`பொதுச் செயலாளர் பதவியை அவருக்காக வைத்திருக்கிறோம்!’ - புதிய கட்சியைத் தொடங்கிய ...
திருச்சி மாவட்டம், கோபுரப்பட்டி ஸ்ரீஆதிநாயகபெருமாள்: இவரை தரிசித்தால் வாழ்வில் உணவுப் பஞ்சமே வராது!
புரட்டாசியில் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் பழைமையான பெருமாள் ஆலயங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி ஒரு தலம் தான் கோபுரப்பட்டி. திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் ஒன்றியம்-அழகிய மணவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் கோபுரபட்டி. இங்கே அழகுற அமைந்துள்ளது சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஆதிநாயகபெருமாள் கோயில். பாலசயனக் கோலத்தில் இங்கே சேவை சாதிக்கும் அழகு வேறு எங்கும் காணமுடியாத அதிசயம். வாருங்கள் இத்தல மகிமைகளைத் தெரிந்துகொள்வோம்.
`பழையகிடை’ என்ற பதம் திருவரங்கம் ரங்கநாதரைக் குறிக்கும் என்பார்கள். ஆகவே, இவ்வூர் பெருமாளை `புதுக்கிடை ஜலசயனப் பெருமாள்’ என்றும் ஶ்ரீஆதிநாயக பெருமாள்’ என்றும் அழைத்து வணங்குகிறார்கள். காவிரி, கொள்ளிடம் ஆகிய நதிகளுக்கு இடையே ஶ்ரீரங்கம் அமைந்துள்ளதைப் போல், இங்கு பெருவளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் ஆகியவற்றுக்கு இடையே ஆலயம் அமைந்துள்ளது.

கொய்சாள மன்னன் வீரவல்லாளன், `இலங்கை உலகன்’ என அறியப்பட்ட தோழப்பன் ஆகியோரால் திருப்பணிகள் கண்டுள்ளது இந்த ஆலயம் என்னும் செய்தி கல்வெட்டள் மூலம் தெரியவருகிறது.
அந்நிய படையெடுப்பின்போது ஶ்ரீரங்கம் கோயிலைக் காக்க ஆயிரக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போது அங்கு வசித்த 1000 குடும்பங்கள், கோபுரபட்டியைச் சுற்றியுள்ள பாச்சூர், கோவர்த்தனகுடி, திருவரங்கப்பட்டி, அழகிய மணவாளம் போன்ற கிராமங்களில் குடியேறினர். அந்தத் தருணத்தில் ஸ்ரீரங்கத்தில், மூலவரான திருவரங்கநாதர் முன் கல்திரை அமைத்து அவரைப் பாதுகாத்தார்களாம்.
48 வருடங்கள் நீண்டது அந்நியரின் ஆதிக்கம். அந்தக் காலகட்டத்தில் திருவரங்கம் பெருமாளுக்குப் பதிலாக, இந்த ஆதிநாயக பெருமாளே பக்தர்களுக்குச் சேவைசாதித்து வந்தாராம். திருவரங்கனை தரிசிக்க இயலாத பக்தர்கள், இங்கு வந்து இவரை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றார்களாம்.
ஶ்ரீரங்கம் பெரிய கோயிலுக்கு இந்தப் பகுதியில் நிறைய நிலங்கள் இருக்கின்றன. அந்த நிலங்களுக்கான குத்தகையாக இந்தப் பெருமாள் கோயிலில் விவசாயிகள் தானிய மூட்டைகளைக் கொண்டுவந்து வைத்து அளந்து கொடுப்பார்களாம். அதற்காக அதிகாரிகள் ஶ்ரீரங்கத்திலிருந்து மரக்காலோடு வருவார்கள்.

ஒருமுறை மரக்கால் கொண்டுவர மறந்து போனார்கள். குத்தகை நெல்லை அளக்க மரக் கால் இல்லாமல் தவித்துள்ளனர். அப்போது, பெருமாள் விவசாயி வடிவில் மரக்காலோடு வந்து உதவினார். நெல்லை அளந்து முடித்தபின், மரக்காலை கொடுத்த விவசாயியைத் தேடிய போது, அவர் அங்கு இல்லை.
அதனால், ‘விவசாயி வடிவில் வந்தது பெருமாள்தான்’ என்று உணர்ந்த விவசாயிகளும், அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இதையொட்டியே பெருமாள் இங்கே தலையில் மரக்காலை வைத்துப் படுத்திருக்கிறார் என்பது ஐதிகம். மரக்காலோடு அருளும் இந்தப் பெருமாளை தரிசனம் செய்தால் வாழ்வில் உணவுப் பஞ்சமே வராது என்பார்கள்.
அற்புதமான இந்த ஆலயம், காலப்போக்கில் சிதிலமுற்றுப் போனது. ஆதிசேஷன் 3 பாகங்களாக உடைந்துபோனதால், பெருமாள் கட்டாந்தரையில் சயனித்திருந்தார். அப்போது ஒருகால பூஜை மட்டுமே நடந்தது. இந்த நிலையில் பக்தர்கள் முயற்சியில் திருப்பணிகள் நடைபெற்று, 2010 - ல் குடமுழுக்குச் செய்யப்பட்டது. அதன்பிறகு, கோயிலில் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இங்கே பெருமாள் பாலசயனமாகத் திகழ்வதால், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். மட்டுமன்றி, திருமண வரம் அருளும் தெய்வமாகவும் திகழ்கிறார், ஆதிநாயகபெருமாள் என்கிறார்கள்.
கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கே தும்பிக்கை ஆழ்வார், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் ஆகியோரையும் தரிசிக்கலாம். சூரியன், தன் மனைவி உஷாதேவியோடு வீற்றிருக்கிறார். இவரின் சிலை மிகப்பழைமையானது. ஆதிநாயகித் தாயார், நான்குத் திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் தனிச் வீற்றிருக்கிறார். ஸ்தல விருட்சம் - பன்னீர் மரம். தீர்த்தக்கிணறும் உள்ளது. இந்தக் கிணற்றடியில் நாக விக்கிரகம் இருக்கிறது.

கோயில் யாகசாலையில் தசாவதாரச் சிற்பங்கள் சுதை வடிவில் திகழ்கின்றன. இங்கே வரதராஜ பெருமாளையும் தரிசிக்கலாம். அதேபோல், ராமாநுஜர், மணவாள மாமுனிகள், நம்மாழ்வார் ஆகியோரும் அமர்ந்த கோலத்தில் கற்சிற்பங்களாக தரிசனம் தருகின்றனர்.
இங்குள்ள யாகசாலையில் கல்வி, வேலை வாய்ப்புக்காகவும், செல்வம் பெருகவும், பிணிப் பாதிப்புகளும் குடும்ப கஷ்டங்களும் நீங்கவும் பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெறுகின்றன. பக்தர்கள் அவற்றில் கலந்து கொள்ளலாம்.
புரட்டாசிச் சனிக்கிழமைகளில் பெருமாளுக்குத் திருமஞ்சனமும், மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். மாலையில் பெருமாள் வீதியுலா வருவார். சுவாதி அன்று நரசிம்மர், சக்ரத்தாழ்வாருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். புத்திரப் பாக்கியம் கிடைக்கும். சித்திரை முழுநிலவின் போது சத்தியநாராயணா பூஜை செய்யப்படுகிறது.
இங்கே தாயார் ஆதிநாயகி என்கிற திருநாமத்தோடு சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்குத் திருமஞ்சனமும், சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன. இதில் கலந்துகொண்டு வழிபட்டால், வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கல்யாண வரம் வேண்டிக்கொண்டு, பிரார்த்தனை பலித்த பக்தர்கள், தாயாருக்குத் திருக்கல்யாணம் செய்து வழிபடுகின்றனர்.
துலாபாரம் காணிக்கை செலுத்து வது இக்கோயிலின் சிறப்பம்சம். பழைமையான கோயில் இது. பழம்பெருமைகளுக்குச் சான்றாகத் திகழும் ஆலயம். இங்கு வந்து வழிபட்டால், இழந்த குடும்பப் பெருமை, புகழ், செல்வாக்கு, பதவியை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை.



















