CWG 2026: "3 நாள் நான் சரியா சாப்பிடல; மாதவிடாய் வலியால்.!'- தங்கம் வென்ற மீராபா...
திட்டம் அ: சைஃபரை பூஜ்ஜியமாக்கு! | உளவன் 11
கூசென்கோவை கொல்வது அவசியம். அவனை கொடூரமாகத் தண்டிக்க வேண்டும். அதுதான் மற்ற ஏஜெண்ட்களுக்கு பயத்தைத் தரும். இனிமேல் யாரும் சோவியத்தை ஏமாற்றத் துணியக் கூடாது. அதனால் அவனை உயிரோடு பிடிக்க வேண்டும்.
நான்கு உளவாளிகள் தயாராகினர். நால்வரும் கனடாவின் ஒட்டாவா நகரிலுள்ள சோவியத் ரஷ்ய தூதரக ஊழியர்கள். கனடா ராணுவத்தினர் அணியும் சீருடை தயார். அடையாள அட்டை துல்லியமாக தயார். உரையாடல் தொனி…? அதுதான் சற்று சிரமமாக இருந்தது. பயிற்சிக்குப் பின் அதுவும் நேர்த்தியாக வந்துவிட்டது. செல்லும் வாகனம்…? கனடா ராணுவத்தினர் பயன்படுத்தும் ஸ்டைலில் லாரியும் தயார்.
அந்த நால்வருக்கும் ஒரேயொரு உத்தரவுதான். எக்காரணத்தைக் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது. உங்களை சுட்டுக் கொன்றாலும்கூட. கூசென்கோவை எப்படியாவது அங்கிருந்து கடத்தி, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வளவுதான்.

யார் இந்த கூசென்கோ?
இகோர் கூசென்கோ (Igor Gouzenko) - இதுதான் முழுப் பெயர். 26 வயது. சின்னப் பையன். ஒட்டாவா நகரிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் பணி. Cipher Clerk. அதாவது, ரஷ்யாவுக்கு அனுப்பும் - பெறும் உளவு தகவல்களை, குறியாக்கம் - மறைகுறியாக்கம் (Encoding - Decoding) செய்வது. மிக மிக ரகசியமான அதிமுக்கியமான வேலை. சைஃபர் கிளார்க்கின் பணி பற்றிய கூடுதல் விவரம் கேட்டால், மறக்காமல் இகோர் கூசென்கோ பெயரையும் சேர்த்தே சொல்லும் கூகுள்.
இரண்டாம் உலகப் போர் முடிந்து விட்டது. போரின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வந்த வேலை போதும். தாய்நாட்டுக்கு திரும்பலாம். ரஷ்ய அரசிடமிருந்து உத்தரவு வந்தது. இகோர் கூசென்கோ ரஷ்யாவுக்கு திரும்ப வேண்டும். ஏதோ கரிசனம் போல தெரியலாம். ஆனால், இது ரஷ்யாவின் அன்போ, அக்கறையோ இல்லை என்பது கூசென்கோவுக்கு தெரியும்.
உச்சபட்ச ரகசிய தகவல்களைத் தெரிந்த ஒருவனை அந்நிய நாட்டில் விட்டு வைப்பது ஆபத்து. அதனால்தான் இந்தக் கனிவு, பாசம், பரிவு எல்லாம். அடக்குமுறை அரசு, போருக்கு பிந்தைய மோசமான பொருளாதாரம். இதனால் ரஷ்யாவுக்கு திரும்பிச் செல்ல கூசென்கோவுக்கு பிடிக்கவில்லை. கனடாவிலேயே இருக்க விரும்பினார்.
NKVD விட்டுவிடுமா? அது யாரு NKVD? ரஷ்ய உளவுத்துறை KGB-க்கு அண்ணன். அகதி தஞ்ச கோரிக்கை விடுத்தால் கனடா ஏற்றுக் கொள்ளும். கூசென்கோ யோசித்தார். மரணத்தை விரும்பி அழைக்கும் ஒரு சாகசத்தை செய்ய முடிவெடுத்தார். கோடை முடிந்து குளிர் காலம் தொடங்கிய இதமான மாலை வானிலை. 1945-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி. வேலை முடிந்து காலாற நடந்து விட்டு வருவதாகச் சொல்லி புறப்பட்டார். பொது தொலைபேசியில் மனைவி ஸ்வெத்லனாவை (Svetlana Gouzenko) தொடர்பு கொண்டார். எட்டு மாத கைக்குழந்தை ஆன்டன் (Anton) அழுதது பின்னணியில் கேட்டது.
கூசென்கோ சொன்ன, பத்திரிகை அலுவலகத்திற்கு ஸ்வெத்லனா அவசர அவசரமாக விரைந்தார். “சார்… நான் ரஷ்ய தூதரகத்துல வேலை பார்க்கிறேன். ரஷ்யாவோட முக்கியமான ரகசிய ஆவணங்கள் என்னிடம் இருக்கு. செய்தி போட முடியுமா? இதனால எனக்கு ஆபத்து. போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுங்க சார்..?”

பத்திரிகை அலுவலகத்தில் கூசென்கோவை நம்பவில்லை. அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர். கைக்குழந்தையோடு ஓடினார். அந்தப் பகுதியிலிருந்த வழக்கறிஞரின் அலுவலகத்தில் நுழைந்து விஷயத்தை சொன்னார். அங்கிருந்தவர்களும் நம்பத் தயாராக இல்லை. வீதி வீதியாக ஓடினார். கூசென்கோவை காணவில்லை என தூதரக ஊழியர்கள் இந்நேரம் தேடத் தொடங்கி இருப்பர். அவருக்கு உயிர் பயம் வந்துவிட்டது. அவருடைய பரிதாப நிலையைக் கண்டு அடுக்குமாடி குடியிருப்புவாசி ஒருவர் மனமிறங்கினார். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
அந்த வீட்டிற்கு, ரஷ்ய தூதரகத்திலிருந்து ஒரு கும்பல் வந்தது. கூசென்கோவை வெளியே வரச் சொல்லி கூச்சல் போட்டனர். அப்பகுதியே களேபரமானது. குடியிருப்புவாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் வரவும், ரஷ்ய தூதரக பணியாளர்கள் அங்கிருந்து மறைந்தனர்.
கூசென்கோ, மனைவி, குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஒட்டாவா போலீஸ். பாதுகாப்பான இடத்தில் வைத்து கனடா உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். 109 ரகசிய ஆவணங்களை கூசென்கோ எடுத்து வந்திருக்கிறார். ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய ரகசியங்கள், உளவாளிகளின் குறியீட்டுப் பெயர்கள் அடங்கிய பட்டியல்.
கனடா உளவுத்துறை அதிகாரிகள் வாய் பிளந்தனர். தங்கக் கட்டி மாதிரி தகவல்கள். நட்பு நாடுகளிலேயே ரஷ்யா உளவு பார்த்த செய்தி அதிர்ச்சியின் உச்சம்.
ஐரோப்பாவில், முதலாளித்துவ பார்வை கொண்ட அனைத்து நாடுகளுக்குமே கம்யூனிஸ ஆட்சி நடக்கும் சோவியத் ரஷ்யா அசூயைதான். எதிரிக்கு எதிரி நண்பன். அதனால் நாஜி ஜெர்மனிக்கு எதிராக ரஷ்யாவோடு கைகுலுக்கி கொண்டனர். மற்றபடி கம்யூனிஸம் என்றாலே ஒவ்வாமைதான். ரஷ்யா மீது சந்தேகப் பார்வை எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அது இப்போது உறுதியாகி விட்டது.
இரண்டாம் உலகப் போர் முடிந்தது. ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒப்பந்த ஷரத்துகள் என்ன, இறைவனின் கட்டளைகளா… மீறாமல் இருக்க? முதல் உலகப் போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறியதால்தானே இரண்டாவது உலகப் போர். ஒரு போரின் முடிவு, அமைதிக்கான வழி என்பது வெறும் நம்பிக்கை. உண்மையில் ஒரு போரின் முடிவு இன்னொரு போரின் தொடக்கம்.

கிழக்கு ஐரோப்பாவை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா துடித்துக் கொண்டிருந்தது. அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே சத்தமில்லாமல் செய்திருந்தது. பலமான உளவுப் பின்னலை கச்சிதமாக உருவாக்கி இருந்தது. நட்பு நாடுகளின் ராணுவ பலம் பற்றிய தகவல்கள் ரஷ்யாவின் கைகளில். கூசென்கோ வைத்திருந்த ஆவணங்களில் இதெல்லாம் இருந்தன.
கனடா ஜனநாயக நாடு. அரசியல் அகதி அந்தஸ்து கேட்பவருக்கு, அதை கொடுக்கவில்லை என்றால் மனித உரிமை மீறலாகி விடும். அதனால் கூசென்கோவை ரஷ்யாவிடம் ஒப்படைக்கவில்லை. அதே சமயம் அமைதியாகவும் இருக்கவில்லை. கனடாவில் இருக்கும் ரஷ்ய உளவாளிகளின் பட்டியலை கூசென்கோவிடம் வாங்கி, களையெடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.
மறுபுறம், ரஷ்ய தூதரகத்தை வெளியிலிருந்து கண்காணித்தது. தூதரகம் என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் இறையாண்மை பிரதேசம். அதனால் ரஷ்ய தூதரகத்துக்குள் நுழையாமல், ராஜதந்திர எச்சரிக்கை விடுத்தது. அடுத்ததாக தனது கூட்டாளிகளை எச்சரித்தது. ஒருத்தன் சிக்கி இருக்கிறான், வருகிறீர்களா…? அமெரிக்கா, பிரிட்டன் உளவுத்துறை உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர். இந்த இரண்டு நாடுகளைப் பற்றிய தகவல்கள்தான் கூசென்கோவின் ஆவணங்களில் அதிகம்.
அமெரிக்க, பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் கூசென்கோவை விசாரித்தனர். அவர்களுக்கு நடுக்கம் எடுத்தது. இவன் சொல்லும் பெயர்களில் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? உளவாளிகளுக்கு போலியான பெயர்கள்தானே. ஐயயோ… என்னென்ன தகவல்கள் ரஷ்யாவுக்கு போயிருக்கோ? நமக்கு வேலை பார்த்துக் கொண்டே எவனெல்லாம் ரஷ்யாவுக்கு தகவல் சொன்னானோ? பதற்றத்தோடு நாடு திரும்பினர்.
அமெரிக்க, பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் கூசென்கோவை விசாரித்த தகவல் ரஷ்யாவுக்கு பேரிடி. ரஷ்யாவில் NKVD உயரதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி. நீண்ட காலத் திட்டத்தை இந்த கூசென்கோ பயல் நொடியில் போட்டு உடைத்து விட்டானே… மற்ற உளவாளிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். அதைவிட இந்த மாதிரி ‘மாட்டிவிட்டால்’ என்ன ஆகும் என்பதை ‘புரிய’ வைக்க வேண்டும். ஐரோப்பாவில் பரந்து விரிந்து கிடக்கும் ரஷ்ய உளவுப் பட்டாளதுக்கு ஓர் அழுத்தமான செய்தியைச் சொல்ல வேண்டும்: அப்படியிருக்க வேண்டும் இகோர் கூசென்கோவின் சாவு.

இதுதான் சமயம். கூசென்கோ சம்பந்தப்பட்ட செய்திகளை ஊடகங்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தது கனடா அரசு. ரஷ்யாவின் குள்ளநரித்தனத்தை மேற்கத்திய ஊடகங்கள் எழுதித் தள்ளின. சர்வதேச அரங்கில் தலைகுனிந்தது ரஷ்யா. செம்படை இதை எளிதாக எடுத்துக் கொள்ளாது என்பது கனட உளவுத்துறைக்கு தெரியும். இகோர் கூசென்கோ எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்.
Camp 03 என்ற ராணுவ முகாம் ஒட்டாவாவை ஒட்டிய புறநகர்ப் பகுதியில் இருந்தது. கூசென்கோ, மனைவி, குழந்தையை அங்கு இடமாற்றினர். தகவல் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 24 மணி நேரமும் ராணுவ வீரர்களின் உயர் பாதுகாப்பு. உணவு, குடிநீரும்கூட பரிசோதனைக்கு உட்பட்டே அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ரஷ்ய உளவுத்துறை எப்படியோ இந்த வாசனையை முகர்ந்தது. பக்காவாக திட்டம் தீட்டியது. 1945 செப்டம்பர் இறுதி வாரம். அந்த நால்வரும் கனடா ராணுவ லாரியில் புறப்பட்டனர். Camp 03 நுழைவாயிலில் இரண்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
“கூசென்கோவை இடமாற்றம் செய்ய வேண்டும். உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்…” தொனியில் அவசரத்தை வெளிப்படுத்தினர்.
“ஓஹோ… என்ன ஆச்சு…” பதற்றப்படவில்லை பாதுகாப்பு பணியில் இருந்த அந்த இரண்டு ராணுவ வீரர்களும்.
“NKVD எப்படியோ மோப்பம் பிடித்து விட்டதுபோல… எப்ப வேண்டுமானாலும் இங்கு தாக்குதல் நடக்கலாம்…” கூசென்கோவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைப் போல உடல் மொழியை வெளிப்படுத்தினர்.
“ஓஹோ… ஓகே… அப்ப ரெடியாகலாம். ஆர்டர் காப்பியை காட்டுங்க…”
வந்தவர்கள் போலியான நபர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டது. எகத்தாளமாக அந்த நால்வரையும் கையாண்டனர். உடலை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அதனால் பதற்றமே இல்லாமல் அவர்களிடம் போக்கு காட்டினர்.
முறையான உத்தரவு, அதுவும் காகிதத்தில் இருந்தால் மட்டுமே கூசென்கோ குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்க வேண்டும். இது அந்த முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுக்கு இடப்பட்ட கட்டளை. முற்று முழுதாக கனடா ராணுவ வீரர்கள் போல வந்த நால்வருக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏமாற்றமடைந்தனர்.

“உயர்மட்ட பாதுகாப்பு பிரச்சினை. அவசரம், அதனால் அழைத்து வரச் சொல்லி உத்தரவு. எழுத்துப்பூர்வ உத்தரவு ஆவணங்களை வாங்குவதெற்கெல்லாம் நேரமில்லை” ஏதேதோ சொல்லி சமாளித்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த அந்த இரண்டு ராணுவ வீரர்களும் வானை நோக்கிச் சுட்டனர். நான்கு பேரும் உயிர் பிழைக்க, அருகில் இருந்த காட்டுப் பகுதியில் ஓடி மறைந்தனர். இப்படி பலமுறை தோற்றது ரஷ்ய உளவுத்துறை. திட்டம் ஃ வரை முயன்றும் இகோர் கூசென்கோவை ரஷ்யாவால் சூனியமாக்க முடியவில்லை. 63 வயதில், 1982-ம் ஆண்டு கூசென்கோ காலமாகும் வரை, கனடா அரசு அவரை பாதுகாத்தது.
நேரடி உளவுப் பணியில் இல்லை. போலிப் பெயரில் ஒளிந்து வாழவில்லை. ஆனால் இரட்டை உளவாளி.
இப்படித்தான் பனிப்போரின் முகவுரையை எழுதினார் இகோர் கூசென்கோ.!



















