மதுரை: 'நீல நிறப் பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் நெடி' - புகாருக்கு ஆவினின் விளக...
Doctor Vikatan: 70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி... நரம்பு இழுக்கும் பிரச்னை... என்ன தீர்வு?
Doctor Vikatan: எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை நரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டு வலிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள வலியைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் முழங்கால் தேய்மானம் காரணமாக ஏற்படும் பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
உங்களுக்குப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதோ அல்லது உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ வலி இருந்தால், அது நிச்சயமாக முழங்காலில் இருந்து வரக்கூடிய வலியாகத்தான் இருக்கும்.
இதற்கான சிகிச்சை முறையைத் தொடங்குவதற்கு முதல் கட்டமாக நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அதன்படி,
பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுக்கலாம்.
தசை வலிமைக்கான பயிற்சிகள் (Strengthening exercises) மற்றும் தசை நீட்சிப் பயிற்சிகள் (Stretching exercises) செய்யலாம்.
கரன்ட் சிகிச்சை (Current treatment) மற்றும் அல்ட்ராசோனிக்ஸ் (Ultrasonics) சிகிச்சைகளைச் செய்யும்போது வலி குறைய வாய்ப்புள்ளது.

இவற்றை எல்லாம் செய்த பிறகும் ஒருவேளை வலி குறையாமல் அப்படியே இருந்தால், முட்டிக்கு எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு முன், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரை (Ortho Doctor) நேரில் சென்று கலந்தாலோசிப்பது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.





















