்கு டாக்டர் பிரியதர்ஷினி கூறிய வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.‌ தாய்ப்பால் கொடுப்பதை ஒரு வேலையாகவோ, கட்டாயக் கடமையாகவோ நினைக்க வேண்டாம். அது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான அழகான பந்தம். குழந்தையுடன் பேசுங்கள், அதைத் தொட்டு அரவணையுங்கள், மகிழ்ச்சியாக தாய்ப்பால் கொடுங்கள். தாய் மகிழ்ச்சியாக இருந்தால், குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். தாய்ப்பால் என்பது வெறும் உணவு அல்ல; வாழ்நாள் முழுவதும் தொடரும் ஆரோக்கியத்தின் அடித்தளம்

தாய்ப்பால் என்பது குழந்தையின் பசியைப் போக்கும் உணவு மட்டுமல்ல. அதன் நோயெதிர்ப்பு, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி ஆகியவற்றுக்கான இயற்கையின் அரிய பரிசு. அதேபோல், ஒரு தாயின் உடல் மற்றும் மனநலத்தையும் பாதுகாக்கும் இயற்கை மருந்து. தாய்ப்பால் கொடுக்கும் ஒவ்வொரு தாயையும் ஊக்குவிப்பதும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதும் குடும்பம், சமூகம், பணியிடம், அரசு என அனைவரின் கூட்டுப் பொறுப்பு. ஏனெனில், ஆரோக்கியமான தலைமுறையின் தொடக்கம் ஒரு தாயின் அரவணைப்பிலும், தாய்ப்பாலிலும்தான் இருக்கிறது.

Doctor Vikatan: தலையில் கைவைத்தாலே கொத்துக்கொத்தா முடி கொட்டுதா... உடனே நிறுத்த 10 டிப்ஸ்!

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த ஒரு மாதமாக எக்கச்சக்கமாக முடி உதிர்கிறது. எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை மாற்றிப் பார்த்தும் முடி உதிர்வது நிற்கவில்லை. முடி உதிர்வை ஒரே வாரத்தில் நிறுத்தலாம் என்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தோள்பட்டை வலி, ஜூனியர் NTR செய்துகொண்ட ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சை: என்ன ஸ்பெஷல்?

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வலி நிவாரணிகள், பிசியோதெரபி எல்லாம் செய்து பார்த்தும் வலி குறைந்தபாடில்லை. கடைசியாக சந்தித்த மருத்துவர், எனக்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: பஸ் பயணத்தின்போது தலைச்சுற்றல், வாந்தியா... மீள்வது ரொம்ப சிம்பிள்!

Doctor Vikatan: எப்போது பஸ், கார், வேன் போன்றவற்றில் பயணம் செய்தாலும் எனக்கு சில நிமிடங்களிலேயே தலைச்சுற்றலும் வாந்தியும் வருவதை உணர்கிறேன். இதனாலேயே பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கிறேன். தவிர்க்க மு... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan: எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத... மேலும் பார்க்க

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்... மேலும் பார்க்க