முதல்வர் விஜய்யின் `ஜனநாயகன்' ரிலீஸ்: ஈரோடு அண்ணா சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்கள்...
நாம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்வது சொத்தா... அறமா? – தலைமுறை கடக்கும் நற்பண்புகளின் ரகசியம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்த உலகம் மானுடத்தால் ஆனதல்ல; மானுடத்தின் 'அறத்தால்' ஆனது. ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறைக்குக் கடத்தும் நற்பண்புகள், அறநெறிகள் மற்றும் உயர்ந்த கொள்கைகளே ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன. பெற்றோர் என்பவர் வெறும் ஈன்றெடுப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் ஒரு வீட்டின், நாட்டின் மற்றும் நவீன உலகத்தின் 'கட்டிடக்கலைஞர்கள்'.

1. 'பெற்றோர்' எனும் சொல்லின் புதிய பரிமாணம்
"ஆண்டி முதல் அரசன் வரை" இயற்கையின் விதியால் இணைக்கப்படும் ஒரு உன்னத பந்தமே பெற்றோர் எனும் அந்தஸ்து. முதிர்ச்சியடைந்த ஆணும் பெண்ணும் இணைந்து, அடுத்த தலைமுறையை உருவாக்கி, அவர்களைச் செதுக்குவதே இயற்கையின் சுழற்சி. இதை வெறும் தனிப்பட்ட உறவாகப் பார்க்காமல், ஒரு 'உயிரின அறமாக' (Biological Dharma) பார்க்க வேண்டும்.
நாம் பயன்படுத்தும் மொழியில் சிறிய மாற்றம் தேவைபடுகிறது. அதாவது "நான் பிறந்தேன்" என்ற ஆணவமாக சொல்வதைத் தவிர்த்து, "என்னைப் பெற்றெடுத்தார்கள்" என்றும், "நான் பெற்றெடுத்தேன்" என்றும் மாற்றப்படவேண்டும். இது ஒரு மனிதனுக்கு தான் ஒரு "உயிரினத்தின் தொடர்ச்சி" என்பதையும், தன் பெற்றோரின் தியாகத்தையும் உணர வைக்கும். 'பிறந்த நாள்' கொண்டாட்டத்தை விட 'பெற்றெடுத்த நாள்' என்ற உணர்வு, தற்பெருமை மற்றும் மமதை அற்ற வாழ்வை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. விவசாயம் மற்றும் வீடு கட்டுதல்: பெற்றோருக்கான வாழ்வியல் பாடங்கள்
பெற்றோரின் கடமையை விவசாயம் மற்றும் வீடு கட்டுதல் என சிறந்த இரண்டு எளிமையான உவமைகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
விவசாயத்தில் விதை (ஆண்) மற்றும் மண் (பெண்) ஆகியவற்றின் தரம் எப்படி விளைச்சலைத் தீர்மானிக்கிறதோ, அதுபோலவே பெற்றோரின் முதிர்ச்சியானது அவர்களது பிள்ளைகளின் ஆளுமையை வடிவமைக்கிறது. பூ பூத்து காய் காய்க்கும் பருவம் (இளமை) வரை கண்காணிப்பது என்பது மிகவும் முக்கியமானது; அந்நேரத்தில் கண் இமைக்காது பாதுகாப்பதும், சோர்வடையாது கற்றுக் கொடுப்பதும் தேவையற்ற களைகளைப் (கெட்ட பழக்கங்கள்) பிடுங்கி எறிவதும் பெற்றோரின் கடமை. ‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?” என்பதினை பெற்றோர்கள் தன் மனதில் கொண்டு சிறு செடியாக இருக்கும்போதே ஆயுதமில்லாமல் தேவையற்ற கிளைகளைக் கிள்ளி எறிந்து, நேர்க்கோட்டில் வளரச் செய்வது போல, பிள்ளைகளின் போக்கை நற்சொற்களால் ஆரம்பத்திலேயே சீரமைக்க வேண்டும்.

அதுபோல பெற்றோர்கள் வீடு கட்டுதலில் ஒரு கட்டிடப் பொறியாளருடன் நேரத்தை ஒதுக்கி அலைந்து திரிந்து அஸ்திவாரத்தைப் கண்ணும் கருத்துமாக பார்த்து வீட்டை எழுப்புவது போல, அதே வீட்டில் வாழபோகும் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால ஆளுமைக்குத் தேவையான ஒழுக்கமான அஸ்திவாரத்தை பொறுமையுடன் அதே நேரத்தில் கண்டிப்புடன் அமைக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை.
3. இருபடி வளர்ப்பு முறை (Two-Phase Parenting)
முதல் படி என்பது குறுகிய காலத்தில் மண்ணில் ஊன்றப்படும் ஆணிவேராக இருக்கக்கூடிய 7 வயது முதல் 18 வயது வரை கண்டிப்பு அவசியம். அதாவது, குழந்தைப் பருவத்திலிருந்து தனக்குரிய பாலினத்திற்னாக பருவமாற்றம் அடையும் வரை பேச்சு, நடை, மரியாதை ஆகியவற்றைப் பழக்கப்படுத்த வேண்டும். சொல்லை கேட்க மாட்டார்கள் என்பதனை விடுத்து சலிக்காமல் பயிற்சி அளிக்க வேண்டும். பழக்கமே ஒழுக்கத்திற்கான ஆணிவேர்.

இரண்டவது படி என்பது 18 வயதுக்குப் பிறகு பெற்றோர்கள் தங்கள் ஆயுள் காலம் வரை தங்கள் பிள்ளைகளிடம் வெளிப்படைத்தன்மையுடன் இருத்தல் அவசியம். பெற்றோர் 'நல்லவர்களாக' காட்டிக் கொள்வதை விடுத்து, “தோழுக்கு மேல் வளர்ந்தால் தோழன்” என தாங்கள் செய்த தவறுகளையும், கற்ற பாடங்களையும் வாழ்வியல் பாடங்களுடன் மனம் திறந்து பகிரும் 'தோழர்களாக' மாற வேண்டும். இந்த வெளிப்படைத்தன்மை பிள்ளைகளிடம் ஒரு உயரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நற்சமுதாயம் மலர வாய்ப்பளிக்கும்.
இதன் மூலம் "ஒரு பெண் நள்ளிரவிலும் எவ்வித பயமும் இன்றி, சுதந்திரமாகத் தனியாக வீதிகளில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றே இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிட்டதாகக் கருத முடியும்" என்று மகாத்மா காந்தியின் கனவு நினைவாகும்.
4. கல்வி மற்றும் தொழில்நுட்பம்: ஒரு எச்சரிக்கை
பணம், புகழ், மதிப்பெண் ஆகியவற்றுக்காகப் பிள்ளைகளை இயந்திரங்களாக மாற்றும் இன்றைய சூழல் மாற வேண்டும். தொழில்நுட்பம் என்பது ஒரு கத்தி போன்றது. அதை வைத்துக்கொண்டு வன்முறையைப் பரப்புவதா? அல்லது மானுட மேம்பாட்டிற்கு உதவுவதா? என்பதைத் தீர்மானிப்பது பெற்றோர்களே.
"பசுந்தோல் போர்த்திய புலி" போல தொழில்நுட்ப வசதிகளைப் போர்த்திக்கொண்டு வெறுப்பை விதைப்பதைத் தவிர்த்து, பொது அறிவை விதைக்கப் பழக வேண்டும்.
திருமணமும் அறப்பணியும்
திருமணம் என்பது வெறும் இருமனம் இணையும் சடங்கல்ல; அது ஒரு சமூக ஒப்பந்தம். ஆயுட் காலம் முழுவதும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான “அன்யோனியம்” என்பது கடவுள் கொடுத்த வரம். இந்த அன்யோனியம் தான் “காதல்” என ஒரு வித ஈர்ப்பிற்காக சித்தரிக்கப்பட்டு் வருகிறது. அதனை வெறும் உடல் சார்ந்த சந்தோஷத்திற்காக மட்டுமன்றி, தான் பெற்றெடுக்கும் அடுத்த தலைமுறையைச் சிறந்த மனிதர்களாகச் செதுக்குவதற்கான ஒரு அறக்கட்டளையாகக் கருத வேண்டும்.
"நாங்கள் இருவரும் ஒரு மனதாக இணைந்து, எங்கள் மூலம் பெற்றெடுக்கப்படும் பிள்ளைகளை அன்பு செலுத்தி, கண்காணித்து, பெண்-ஆண் பேதமில்லாமல் வழி நடத்துவோம். அதன் பயனாக வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல குடிமக்களாகத் திகழ எங்களது வாழ்க்கையை அர்ப்பணிப்போம்"
என்று புதிய திருமணப் பந்தத்தில் இணையும் தம்பதியர்களின் உறுதிமொழியே எதிர்கால வம்சத்திற்கு தேவை.

6. அன்யோன்யம்: ஒரு ஆற்றல் களஞ்சியம் (The Source of Creation)
உலகில் பல நூற்றாண்டுகள் கடந்தும் வலம் வந்துக் கொண்டிருக்கும் சாதனையாளர்களையும், சூரையாடுபவர்களையும் பெற்றெடுக்கும் அந்தத் தொடக்கப்புள்ளி ஒன்றுதான். ஓர் ஆணும் பெண்ணும் இணையும்போது ஏற்படும் அந்த உன்னதமான அன்யோன்யம், ஒரு புதிய உயிரை உருவாக்குவதற்கான "உயிர் ஆற்றலை" (Life Force) வழங்குகிறது.
இதில் சாதனையாளர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், அந்த அன்யோன்யத்தைத் தாண்டி, அந்த உயிரை வளர்க்கும் போது 'தினை' போன்ற அறம் சார்ந்த விதைகளை ஊட்டியிருக்கிறார்கள். அவர்களின் வளர்ப்புமுறை, அந்த உயிரின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான பாதையில் இந்த உலகை திருப்பியிருக்கிறது.
அதே வேளையில் சூரையாடுபவர்ககளையும் அதே உயிரியல் சுழற்சிதான் உருவாக்கியது. ஆனால், அவர்களின் பெற்றோர்கள் அந்த அன்யோன்யத்தில் ஏற்பட்ட தடங்கல் தொடங்கிய பயணத்தில், 'வினை' என்னும் வெறுப்பு, சுயநலம் மற்றும் அறமற்ற தன்மையை விதைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அழிவின் பாதையில் திசை திருப்பப்பட்டிருக்கிறது.
7. பெற்றோர்களின் கடமை:
"வேலியே பயிர் மேயும்" விபரீதத்தைத் தடுத்து நிறுத்த, பெற்றோர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால்,
படிப்பு மற்றும் அனுபவத்தின் வாயிலாக பிள்ளைகளுக்கு இயற்கையைப் போதித்தலில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பழக்கும் முன், அவர்கள் மண்ணையும், மரங்களையும், பிற உயிர்களையும் மதித்து நடக்கப் பழக்க வேண்டும்.
"நாம் இயற்கையை ஆள்பவர்கள் அல்ல, ஏனைய உயிர்களைக் காக்க படைக்கப்பட்ட பாதுகாவலர்கள் (வேலி)" எனகிற அறத்தைப் பிள்ளைகளின் மனதில் விதைக்க வேண்டும்.
ஆன்யோனியமற்ற பெற்றோரின் கவனிப்பாரற்றுத் திரியும் பிள்ளைகள், வறுமை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாகச் சமூகச் சீர்கேடுகளில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம். இது ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் வன்மம் நிறைந்த இடமாக மாற்றிவிடும்.

8. ஒருவனுக்கு ஒருத்தி
தமிழர் பண்பாடு உலகிற்கே வழங்கிய ஆகச்சிறந்த வாழ்வியல் கொடை "ஒருவனுக்கு ஒருத்தி" என்கிற உன்னதமான அறமாகும். இது வெறும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமண ஒப்பந்தம் மட்டுமல்ல; ஒரு ஆரோக்கியமான சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான அடிப்படைத் தத்துவமாகும்.
"இவர்கள் தான் என் பெற்றோர்கள்" என்ற பெருமையாக கூறும் பிள்ளைகளுக்கு அடையாளமும் தெளிவும் மற்றும் பெருமிதமும் கூடிய தன்னம்பிக்கையை இது தருகிறது. பெற்றோர்களிடையே அன்யோனத்தின் மூலம் நிலவும் பிணைப்பு, பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக, நற்பண்புகளுடன் வளர்க்க உதவுகிறது. கணவன்-மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து வாழும் சூழலில், அவர்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்கிறது.
"ஒருவனுக்கு ஒருத்தி" என்பது கணவன்-மனைவிக்கான கட்டுப்பாடு மட்டுமல்ல; அது சமுதாய முன்னேற்றத்திற்கான ஒரு பாதுகாப்பு அரண். நம் முன்னோர்கள் காட்டிய இந்த அறநெறியைப் பின்பற்றுவதே, தமிழினம் தொன்று தொட்டுப் பேணி வந்த ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தி, ஒரு வலிமையான சமுதாயத்தை மாற்றவதற்கு உதவும் ஒரே வழியாகும்.
9. பேரன், பேத்திகள் வரை தொடரும் சங்கிலி
ஒரு சிறந்த தம்பதி, வெறும் பிள்ளைகளை மட்டும் வளர்ப்பதில்லை; அவர்கள் "பெற்றோர்களை உருவாக்குகிறார்கள்". தாங்கள் வளர்த்த பிள்ளைகள், நாளை தாங்களாகவே சிறந்த பெற்றோர்களாக மாறி, பேரன்-பேத்திகளை உருவாக்கும் அளவுக்குத் தகுதியுள்ளவர்களாக வளர்க்கிறார்கள்.
இப்படி, ஒரு தம்பதியின் அன்யோன்யத்தில் தொடங்கும் காதல், பல தலைமுறைகளைக் கடந்து அந்த இனத்தின் ஆரோக்கியமான இருப்பைத் தொடரச் செய்கிறது. இ்ங்கு தான் “கல்வி” யின் முக்கியத்துவம் பூர்த்தியடைகிறது. இதில், இன்றைய கல்வியினை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் நிலைமை கேள்வி குறியே?

10. சமூக சங்கிலியின் உறுதி
சமூகத்தின் படிநிலை என்பது நல்ல பெற்றோர்கள் → நல்ல வீடு → நல்ல தெரு → நல்ல ஊர் → நல்ல மாவட்டம் → நல்ல மாநிலம் → நல்ல நாடு → நல்ல உலகம்.
இந்தச் சங்கிலியில் எந்தப் புள்ளியில் ஒரு தந்தை (ஆண்) அல்லது தாய் (பெண்) தன் ஆன்யோனத்திலிருந்தும் கடமையிலிருந்தும் தவறினாலும், அது ஒட்டுமொத்த சங்கிலியையும் பலவீனப்படுத்துகிறது அல்லது அறுந்துப்போகிறது. இவை அதிகாரம், பணம் மற்றும் புகழைத் துரத்துவதை விட்டுவிட்டு, மானுடத்தை நல்வழிப்படுத்தும் தகவல்களைப் பரப்புவதற்கே தகவல் பரிமாற்ற தளங்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக அறிந்து, புரிந்து செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்பு எப்படி ஒரு வேலைக்குத் தேவையோ, அதேபோல் "பெற்றோராக இருப்பதற்கு" அந்த முனைப்பு இன்னும் பன்மடங்கு தேவை. அரசன் முதல் ஆண்டி வரை, அனைவரும் பெற்றோர்கள் தான். அனைவரும் இந்த அறத்தைப் பின்பற்றினால், நாம் தேடும் "மகிழ்ச்சியான உலகம்" வேறெங்கும் இல்லை; அது நம் வீட்டிற்குள்ளேயே இருக்கிறது.
"கலியுகம்" என்பது காலம் அல்ல; அது விழிப்புணர்வு இல்லாத ஒரு மனநிலை. சாதனையாளர்களைப் பெற்றெடுப்பதும், சூரையாடுபவர்களைப் பெற்றெடுப்பதும் அந்த அன்யோனியத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் 'வளர்ப்பு முறை'யே ஆகும்.
மானுடம் தன் சுயநல மமதையைத் துறந்து, ஒவ்வொருவரும் இந்த உலகில் பெற்றெடுத்தன் நோக்கத்தை உணர்ந்து, இயற்கையோடு இயைந்து, அன்பையும் அறத்தையும் விதைத்து மகிழ்ச்சியுடன் வாழ வழியினை வகுக்கவேண்டும் என்பதே நம் முன்னோர்களின் எண்ணங்கள்.
மானுடம் உணர்ந்தால்... கலியுகம் மறையும்; அறம் மலரும்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
















