மத்திய கிழக்கில் மீண்டுமொரு பதற்றம்: சவூதி அரேபியாவை தாக்கும் ஹூதி; 73 பேர் உயிர...
திருடுவதே தொழில்; மனைவிக்கும் கைவரிசையைக் கற்றுக்கொடுத்த கணவன் - போலீஸில் சிக்கிய பின்னணி!
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். பின்னர், இருவரும் அன்று இரவு திரும்பியபோது, தங்கள் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயினர். விரைவாக வீட்டுக்குள் சென்று பார்வையிட்டபோது, அறைகளில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 36 பவுன் தங்க நகைகளும் திருடுபோனது தெரியவந்தது.
இதையடுத்து, காட்பாடி காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். உடனே விசாரணையில் இறங்கிய போலீஸாரும் சம்பவ பகுதிகளைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுக்குஉட்படுத்தினர். அதில் தெரியவந்த சந்தேகத்திற்கிடமான நபர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான் ஆந்திர மாநில எல்லையோரமுள்ள `டெல்’ பகுதியில் காரில் இளம்பெண்ணுடன் சுற்றிவந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துவேல் கார்த்திக் என்பதும், உடன் இருந்த பெண் அவரின் மனைவி பிரபாவதி என்பதும் தெரியவந்தது.
ஓய்வுபெற்ற ஆசிரியையின் வீட்டில் கைவரிசை காட்டியதையும் முத்துவேல் கார்த்திக் ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளும், கொள்ளை வழக்குகளும் இருப்பதும், தொடர் குற்றச் செயல்கள் காரணமாக `சரித்திர பதிவேடு குற்றவாளி’யாகவும் போலீஸாரால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறார் எனவும் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, `உள்ளூரில் திருட முடியாது’ என்பதால் வடமாவட்ட பகுதிகளில் வீடுகளை நோட்டமிட்டு திருட மனைவியையும் உடன் அழைத்து வந்திருக்கிறார் முத்துவேல் கார்த்திக். வீடு வாடகைக்கு எடுத்து தங்கும்போது, தன்னை `ஐ.டி ஊழியர்’ என்றே முத்துவேல் கார்த்திக் பில்டப் கொடுத்து வந்திருக்கிறார். தற்போது, வேலூர் மாவட்டத்துக்கு அருகேயுள்ள ஆந்திர மாநிலம் சித்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் தங்கியிருந்த முத்துவேல் கார்த்திக், அங்கிருந்து அடிக்கடி காட்பாடி, வேலூர் பகுதிக்கு வந்து வீடுகளை நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாக்கியிருந்தார்.
திருடும் நகைகளை அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளிலுள்ள நகைக் கடைகளில் ஜோடியாகச் சென்று அடகு வைப்பது அல்லது விற்றுவிட்டு புதிய நகைகளாக வாங்குவது என சொகுசாக இருந்திருக்கின்றனர். அப்படி வாங்கும் புதிய நகைகளை மனைவிக்கு அணிவித்து அழகுப் பார்த்திருக்கிறார் முத்துவேல் கார்த்திக்.

கணவரின் எல்லாத் திருட்டுக்கும் மனைவி பிரபாவதியும் உடந்தையாக இருந்துவந்திருக்கிறார். சமீபத்தில், ஆசிரியையின் வீட்டில் திருடிய நகைகளையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கார் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்கள். அந்த காரில் மனைவி, பிள்ளைகளையும் அழைத்துச் சென்று மேலும் சில வீடுகளையும் நோட்டமிட்டு கைவரிசைக் காட்டத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
ஆசிரியையின் வீட்டில் திருடிய பின்னர் புதிய காரில் காட்பாடியிலுள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதிக்கும் வந்து டாஸ்மாக் கடையில் பீர் வாங்கிக் குடித்துவிட்டு, `வேறு எங்குத் திருடலாம்’ என்றும் நோட்டமிட்டுச் சென்றிருக்கிறார் முத்துவேல் கார்த்திக். இதையடுத்து, முத்துவேல் கார்த்திக்கிடம் இருந்து சுமார் 26 பவுன் நகைகளையும், புதிய காரையும் பறிமுதல் செய்த போலீஸார், இவரையும், திருட்டுக்கு உடந்தையாக இருந்த மனைவி பிரபாவதியையும் கைது செய்து இன்று நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்திருக்கின்றனர். மேலும், இவர்களின் 10 வயதுக்குஉட்பட்ட இரு பிள்ளைகளையும் மீட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கவும் போலீஸார் அனுப்பி வைத்தனர்.


















