Ban NEET போராட்டம்: ``நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி" - இயக்குநர்...
தற்கொலை நல்லது | உளவன் 10
வெளியுலகுக்கு தெரியாமல் ரகசியமாக செயல்படும் அலுவலகம். காற்றும் வெளிச்சமுமில்லாத கூண்டு அது. மூச்சு முட்டச் செய்யும் அறை. கசகசப்பும் இறுக்கமும் அங்கு இயல்பு. இதனோடு தலைவர் மாண்டேகுவின் செயல்பாடுகளும் சேர்ந்து கொண்டன. அவரின் நடவடிக்கைகள், விடை தெரியாத விடுகதை போல மேலும் மேலும் நெஞ்சை பதைபதைக்கச் செய்தன.
அறை எண் 13-ல் துக்கம் கவிந்திருந்தது. லெஃப்டினண்ட் கமாண்டர் ஈவன் மாண்டேகு இறுதிக்கட்ட பரபரப்பில் இருந்தார். விமான விபத்தில் பலியாகப் போகிறார் பிரிட்டிஷ் கடற்படை மேஜர் வில்லியம் மார்ட்டின். மாண்டேகு விவரித்த திட்டம் Section 17M ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“கடற்படை மேஜர் கொல்லப்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வழியில்லையா கமாண்டர்?” அழாத குறையாக கேட்டார் ஓர் அதிகாரி.
“மேஜர் கொண்டு போகும் தகவலில் என்ன இருக்கும்?” எதிர்க் கேள்வி கேட்டார் மாண்டேகு.
“எதிரிகளை திசை திருப்பும் போலியான தகவல் இருக்கும்…”
“ஏன் அவர்களை திசை திருப்பணும்? ஏன் பொய்யான தகவலை எதிரிகளிடம் கசிய விடணும்?”
“போரில் நம்முடைய வீரர்களை காப்பத்தணும்ல…”

“அப்ப நம்ம கடற்படை மேஜரை சாக விட்டுருவோமா?” மாண்டேகு தூண்டிலை வீசினார். வெவ்வேறு வேலைகளில் மும்முரமாக இருந்த புலனாய்வு அதிகாரிகளும் மற்ற பணியாளர்களும் சடுதியில் மாண்டேகு மீது கவனம் குவித்தனர்.
“பிரிட்டன் கடற்படை மேஜர் ஒருவர் விமான விபத்தில் இறந்ததாக, ஏற்கனவே இறந்த உடலை ஸ்பெயின் கடல் பகுதியில் மிதக்க விட வேண்டும். இப்ப புரியுதா, நம்ம பிளான்…” கண்களைச் சிமிட்டி, மேஜையில் தாளமிட்டவர், தாளத்துக்கு ஏற்ப தலையை அசைத்தார்.
இந்த திட்டத்துக்கு Operation Mincemeat என பெயர். ஆப்பிள், உலர் பழங்கள், புளிப்புச் சாறு, மசாலா இவற்றோடு தேவைப்பட்டால் கொஞ்சம் இறைச்சி கலந்து செய்யப்படும் உணவே Mincemeat. முழுமையாக ஒருவரை தோற்கடிக்க, ஆங்கில மரபுத் தொடரில் Mincemeat என்ற சொல்லை பயன்படுத்துவதும் வழக்கம். நமக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் முழுமையான வெற்றி என்பதாக திட்டத்தின் பெயரை விவரித்தார் மாண்டேகு.
தந்தையின் கடிதம், காதல் கடிதம், காதலி ஃபோட்டோ, நிச்சயதார்த்த மோதிரம், கைப்பெட்டி… இந்த வரிசையில் அடுத்ததாக சடலத்தை ‘உருவாக்க’ வேண்டும். அதை உருவாக்க முடியாதல்லவா! இறந்த உடல் ஒன்றை ‘ஏற்பாடு’ செய்ய வேண்டும், புலனாய்வு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் முனகிக் கொண்டனர்: ‘இது மிகவும் கடினமான வேலை.’
“ஆண் சடலம். 36 வயது மதிக்கத்தக்கதாக இருக்கணும். ராணுவ வீரர் போல உயரம் இருக்க வேண்டும். இரண்டு கண்டிஷன். ஒன்று, இறந்த உடலுக்கு உறவினர் என யாரும் இருக்கக் கூடாது. இன்னொன்று அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்…”
“ஏன் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்?”
“காரணம் இருக்கு. சடலம் கிடைத்ததும் சொல்றேன்...” விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சடலத்திலேயே குறியாக இருந்தார் மாண்டேகு.

மருத்துவமனை சவக் கிடங்குகளுக்கு ஏறி இறங்கி அலைந்து தேடினர். விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலம் வேல்ஸ் பகுதி மருத்துவமனையில் கிடைத்தது. பெயர் கிளிண்டோர் மைக்கேல் (Glyndwr Michael). அவருடைய உடலைக் கேட்டு உறவினர்கள் யாரும் வரமாட்டார்கள். எலி மருந்தை உட்கொண்டு மாண்டவர். சடலத்தை லண்டனுக்கு கொண்டு வந்து, ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி கெட்டுப் போகாமல் பாதுக்காத்தனர்.
24 மணி நேரத்துக்குள் உடலைக் கையாள வேண்டும். மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார் மாண்டேகு. மேஜருக்கான கடற்படை சீருடை உடலுக்கு அணிவிக்கப்பட்டது. அடுத்ததாக அடையாள அட்டையை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த இடத்தில்தான், எனிக்மா குறியீடு தகவலில் நிபுணராக இருந்த மாண்டேகுவின் அறிவு பயன்பட்டது. பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் பெயர் பட்டியல் அப்வேர் கையில் இருப்பது மாண்டேகுவுக்கு தெரியும். A-யிலிருந்து L-வரையிலான முதலெழுத்தை பெயராகக் கொண்டவர்களின் பட்டியல் அப்வேரிடம் இருந்தது.
A முதல் L வரையிலான முதலெழுத்தைக் கொண்ட பெயரை சடலத்துக்கு வைத்தால் நம்பகத்தன்மை இருக்காது. எதிரிகள் ஏமாறும் வாய்ப்பு குறைவு. கவனமாக சிந்தித்த மாண்டேகு, சடலத்துக்கு வில்லியம் மார்ட்டின் என்ற பெயரைத் தேர்வு செய்தார். பிறந்த இடம், பிறந்த ஆண்டு, கடற்படையில் பொறுப்பு உள்ளிட்ட விவரங்களோடு நம்பும் வகையிலான துல்லியமான அடையாள அட்டையும் தயார். சில்லறைக் காசுகள், சிகரெட் பாக்கெட், சாவிக் கொத்து, ஒரு சிலுவை ஆகியவற்றையும் பெட்டியில் வைத்து, பேண்ட்டோடு சங்கிலியில் இணைத்தார்.
“விமான விபத்தில் இறந்த சடலத்தை உளவுப் பணிக்கு பயன்படுத்தலாம்.” சிந்தனை அளவில் இருந்த இந்த யோசனையை, கனகச்சிதமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர் மாண்டேகு. சவத்தை ஒரு கலைஞனைப் போல, கலையைப் போல கையாள உளவுப் பணி தந்த அனுபவம் மாண்டேகுவுக்கு கைகொடுத்தது.
அறை எண் 13 ஊழியர்கள் அவரைப் பாராட்டினர். அவரோ இறுதி வெற்றி வரை, அதாவது சடலம் அப்வேர் அதிகாரிகளிடம் கிடைக்கும் வரை அலட்டிக் கொள்ளாமல் காத்திருந்தார்.

கிளிண்டோர் மைக்கேல் என்ற வேல்ஸ் இளைஞர் இப்போது பிரிட்டிஷ் கடற்படை மேஜர் வில்லியம் மார்ட்டின். அனைத்தும் திருப்திகரமாக தயாரானதும் சடலத்தை ஸ்காட்லாந்து துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். ஏப்ரல் 19-ம் தேதி H.M.S. செராஃப் (Seraph) நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டது. ஓர் உடலைச் சுமந்து கொண்டு சென்ற அந்தக் கலத்துக்கு தெரியாது, வரலாற்றை மாற்றும் மனிதர் உள்ளே உறங்கி கொண்டிருக்கிறார் என்பது. இறந்து போன அந்த இளைஞருக்கும் தெரிந்திருக்காது, வரலாற்றை மாற்றுவதற்காக தற்கொலை செய்து கொண்டோம் என்பதும்.

1943-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி அதிகாலை. ஸ்பெயினின் வெல்பா (Huelva) கடற்கரை அருகே ஒரு மைல் தூரத்தில், சடலம் கடலில் விடப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பலை செலுத்திய லெஃப்டினண்ட் பில் ஜுவல் (Bill Jewell) இறைபக்தி மிகுந்தவர் போல. இறுதிச் சடங்கிற்கான பிரார்த்தனைகளை மொழிந்து சடலத்தை கண்ணியமாக வழியனுப்பி வைத்தார். சடலத்தின் அடையாளங்கள்தான் போலி. சடலம் ‘மெய்’தானே.
விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி ஒருவரின் உடல் வெல்பா கடற்கரையில் ஒதுங்கி இருப்பது, ஸ்பெயின் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தத் தகவல், ஜெர்மன் அப்வேர் அதிகாரிகளின் காதுகளுக்கும் எட்டியது. அவர்கள் கேட்டுக் கொண்டதால், உடல் அப்வேர் அதிகாரிகளிடம் ரகசியமாக ஒப்படைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி என்று தெரிந்ததும், சடலத்தை அவர்கள் சல்லடை போட்டுத் தேடினர். உடலோடு இணைக்கப்பட்டிருந்த பெட்டியில் கிடைத்த ரகசியம் ஹிட்லரின் காதுகளை எட்டியது. இதனை, எனிக்மா எந்திர தகவல் மூலம் உறுதிப்படுத்திய மாண்டேகு, பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இப்படியொரு தகவலை அனுப்பினார்: “மின்ஸ்மீட் முழுமையாக விழுங்கப்பட்டது (Mincemeat Swallowed Whole).”
“பாஸ் இப்பவாவது சொல்லுங்க… ஏன் சூசிட் பாடிய செலக்ட் பண்ணினோம்…?”
“வேறு ஏதேனும் நோய் ஏற்பட்டோ, அடிபட்டு காயமடைந்திருந்தாலோ பிரேதப் பரிசோதனையில் அது தெரிந்து விடும். எதிரிகளை நம்ப வைக்க முடியாது. அவர்கள் சுதாரித்துக் கொள்ளலாம். தூக்கு மாட்டிக் கொண்டோ வேறு வகையிலோ தற்கொலை செய்து கொண்டாலும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், விஷமருந்தி இறந்தால், நுரையீரலும் வயிற்றுப் பகுதியும் தண்ணீரில் மூழ்கி இறந்தது போல ஓரளவு தோற்றமளிக்கும். அதுலயும் பாஸ்பரஸ் உள்ள விஷத்தை தின்றால், ரத்தத்துல ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டு நுரையீரல் வீக்கம் ஏற்படும். அது நீரில் மூழ்கி இருந்தவர் போலவே தெரியும். இதையெல்லாம் தாண்டி அந்த விஷத்தை அவ்வளவு எளிதில் பிரேதப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது…”
அறை எண் 13-ல் இருந்த Section 17M ஊழியர்கள் வாய் பிளந்தனர்.
சிசிலி மீதான தாக்குதல் என்பது போலியான தகவல். திசைதிருப்பவே பொய்யான திட்டத்தை எதிரிகள் கசியவிட்டனர் என்பதை அறிந்து ஹிட்லர் ஆவேசமடைந்தார். தூக்கம் தொலைத்தார். கிரீஸில் படைகளைக் குவிக்க தளபதிகளை முடுக்கி விட்டார்.

வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மன் மற்றும் இத்தாலி துருப்புகள், கிரீஸை நோக்கி விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல, மேற்கு மத்தியதரைக் கடலையொட்டிய சார்டினியா பகுதியிலும் வீரர்கள் குவிக்கப்பட்டனர். தாக்குதலை எதிர்பார்த்து அதனை எதிர்கொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டுமென மே 12-ம் தேதி ஃபியூரர் ஹிட்லர் உத்தரவிட்டார்.
ஹிட்லரின் ஆளுகைக்குள் இருக்கும் ஐரோப்பிய பாதுகாப்பு அரணைத் தகர்க்க நேச நாட்டுப் படைகள் தேதி குறித்தன. 1943 ஜூலை 10-ம் தேதி ஏறக்குறைய ஒன்றரை லட்சம் படைகள் முதல் கட்டமாக சிசிலியை அரவணைத்தன. பதினான்காயிரம் வாகனங்கள், மூவாயிரம் கப்பல்கள் என பிரிட்டன், அமெரிக்க கூட்டுப் படைகள் ஹிட்லரின் கனவுகளில் குண்டை வீசின.
ஹிட்லர் - முசோலினியின் கூட்டுப் படைகளை வேறு எங்கோ திசை திருப்பி தூரத்தில் துரத்தியடித்த பின், களத்தில் எதிர்க்க எதிரிகளே இல்லை. பெரிய உயிர்ச் சேதமின்றி சிசிலித் தீவை விடுவித்து ஹிட்லரின் ஐரோப்பிய அரணைத் தகர்த்தன நேச நாட்டுப் படைகள். ஜூலை 25-ம் தேதி முசோலினி ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். வரலாறு திருத்தி எழுதப்பட்டது.
எலி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட வேல்ஸ் இளைஞர் கிளிண்டோர் மைக்கேல், என்ன பிரச்சினைக்காக உயிரை விட்டாரோ யாருக்கும் தெரியாது. ஆனால் ஆயிரக் கணக்கான வீரர்களின் உயிரைக் காப்பாற்றினார். வரலாறு இப்படித்தான் பதிவு செய்து வைத்துள்ளது. மேஜர் வில்லியம் மார்ட்டின் என்ற பெயரில் ஒரு மனிதன் உலகில் வாழ்ந்ததில்லை என்ற வினோதத்தையும்.
வெல்பா கல்லறையில் அந்த சடலம் புதைக்கப்பட்டபோது, மேஜர் வில்லியம் மார்ட்டின் என்ற பெயரில், Royal Marines அடையாள அட்டையிலிருந்த விவரங்கள் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டது. பின்னர், 1997-ம் ஆண்டு புதிய நினைவுக் கல் ஒன்று பதிக்கப்பட்டது. அதில் இப்படி பொறிக்கப்பட்டுள்ளது: Glyndwr Michael Served as Major William Martin RM.
சொல்லிக் கொள்ளும்படியான உறவினர்கள் யாரும் இல்லை. ஆனால் அன்பான தந்தை, அழகான காதலியோடு, தேசம் பெருமை கொள்ளும் பணி செய்ததாக கிளிண்டோர் மைக்கேல் புனைவாக்கப்பட்டார்.
சில நேரங்களில், உண்மையை விட ஒரு சிறிய கதை வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டதாக இருந்திருக்கிறது.
( தொடரும் )










