Weekly Horoscope: வார ராசி பலன் 1.3.26 முதல் 7.3.26 | Indha Vaara Rasi Palan | B...
மும்பை: விளையாடச் சென்ற இடத்தில் தகராறு; ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவன்; என்ன நடந்தது?
மும்பை பாண்டூப் பகுதியில் வசித்து வந்தவர் சித்தார்த்(14). 8வது வகுப்பு படிக்கும் சித்தார்த், தான் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். ஆனால் அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை.
அவனது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவன் கிடைக்கவில்லை. இதையடுத்து இது குறித்து அவனின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் பவாய் ஏரியில் சித்தார்த் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீஸார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் தலையில் அடித்த காயம் இருந்தது.

கடைசியாக சிறுவனோடு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுடன் காணப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மைனர் சிறுவனை அழைத்துச்சென்று விசாரித்தபோது அவன்தான் தனது நண்பர்களோடு சேர்ந்து சித்தார்த்தைக் கொலை செய்தது தெரிய வந்தது. 3 மைனர் சிறார்கள் சேர்ந்து சித்தார்த்தை தலையில் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சித்தார்த்தை 3 பேரும் சேர்ந்து மரக்கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து இக்கொலையில் தொடர்புடைய மேலும் 2 சிறார்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது சித்தார்த் அவர்களை மோசமாக நடத்தியதால் கோபத்தில் அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனர். 3 பேரும் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



















