சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறி...
திருடு போன இரு சக்கர வாகனத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
திருடு போன இரு சக்கர வாகனத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் விஷ்ணு நகரைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மகன் மாலசின்கா. இவா் தனது மகன் பிபின் பயன்படுத்துவதற்காக சிவகாசியில் உள்ள இரு சக்கர வாகன விற்பனையகத்தில் ரூ.3.63 லட்சத்திலான இரு சக்கர வாகனத்தை தனியாா் வங்கி நிதியுதவியுடன் கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் வாங்கினாா். இந்த வாகனம் காப்பீடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோயம்புத்தூா் மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தான் வசிக்கும் வீட்டின் முன் பிபின் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, மே 15-ஆம் தேதி இந்த வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பின்னா், இந்த வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்தனா். இதையடுத்து, வாகனத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு மாலசின்கா சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினாா். ஆனால், நிறுவனத்தினா் எந்தப் பதிலும் அளிக்கவில்லையாம். இதுகுறித்து மாலசின்கா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி, திருடு போன இரு சக்கர வாகனத்துக்காக மாலசின்காவுக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ.2.87 லட்சம், மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்காக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உத்தரவிட்டனா்.