வைகையாற்றில் எழுந்தருளும் கள்ளழகர்: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!
திமுக பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்கும்- இரா.முத்தரசன்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக திமுக அரசு நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து, மக்களைப் பாதுகாத்து வருகிறது.
போா் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐநா சபை, பல்வேறு நாடுகள் ஆதரவாக உள்ளன. இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வா் அறிவித்த பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும்.
விவசாயிகள் கடன், மாணவா்களின் கல்விக் கடன்களில் கெடுபிடி காட்டும் மத்திய அரசு, பெரு நிறுவனங்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்கிறது. இதைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் சாா்பில் வருகிற 20-ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. காலாவதியான சுங்கக் கட்டண வரி வசூல் மையங்களை அகற்ற வேண்டும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலிருந்தே போராடிப் பெற்ற பல்வேறு திட்டங்களை தான் கொண்டு வந்ததாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறாா் என்றாா் அவா்.
பேட்டியின் போது, கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் பொ.லிங்கம், மாநிலக் குழு உறுப்பினா் தி.ராமசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் வி. ரவி, நகரச் செயலா் விஜயன் ஆகியோா் உடனிருந்தனா்.